Search

சார்லிஸ் ஏஞ்சல்ஸ் விமர்சனம்

charlies-angels-2019-review

கெலிஸ்டோ எனும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை ஆயுதமாக மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், அவை திருடப்படுகின்றன. அது தீயவர்களின் கையில் சிக்காமல் தடுக்கின்றனர் சார்லிஸ் ஏஞ்சல்ஸ்.

தொலைக்காட்சித் தொடராகத் தொடங்கப்பட்ட பொழுது, கவர்ச்சியில் தாராளமாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. 2000 இலும், 2003 இலும், இத்தொடர் படமாக எடுக்கப்பட்ட பொழுது கேமரூன் டயஸ், ட்ரூ பேரிமோர், லூசி லியோ ஆகியோரையும் கூடக் கவர்ச்சிக்கென சில காட்சிகளில் பயன்படுத்தியிருந்தனர். ‘இப்படத்தில் அத்தகைய குறைகள் இருக்காது’ என இயக்குநர் எலிசபெத் பேங்க்ஸ் உறுதியளித்திருந்தாலும், படத்தின் தொடக்கக் காட்சிகளில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பெண் இயக்குநர் என்பதால், ஒரு பெண்ணின் பார்வையில், ஏஜென்ட்களாக இருப்பதின் சங்கடங்கள் போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். தயாரிப்பாளர்களில் ஒருவராகக் களமிறங்கியதோடு, திரைக்கதையையும் எழுதியுள்ளார் இயக்குநரான எலிசபெத். கதாசிரியர்களான ஈவான் மற்றும் டேவிட்டின் ஆண் வெர்ஷனைக் கொஞ்சம் பெண்ணியப் பார்வையில் பட்டி, டிங்கரிங் செய்யத் தவறியுள்ளார். எனினும், படத்தின் ஃப்லோ போரடிக்காமல் ஜாலியாகப் போகிறது.

அமெரிக்க நடிகையான க்றிஸ்டின் ஸ்டீவெர்ட்டும், பிரிட்டீஷ் நடிகையான நவோமி ஸ்காட்டும் படத்தின் கலகலப்பிற்கு உதவுகின்றனர். மற்ற இருவரை விட படத்தின் ஆக்‌ஷன் பொறுப்புக்குக் கூடுதல் அக்கறை எடுத்துள்ளார் எல்லா பெலென்ஸ்கா. மற்ற இருவரைப் போல் இயல்பாக இல்லாமல், நடிக்கக் கொஞ்சம் தடுமாறியுள்ளார். அதற்கேற்றவாறு அவருக்கான காட்சிகளைக் கவனத்துடன் இயக்குநர் அமைத்திருந்தாலும், கிறிஸ்டினுக்கு அடிபடும் பொழுது, எல்லா பெலென்ஸ்காவின் அழுகை காமெடியாக இருந்தது. அவருக்கு அழ வரவில்லை. படம் நகைச்சுவையிலும், ஆக்‌ஷனிலும் கவனம் செலுத்திய அளவு எமோஷ்னல்களிக் கவனம் செலுத்தாது குறை. அதனால் அழுத்தமில்லா லைட் மூவியாகப் போய்விடுகிறது.

ஹோடக் எனும் கொலையாளியாக ஜோனதன் டக்கர் நடித்துள்ளார். வில்லனுக்கான அற்புதமான தேர்வு. உணர்ச்சிகளற்ற முகம், அவரது தோற்றம், ஆக்‌ஷனுக்கு உகந்த உடற்கட்டு என மனிதர் படத்தின் விறுவிறுப்பிற்குப் பொறுப்பேற்கிறார். விஞ்ஞானியான நவோமி ஸ்காட்டைக் கொலை செய்ய அவர் செய்யும் சேஸிங் (Chasing) காட்சி, படத்தின் அட்டகாசமான காட்சிகளில் ஒன்று. திரைக்கதையில் பெரிய திருப்பங்களோ, சுவாரசியமான காட்சியமைப்புகளோ இல்லாவிடினும், போராடிக்காமல் ஜாலியாகப் பொழுதைக் கழிக்க உத்திரவாதமான படம். அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது இந்தக் கூட்டணி.