Search
bigg-boss-day-70

பிக் பாஸ் 3: நாள் 70 | பார்வையாளர்களின் கேள்விகள்

bigg-boss-day-70

காலர் ஆஃப் தி வீக்: “லாஸ்லியா – நீங்க சேரனை அப்பானு கூப்பிடுறீங்க, அவரும் உங்க மேல பாசமா இருக்காரு. ஆனா கவின் அதை ட்ராமான்னு சொல்லும் போது உங்களுக்கு ஏன் கோவமே வரல?”

இந்தக் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதிலைச் சொன்னார் லாஸ். ‘நாங்க இங்க 24 மணி நேரம் இருக்கோம். நீங்க ஒரு மணி நேரம் தான் பார்க்கிறீங்க. எனக்காகச் சாப்பிட வெயிட் பண்றதா சொல்றாரு, ஆனா நேத்து சாப்பாடு வந்த உடனே சாப்பிட போய்ட்டாரு. டாஸ்க்ல என் மேல புகார் சொல்றாரு. அதனால இதெலாம் உண்மையான்னு எனக்குத் தெரில, நான் ஒரு கன்ஃப்யூசன்ல இருக்கேன். இதிலிருந்து நான் வெளிய வரணும். நான் நானா தான் இருக்கேன். இது தான் பதில்’ என கண்ணைக் கசக்கினார்.

‘அதுக்கு இது பதில் இல்லையே!’ என்று தோன்றினாலும், கவினோடு தொடர்ந்து பேசிப் பேசி, அவரோட வாத திறமையும், நீட்டி முழக்கி விளக்கம் சொல்லும் கலையும், லாஸுக்கும் வந்துவிட்டது.

அப்பா – மகள் உறவு கொண்டாடுவதில் கண்டிப்பாக சேரன் வருத்தப்படுவார் என நான் முன்பே எழுதியுள்ளேன். அது இப்பொழுது நடக்க ஆரம்பித்திருக்கு. உண்மையில் காலர் கேட்டது, லாஸ் – சேரன் இரண்டு பேரும் ஓர் இடைவெளிக்கு அப்புறம் சேர்ந்து பேசி அழததைப் பற்றித்தான் கேட்டார். அப்ப தான் கவின் அதை ட்ராமா எனச் சொன்னார். நாமே அந்தக் கேள்வியை சுலபமாக தொடர்புப்படுத்திக் கொள்ளும்போது, கண்டிப்பாக லாஸ்க்கு எதைப் பற்றிக் கேட்கப்பட்டதென நன்றாகவே தெரியும். ஆனால் அந்தக் கேள்விக்கு நேற்று நடந்ததை வைத்து பதில் சொல்லி மழுப்பிவிட்டார் லாஸ்.

சரி, லாஸ் சொல்வது மாதிரி இந்த உறவு உண்மையா பொய்யா எனத் தெரியவில்லை என்றால், அதைப் பற்றி யாரிடம் பேசவேண்டும்? நேரடியாக சேரனிடமே பேசியிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, நாமினேசன் செய்யும் போதும், கமல் கேட்கும் போதும் மட்டும் இந்தத் சந்தேகத்தைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்காங்க என்றால், லாஸைப் பொறுத்தவரைக்கும் இந்த உறவில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. இதைப் பொய் என உறுதியாக நம்புகிறார். அதனால தான் இந்த சந்தேகமே! ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கு இதிலிருந்து வெளியே வரவேண்டுமென்று உள்ளது.

கவினிடம் நாள்கணக்காக உட்கார்ந்து பேச நேரம் இருக்கு. ஆனால் சேரனைப் பற்றி கேள்வி வந்தால் மட்டும், தானே குழப்பத்தில் இருக்கிறதாகவும், அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்வதாகவும் சீன் போட வேண்டியது. சேரனின் பாசம் உண்மையா, பொய்யா என சந்தேகப்படற லாஸ்க்கு, கவினின் காதல் உண்மையா, பொய்யாஎன சந்தேகமே இல்லை.

இன்னொரு கோணத்தில் இருந்து யோசித்தால் இது எல்லாமே நாமினேஷனுக்குப் போட்ட ஸ்கெட்ச்சாகக் கூட இருக்கலாம். இது முழுக்க முழுக்க என்னோட யூகம் மட்டுமே. இந்த வாரம், சேரனே கடைசியில் சொன்ன மாதிரி, எல்லோரும் சேரன் பேரை தான் சொல்லப் போறாங்க. காரணம் லாஸ் விஷயமாத்தான் இருக்கும்.

