Search

பிக் பாஸ் 3: நாள் 72 | மூவர் வருகையால் இனி ஷோ டைம்தான்

bigg-boss-3-day-72

நேற்றைய நாள் தொடர்ந்தது. ‘ஏற்கெனவே வெற்றியைப் பார்த்தவர்கள் வெல்லக்கூடாதுன்னா எதுக்கு எங்களைக் கூட்டிட்டு வந்தீங்க’ எனக் கேட்ட வனிதா, ‘இதுக்கு விளக்கம் கொடுத்தா தான் நான் இனிமே விளையாடுவேன்’ எனச் சொல்லிவிட்டு மைக்கைக் கழட்டி வைத்துவிட்டார். சேரனும் ஷெரினும் வனிதாவோடு தான் இருந்தனர்.

‘வெல்ல தகுதியான ஆள் நான் எனச் சொல்லி என்னையே நாமினேட் செய்யறதை என்னால புரிஞ்சுக்க முடில’ என ஷெரினும் சொன்னார். கொதிநிலைலேயே இருந்த வனிதா இறங்கி வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

பாய்ஸ் அணி வெளியே வந்ததுக்கு அப்புறம் தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார் கவின். தர்ஷன் கஷ்டபட்ருக்கான் யாரும் இல்லையென மறுக்கவில்லை. ஆனால் அது ஒரு தகுதி கிடையாது. இதே தர்ஷன் ஒரு தடகள விளையாட்டு வீரராக இருக்காரென வைத்துக் கொள்வோம். அப்பொழுது 100 மீட்டர் ரேஸ் ஓடும் போது, இவர் கஷ்டபட்டிருக்கார் என கிரேஸ் டைம் கொடுப்பாங்களா? இல்ல கூட ஓடுகிறவர்கள் எல்லாம் மெதுவாக ஓடப் போகிறார்களா? இல்லை ஏற்கெனவே மெடல் வாங்கினவரிடம் போய், ‘நீ தான் ஏற்கனவே மெடல் வாங்கிட்ட இல்ல, இந்த தடவ அவன் வாங்கட்டும்’ எனச் சொன்னால் விட்டுவிடுவார்களா? கண்டிப்பாகக் கிடையாது. கவின் பேசுவதில் கொஞ்சம் கூட லாஜிக்கே கிடையாது.

வெளியே வந்த ஷெரின், கவினிடம் நேரிடையாக தன் கேள்வியைக் கேட்டார். ‘உனக்குப் பிரச்சினை வந்த போதெல்லாம் உன் கூட இருந்தது நான் தான். அவங்க நாலு பேர் தான் உன் ப்ரெண்ட்னா அப்ப நான் யாரு? ஏன் சாண்டி இருக்கான், தர்ஷன் இருக்கான். அவங்க பேரைச் சொல்லிருக்கலாமே?’ எனப் பொங்கித் தீர்த்துவிட்டார். அப்பவும் அதே கதையை தான் திரும்பத் திரும்பப் பேசினார் கவின். சாண்டியையும் தர்ஷனையும் நாமினேட் செய்ய முடியாதாம். அதனால் ஷெரின் பேரைச் சொல்லியிருக்கிறாக்காராம். ஏனென்று கேட்டால், அவர்கள் இவர் ப்ரெண்டாம். ஷெரின் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், ‘நீ டஃப் கண்டஸ்டண்ட். அதனால தான் நான் நாமினேட் பண்ணினேன்’ எனச் சொல்ல, ‘இந்த ரீசனை அங்க சொல்லு, நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன்’ என ஷெரின் கெத்தாகச் சொன்னார். ‘அது தான் என்னால் முடியாது மச்சான்’ என மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார். வொர்ஸ்ட்ய்யா கவின்னு.!

இங்கே ஆரம்பத்தில் இருந்தே பக்காவாக கேம் விளையாடிக் கொண்டிருக்கிற ஒரு சிலரில் கவினும் ஒருத்தர். இளம்பெண்களோட காதலா/ நட்பா எனத் தெரியாத அளவுக்கு நெருங்கிப் பழகும்போது, ஆட்டோமேட்டிக்கா தன் மேல் ஃபோகஸ் வரும் என கவினுக்கு நன்றாகவே தெரிந்திருக்கு. அதற்கேற்ற மாதிரி முதலில் சாக்‌ஷி கூடப் பழக ஆரம்பித்தார். அந்த வாரங்களைப் பார்த்தோம் என்றால், மொத்த ஃபோகஸும் இவங்க இரண்டு பேர் மேல் தான் இருந்தது. மற்றவர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம். அந்த நேரத்தில் தான் லாஸ்க்குக் கிடைக்கின்ற பார்வையாளர் ரெஸ்பான்ஸும், க்ளாப்ஸும் அவரை யோசிக்க வைக்கிறது. சாக்‌ஷியை விட லாஸ்க்கு தான் வெளியே சப்போர்ட் ஜாஸ்தி எனப் பட்டவர்த்தனமாகத் தெரிந்தவுடனே, லாஸ் கூடவும் நெருங்கிப் பழகுகிறார். சாக்‌ஷியுடன் பிரச்சினை வருகிறது. அப்பவும் கவின் லைம்லைட்டில் தான் இருக்கார். ஒரு மொக்கையான காரணம் சொல்லி சாக்‌ஷியைக் கழட்டி விடுகின்றவர், லாஸை மொத்தமாக தன் கன்ட்ரோலுக்குக் கொண்டு வருகிறார்.

