Search
bigg-boss-3-day-66

பிக் பாஸ் 3: நாள் 66 | பிக் பாஸ் – சர்வம் நாடகமயம்

bigg-boss-3-day-66

காக்கிச்சட்டை பாடலுடன் தொடங்கியது நாள். கிராமத்து எஃபெக்ட்டாம். என்னவோ ஆடிக் கொண்டிருந்தனர்.

காலையிலேயே கவின் தன் வேலையை ஆரம்பித்திருந்தான். லாஸிடம், ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, தனக்கு இன்னொரு ரிலேஷன் ஷிப் இருந்தது, அது ப்ரேக் ஆகிவிட்டது எனச் சொன்னதை கேட்டு லாஸ் முகத்தில் ஈயாடவில்லை. அது ரொம்ப சீரியஸ் & காம்ப்ளிகேட்டட் என சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார். அதே சீரியஸ் முகத்தோடு கேட்டுக் கொண்டார் லாஸ்.

‘எதுவாக இருந்தாலும் வெளியே போய் பேசிக்கலாம்’ என லாஸ் சொல்ல, கவின் முகத்தில் 1000 வாட்ஸ் பிரகாசம்.

சரி இப்ப எதற்கு இதைச் சொல்லவேண்டும்? ஒருவேளை இப்பத்தான் ஞாபகம் வந்திருக்குமோ? சாக்ஷியிடம் கல்யாணம் வரைக்கும் பேசிய பொழுதும் இதைச் சொல்லவில்லை. லாஸிடம் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தே கிட்டத்தட்ட 3 வாரம் ஆகிவிட்டது. இப்ப வந்து, அதுவும் ஒரு டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் போது, இதைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

நேத்து லாஸிடம் பேசினதுக்கு அப்புறம் இரவு வரைக்கும் டாஸ்க் தான் நடந்தது. இவங்க பேசிக் கொள்வதற்கு நேரமும் கிடைக்கவில்லை. இது தெரிந்து சொல்லியிருப்பாரோ? ஏனெனில் லாஸ் யோசிக்க நிறைய நேரம் கிடைக்கும். அதற்குள் இந்த விஷயத்தால் உருவான கொதிப்பு அடங்கிவிடும். ‘அப்புறம் நாம பேசிக்கலாம்’ என நினைத்துப் பேசியிருக்கலாம். நாளைக்கு இது பற்றி ஒரு பேச்சு வந்தாலும், ‘நான் அன்னிக்கே உங்கிட்ட சொன்னேன் இல்ல’ என முடித்து விடலாம்.

மதியம் வரைக்கும் சும்மாவே தான் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதற்கப்புறம் தான் நாட்டுப்புறக் கலைகள் பிரிவில் தெருக்கூத்து கலைஞர்கள் வந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 40 வருடமாகத் தெருக்கூத்து ஆடும் கலைஞர் திரு.ராமலிங்கம் அவர்களும், அவரது குழுவினரும் வந்திருந்தனர். ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கேரக்டர்க்கு ட்ரெயினிங் கொடுத்தனர்.

பயிற்சிலேயே அசத்தினது தர்ஷன், முகின், சாண்டி தான். அடுத்து இரண்டு அணியாகப் பிரிந்து ஒரு கான்செப்ட்டில் இவங்க பெர்ஃபார்ம் செய்யவேண்டும். சேரன், தர்ஷன், ஷெரின், கவின் ஒரு அணி. சாண்டி, முகின், வனிதா, லாஸ் ஒரு அணி.

இரண்டு அணிகளின் கான்செப்ட் ஆக்டிங்குமே நன்றாக இருந்தது. டான்ஸ் ஆடும் போது முகத்தில் கொஞ்சம் ஆட்டிட்யுட் காட்டவேண்டுமெ எனச் சொல்வார்கள். முகினுக்கு அந்த ஆட்டிட்யுட் ரொம்ப நன்றாக வருகின்றது. முகத்தில் ஒரு சிரிப்பு எப்பவும் இருக்கு.

எந்த விஷயமாக இருந்தாலும் 200% உழைப்பைக் கொடுப்பது தர்ஷன் தான். பயிற்சி எடுக்கும் போதே வெறித்தனம் தெரிந்தது.

சேரனின் வயதுக்கு இதை உள்வாங்கிக் கொண்டு, உடம்பு ஒத்துழைத்து செய்வது பெரிய விஷயம். அவரோட வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அவரோட நடிப்பும் முயற்சியும் பாராட்டுக்குரியது தான்.

சேரன் டீம் கான்செப்டில் கவினோட பங்கு நிறைய இருக்கும் என தான் நினைக்கிறேன். காமெடி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. இவங்க பெர்ஃபாமன்ஸ் செய்வதை, அந்தக் கலைஞர்கள் கன்ஃபெஷன் அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். வெகுவாகப் பாராட்டினார்கள்.

அடுத்ததாக ஒப்போ மொபைல் வழங்கிய விளம்பர டாஸ்க். 3 டீமாகப் பிரிந்து, ஃபோட்டோ மூலமா கதை சொல்லவேண்டும். சேரன் + முகின் டீம் தான் வென்றனர். வெறும் ஃபோட்டோஸை வைத்து சேரன் ஒரு அட்டகாச கதை சொல்லி எல்லோரையும் அசரடித்தார். ‘டைரக்டர்ஸ் டச்’ என வனிதா பாராட்டும் போது கைகளை மேலே தூக்கித் தன்னோட மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சேரன். இது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் இந்த வெற்றி, இந்தப் பாராட்டு கூட அவருக்கு இவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றால், அவர் வெற்றிக்காக எவ்வளவு நாள் ஏங்கி இருக்கவேண்டும்?

கவின்+ஷெரின் எடுத்த ஒரு ஃபோட்டோ அட்டகாசமா இருந்தது.

3 மணிக்கு ஆரம்பித்து நைட் 12 மணிக்கு தான் டாஸ்க் முடிந்தது. அவ்வளவு நேரம் எனர்ஜியோட இருந்த ஹவுஸ்மேட்ஸ்க்குப் பாராட்டுகள். 2 மணிக்கு சாண்டி மட்டும் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். என்னவென்று தான் புரியவில்லை.

மகாதேவன் CM