இந்த விஷயத்தில் சேரனின் ரியாக்ஷனும் அதீதம். ‘நான் கோபமா இருக்கேன்; நான் வருத்தமா இருக்கேன்’ என எல்லோருக்கும் தெரிகின்ற மாதிரி நடந்து கொண்ட விதம் சிறுபிள்ளைத்தனமானது. கொடுக்கப்பட்ட வார்த்தைகளை வைத்து அழகாகக் கதை சொல்லிவிட்டு நகர்ந்து போயிருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் நடந்துகொண்டு கமலிடம் குட்டு வாங்கினார். வீட்டோட சூழ்நிலையையும் இறுக்கமாக்கி விட்டுவிட்டார். இதற்கும் மேல் லாஸ் கூடப் பேசுவதோ, அவரிடம் உறவைப் புதுப்பிக்க நினைக்கறதோ, அவருக்கு இன்னும் பிரச்சினையையும், அசிங்கத்தையும் தான் கொண்டு வந்து சேர்க்கும். அதைப் புரிந்து நடந்து கொண்டால் தப்பிக்கலாம்.

தான் சொன்ன ஒரு வார்த்தை இவ்வளவு நாள் கழித்து இப்படி ஒரு கேள்வியாக வந்தது கவினுக்கு அதிர்ச்சி தான். ஆனால், தான் சொன்னதை இன்னும் நியாயப்படுத்திக் கொண்டு தான் இருக்கார். ‘சேரன், தன் பொண்ணுன்னு சொல்றாரு. ஆனா கேம்ல விட்டு கொடுக்க மாட்டேங்கறாரு! என அதே குற்றச்சாட்டு தான். இதற்கு சேரன் ஏற்கெனவே பல தடவை விளக்கம் கொடுத்துவிட்டார். போன வாரம், ‘தனித்தன்மையோட இருங்க’ என கமல் சொன்னவுடனே அடுத்த நாளே, ‘நான் கேம் விளையாடப் போறேன், நான் கேம் விளையாடப் போறேன்’ எனக் கிளம்பி, கமல் சொன்னதையே கலாய்த்துக் கொண்டிருந்தார். இந்த வாரம் விட்டுக் கொடுக்கிறதைப் பற்றிப் பேசி, ‘நேர்மையா இருக்கீங்க’ என கமல் வாயால் சொல்ல வைத்தாயிற்று.

கவின் ஆரம்பத்தில் இருந்தே நண்பர்களுக்காக விட்டுக் கொடுக்கிறேன் எனப் பேசிக் கொண்டிருக்கிறார். அதே மாதிரி தான் சேரனும், ‘பொண்ணுன்னாலும் போட்டில விட்டுக் கொடுக்க மாட்டேன்’ எனச் சொல்லிக் கொண்டு தான் இருக்கார். கவின் முடிவு சரியென்றால், சேரன் முடிவு மட்டும் எப்படித் தப்பாகும்? அதுவுமில்லாமல் சேரன் முதலில் இருந்தே இதே ஸ்டாண்டில் தான் இருக்கார். ஒருவேளை தன் முடிவில் இருந்து மாறிருந்தால், அவர் செய்வது ட்ராமா எனச் சொல்லலாம்.

தன் நண்பர்களுக்காகச் சேரனைப் போட்டியில் இருந்து வெளியேற்ற, கவின் செய்யும் ட்ராமாவாகக் கூடப் பார்க்கலாம். எமோஷனலாக அவரைக் கார்னர் பண்ணி, ‘கேம்ல விட்டு கொடுக்க மனசில்லை, அப்புறம் எப்படி அவர் பாசம் மட்டும் உண்மையா இருக்கும்?’ என்கிற கேள்வி பலருக்கும் நியாயமானதாகக் கூட இருக்கும். இப்போ லாஸ்க்கு இருக்கற மாதிரி. லாஸிடம் இந்தக் கேள்வியை ஏற்கெனவே கேட்டதும் கவின் தான். இந்தப் பிரச்சினை யாரையும் காயப்படுத்தாமல் முடிய வாய்ப்பு இல்லை என்று தான் தோன்றுகிறது.