அதே சமயத்தில் சாண்டி கூட கூட்டணி உருவாகிறது. சரவணன், சாண்டி, கவின் ஆகிய மூன்று பேரும் ஒன்றாகவே சுற்றத் தொடங்குகிறார்கள். காரணம், சாண்டி, சரவணனனுக்கு இருக்கின்ற பார்வையாளர்கள் ரெண்பான்ஸும் க்ளாப்ஸும். ஒரு பக்கம் லாஸ், இன்னொரு பக்கம் சாண்டி, சரவணன் இவர்களோட நட்பு என்ற முறையில் எவிக்ஷனில் இருந்து சுலபமாகத் தப்பித்துக் கொண்டே வருகிறார். ஒரு கட்டத்தில் சரவணன் வெளியே போக, பாய்ஸ் டீம் உருவாகிறது. 5 பேரும் சேர்ந்து வீட்டில் மீதி உள்ளவர்களை காலி பண்ண நினைக்கின்றார்கள். ஆக, அதற்குத் தகுந்த மாதிரி நாமினேட் பண்ணிட்டே வருகிறார்கள். ஒரு மாஸ்டர் ப்ளான்.

சரி சேரன் மேல என்ன கடுப்பு? சேரன் ஆரம்பத்தில் இருந்தே வீட்டுக்குள் நடக்கின்ற எல்லா விஷயத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு வருகிறார். அவரோட அனுபவத்தால் இங்கே நடக்கிறதை வைத்து சுலபமாக புரிந்து கொள்கிறார். க்ரூப்பிசம் பற்றிப் பேசினதும் அவர் தான். நிறைய தடவி அவரோட அனுமானம் சரியாக இருந்துள்ளது. இப்ப லாஸும் சேரனும் முன்னே மாதிரி பேசினாத்கள் என்றால், எங்கே தன்னைப் பற்றின கணிப்புகளைச் சொல்லி லாஸ் மனதைக் கலைத்து விடுவாரோ என்று ஒரு பயம். அதே சமயம் லாஸும் பார்வையாளர்களின் ரெஸ்பான்ஸை முதலிலேயே கணித்து விட்டார்கள். விளையாட்டைப் பொறுத்த வரைக்கும் கவினுடன் இருக்கிறதை விட சேரனுடன் இருக்கிறது தான் நமக்கு சேஃப் என லாஸ் யோசிக்க நிறைய வாய்ப்பு கிடைக்கும். காரணம் கவினை விடச் சேரனுக்கு பாப்புலாரிட்டி அதிகம். ஆக, அதை மொத்தமாகத் தடுத்து, சேரனிடம் பேசுவதே தனக்குப் பிடிக்காத மாதிரி சீன் போட்டு, லாஸை அந்தப் பக்கமே போகாத மாதிரி பார்த்துக் கொள்கிறார். கூடவே அந்த உறவே பொய் என ஒரு சந்தேகத்தைக் கிளப்பி லாஸைக் குழப்பி விடுகிறார்.

இவ்வளவும் செய்து தான் இத்தனை நாள் வந்திருக்கிறார். சரி இப்ப எதுக்கு இந்த விட்டு கொடுக்கற ட்ராமா? சேரன், ஷெரின், வனிதா என மூன்று பேரும் ஸ்ட்ராங் கன்டஸ்டென்ட். அவர்களோடு நேருக்கு நேராக மோத முடியாது. அப்படி நடந்தால் சேரன், ஷெரினைப் பிடித்தவர்களுக்கு கவின் எதிரியாக மாற வாய்ப்பு இருக்கு. ஒருவேளை அவங்க வெளியே போனாலும் , பழி தன் மேல வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால் அடுத்தடுத்த வாரங்களில் எதிர் ஓட்டுகள் வர வாய்ப்பும் இருக்கு. அதற்கு தான் இந்த ட்ராமா. ஒரு சிலர், கவின் சொல்வதில் என்னய்யா தப்பு எனப் பேசுவார்கள். வனிதா சொன்ன சிம்பதி, தர்ஷன், முகின், லாஸ் மேல் மட்டும் வராது. ‘அடுத்தவங்க ஜெயிக்கணும்னு நினைக்கிறான் பாருய்யா! என்ன மனுசன்யா?’ என நம்மையே ஃபீல் பண்ண வைத்துவிடுவார் (ஞாபகம் இருக்கா? லாஸ் இப்ப வரைக்கும் இதே காரணத்தைச் சொல்லிக் கொண்டுள்ளார்).

