Search

‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்

rdm---mni-maniratnam

தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி, BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்”.

உண்மையில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாகக் கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் T. சிவா, “தற்போது திரையுலகம் பலமுனைகளிலும் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா டிக்கெட் மீது ஏற்கெனவே அதிகப்படியான வரிவிதிப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசு மேலும் 8 சதவீத TDS வரி விதித்துள்ளது. நாங்கள் இப்போது மத்திய அரசிடம் இதனை முறையிட டெல்லி செல்லவுள்ளோம். 10 சதவீத படங்களில் மட்டுமே ஒரு வருடத்தில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. இன்று இங்கே தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல முயற்சியைக் கண்டுகொண்டு அதனை அடையாளப்படுத்தி மிகப் பெரிய அளவில் எடுத்து செல்கிறார். இது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்” என்றார்.

நடிகர் மைம் கோபி, “உண்மையில் இப்படம் ஒரு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது . இயக்குநர் RDM மிக நுண்ணிய, இதயம் அதிரும் சம்பவத்தை அழுத்தமாகத் திரையில் தந்துள்ளார். அதில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து இரண்டாம் பகுதியில் முரட்டுத்தனமாக அவர் மாறுவதைக் கண்டு நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். ரவீனா மிக அழகானதொரு நடிப்பைத் தந்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும். இப்படத்தின் ஆக்ஷன் பெரிய அளவில் பேசப்படும். படத்தின் க்ளைமாக்ஸ் பலரையும் அதிரவைத்து, மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்” என்றார்.

நாயகன் சுரேஷ் ரவி பேசியது, “நானும் இயக்குநர் RDM இருவரும் 8 வருடங்களாக இணைந்து படம் செய்ய வேண்டும் எனப் பேசிக் கொண்டிருந்தோம். இப்போது எங்கள் கனவு உண்மையாகியுள்ளது. எங்கள் படத்தை முன்வந்து வாங்கியதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. அவர் வெளியிட்ட பல படங்கள் தரமான கதையுடன், நல்ல பெயர் பெற்று வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் “காவல்துறை உங்கள் நண்பன்” படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றாது. காவல்துறை பற்றிய நல்லவற்றை பல படங்கள் சொல்லிய நிலையில் இப்படம் அதன் வேறொரு முகத்தைக் காட்டும். எல்லாத் துறையிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும் இதில் நாங்கள் காவல்துறையின் காட்டப்படாத பக்கத்தைக் காட்டியுள்ளோம்” என்றார்.

BR Talkies சார்பில் பேசிய தயாரிப்பாளர் B. பாஸ்கரன், “முதன் முதலாக இயக்குநர் RDM என்னிடம் கதை கூறியபோது எனக்கு பல இடங்களில் அதிர்ச்சியாக இருந்தது. சில ஆச்சர்யங்களும் இருந்தது. இந்தப் படம், பார்ப்பவர்களைப் பெரியளவில் பாதிக்கும் குறிப்பாக இறுதிக்காட்சி பெரும் அதிர்வை தரும்” என்றார்.

நடிகர் ராம்தாஸ், “இயக்குநர் RDM ஒரு மினி மணிரத்னம் எனலாம். மிகவும் தெளிவான சிந்தனையுடன், குறைந்த பட்ஜெட்டில் நேர்த்தியாக, எந்தவித சமரசமுமின்றி படம் எடுக்க கூடியவர். இப்படத்தில் பங்கு கொண்டது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் மொத்த நிகழ்வையும் அழகாகத் தொகுத்து வழங்கினார். அவர், “இப்படத்தைத் தமிழின் மிக முக்கிய இயக்குநர்களுக்குத் திரையிட்டுக் காட்டினோம். அனைவரும் படத்தை வெகுவாக ரசித்ததோடு இப்படத்தைத் தங்கள் படம் போல் கருதி விளம்பரம்படுத்தப் போவதாகக் கூறினார்கள். இப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.