சேரன் நடந்துகொண்டது லாஸைக் குற்றவுணர்ச்சிக்குத் தள்ளியது போதாதென, கவினும் சீன் போட்டு, லாஸை மேலும் தர்ம சங்கடத்தில் தள்ளுவது நல்லதில்லை. கமல் சொன்ன மாதிரி லாஸுக்கு இது கடுமையான மன அழுத்தத்தைக் கொடுக்கும். இரண்டு பேரும் புரிந்து நடந்து கொண்டால் சரி.

‘வெளியே போனதுக்கு அப்புறம் எல்லோரும் அவங்கவங்க வேலையைப் பார்த்துக் கொண்டு போகப் போகிறார்கள். இதில் எதற்கு எங்க வாழ்க்கையில் குறுக்க வர்றாங்க?’ என கவின் கேட்கிறார். கவின் – லாஸ் இருவரையும் கூப்பிட்டு அட்வைஸ் கொடுத்து விட்டு இப்ப வரைக்கும் ஒதுங்கி நிற்கிறார் சேரன். அவங்க செய்வது தப்பு என எந்த இடத்திலும் சொல்லவே இல்லை. இது அவங்க தனிப்பட்ட முடிவு தான் என அவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் சேரன் தங்களைப் பிரிக்கப் பார்க்கறாரு என கவின் பேச ஆரம்பித்துள்ளார். இதை இன்று முதல் ஒவ்வொருவராகப் பேசுவார்கள் பாருங்கள். சேரன் பேரு நாமினேஷனில் வருவதற்கு இதுவே ஒரு காரணமாக இருக்கலாம்.

கமல் எபிசோட். ஆடியன்ஸ் கேள்விகள்.

ஷெரின் – உங்க கேமை எப்போ விளையாடப் போறிங்க?

சேரன் – வெளியே வந்த பின் உங்க சினிமா கேரியர் எப்படி இருக்கும்?

வனிதா – தர்ஷன் தான் உங்களுக்கு ஈசி டார்கெட்டா?

தர்ஷன் – உங்களை ஹீரோவாகப் பார்க்கிறோம்? உங்களுக்கு அந்தத் தகுதியுண்டா?

சாண்டி 1 – லாஸுடனான உறவிலிருந்து கவினை விலகிப் போவெனச் சொல்றீங்களே! ஏன்?

சாண்டி 2 – நீங்க மத்தவங்களைக் கலாய்ச்சா அது ஜாலி. மத்தவங்க உங்களைக் கலாய்ச்சா அது டார்கெட் பண்றாங்கன்னு அர்த்தமா?

வனிதா – கொசுவை ஈசியா அடிச்சுட்டீங்க. யானைங்க சுத்திட்டிருக்கு. ஏன் அடிக்க மாட்டேங்கிறீங்க?

முகின் – எங்க செட்டில் ஆவீங்க? மலேஷியாவா? தமிழ்நாடா?

கவின் – வெளியே போய் பேசறதுன்னா என்ன?

தர்ஷன் – நண்பர்கள் கிட்ட எப்போ கேள்வி கேட்கப் போறீங்க?

கவின் – கேமை எப்படி விளையாடப் போறீங்க?

லாஸ் – லவ்வைத் தவிர வேற என்ன கேட்கிறது?

இப்படி பலதரப்பட்ட கேள்விகள். கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருந்தது.

வார்த்தைகளைச் சேர்த்து கதை சொல்லவேண்டும். சின்ன டாஸ்க். எல்லோரும் கதைகள் சொன்னார்கள். இதிலேயும் லாஸ் உளறிவிட்டார். ஷெரினுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்துவிட்டனர்.

கடைசியாக, நாமினேஷன் இல்லை எனச் சொன்னார் கமல். கமல் போனதுக்கு அப்புறம் எல்லோரும் அணி அணியாகப் பேசிக் கொண்டிருந்தனர். வனிதா-சேரன், ஷெரின் – கவின், லாஸ் – தர்ஷன். நாளைக்கு நாமினேஷனும் இருக்கிறதால் நிலைமை இன்னும் சிக்கலாகும். இந்த வாரம் தன் பேர் வருவது உறுதி என சேரனுக்கும் தெரியும். வனிதா பேரைச் சொல்ல முடியாத போது யார் அந்த பலியாடு எனத் தெரிவ்து கொள்ள ஆர்வமாக இருக்கு.

– மகாதேவன் CM