இப்படி சகல விதத்திலேயும் பக்கா ப்ளான் இருக்கு. 100% இல்லேன்னாலும், 90% லாஜிக் ஒத்துப் போகிறதுதானே!

கடைசியில் பிக் பாஸ் கூப்பிட்டு விளக்கம் கொடுத்த பிறகு தான் வனிதா மைக்கையே மாட்டினார். எண்டே இல்லாத வனிதாவிடம் பிக் பாஸே அடிபணிந்து தானே போகவேண்டும்?

அப்புறம் விநாயகர் சதுர்த்திக்கு முறுக்கு செய்து கொண்டாடினர். என்ன பித்தலாட்டமாக இருக்கு? இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க். போன தடவை மாதிரி தலையணை செய்யவேண்டும். சேரன், வனிதா, தர்ஷன், ஷெரின் ஒரு அணி. கன்வேயரில் பொருட்கள் வர வர தர்ஷன் மொத்தமாக அள்ளிவிட்டார். பிசிக்கல் டாஸ்கில் தர்ஷனைத் தாண்டி ஜெயிக்கறது ரொம்பக் கஷ்டம். முதல் ரவுண்டு, இரண்டாவது ரவுண்டு என வந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் தர்ஷனும் சேரனும் பஞ்சைத் தங்கள் பக்கம் தள்ளிக் கொண்டிருக்க, ஷெரின், வனிதா அங்கே இல்லாததைப் பயன்படுத்தி சாண்டி திருடிக் கொண்டு போனார். மூன்றாவது தடவை நடக்கும் போது தான் ஷெரின் வந்து கண்டுபிடித்தார்.

வீட்டுக்குள் எது வந்தாலும் திருடுவதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளார் சாண்டி. க்வாலிட்டி செக்கிங்கில் வனிதாவும், லாஸும். வனிதா டீம் கடகடவெனத் தைத்து முடிக்க, சாண்டி அணி அதை வேடிக்கை பார்த்து, ‘அவங்க இப்படிப் பண்றாங்க, அப்படிப் பண்றாங்க’ என லாஸிடம் சொல்லிக் கொண்டே இருக்க, ‘அப்படியா?’ எனக் கேட்டுக் கொண்ட லாஸ், ‘அப்ப எல்லாமே ரிஜக்சன் தான்’ எனச் சொன்னார்.

சொன்ன மாதிரியே பாதிக்கும் மேல் ரிஜக்‌ஷனில் தூக்கிப் போட, தர்ஷன், வனிதா என இரண்டு பேரும் விவாதம் செய்தனர். எப்பவும் போல் அது அப்படியே வளர்ந்து மறுபடியும் சண்டையில் முடிந்தது. கேட்கவே நாராசமாக இருந்தது.

உண்மையில் வனிதா கேட்ட மாதிரி, மாடல் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் லாஸ் அவங்க அணி செய்ததை அடிப்படையாக வைத்து ரிஜக்ட் செய்வதாகச் சொன்னார். இரண்டு பேரும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டனர். இதில் கவின் உள்ளே வந்து மொத்தமாக சந்தைக்கடையாக மாறிப் போய்விட்டது. ம்யூட்ல போட வேண்டியதாகப் போய்விட்டது.

இன்னையோடு டாஸ்க் முடிந்த உடனே இந்த சீசனோட ரெண்டாவது ரீ-என்ட்ரி நடந்தது. சாக்‌ஷி, அபி, மோகன் ஆகிய மூன்று பேரும் உள்ளே வந்தனர். ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். அபியும் லாஸும் அந்தப் பக்கம் ஒதுங்க, வனிதா, ஷெரின், சாக்‌ஷி இந்தப் பக்கம் ஒதுங்க, மோகன் பாய்ஸ் டீம் கூடச் சேர, இந்த வாரம் கொஞ்சம் கலகலப்பாகப் பரபரப்பாகப் போகுமென நினைக்கிறேன்.

‘யாமிருக்க பயமே!’ என ஷெரினுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார் சாக்‌ஷி.

மகாதேவன் CM