Search
doctor-strange-fi

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

Doctor Strange Tamil vimarsanam

காலமும் மரணமும் மனித இனத்தின் மீதான அவமானம் எனக் கருதுகிறான் கெசிலீயஸ். அந்த அவமானத்தைக் களைய வேறொரு பரிமாணத்தில் இருக்கும் டொர்மாமுவைப் பூமிக்கு அழைக்கிறான். அண்டத்தைக் கைப்பற்றும் இச்சையுடைய டொர்மாமுவிடமிருந்து பூமியை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்பவர் ஓர் அமெரிக்க நியூரோ சர்ஜன். மேற்கின் மேட்டிமையில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு திமிர் பிடித்த திறமைசாலி விஞ்ஞானி இவர். விதிகளை மீறுவது பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல், காரியத்தை முடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட லட்சியவாதியும் கூட! அவருக்கு மிக மோசமான ஒரு விபத்து நிகழ்கிறது. கை விரல்கள், பலத்த சேதத்திற்கு உள்ளாகி எந்தப் பொருளையும் நடுக்கமின்றிப் பிடிக்கும் பலமற்றுப் போய் விடுகிறது. நவீன மருத்துவம் கைவிட்ட நிலையில், கமார்-தாஜ் எனும் இடத்தைத் தேடி காத்மாண்டுக்குப் பயணிக்கிறார். கிழக்கு அவரை சூப்பர் ஹீரோவாக உருமாற்றுகிறது.

படத்தின் விஷுவல் தலை சுற்ற வைக்குமளவு அபாரமாய் உள்ளது. வேறொரு பரிமாணத்தில் இருந்து சக்தியைப் பெறும் ‘ஏன்ஷியன்ட் ஒன்’ சாலைகளைச் சகட்டுமேனிக்குச் சதுரமாகத் திருப்புகிறார். வசனங்கள் நறுக்கென இருப்பதோடு, படத்தைக் கடைசி வரை கலகலப்பாக வைத்திருக்க உதவுகிறது. இயக்குநர் ஸ்காட் டெர்ரிக்ஸனுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொணர்ந்துள்ளது படம். ராபர்ட் கார்கிலுடன் இணைந்து இயக்குநர் உருவாக்கிய சுவாரசியமான திரைக்கதையே அதற்கு முழுமுதல் காரணம் (ராபர்ட் கார்கில் திரைப்பட விமர்சகராக இருந்து திரைக்கதையாசிரியர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது).

டாக்டர் ஸ்ட்ரேஞ்சாக பெனிடிக்ட் கம்பர்பேட்ச் நடித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த மேடை நாடக நடிகரான இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து நிறைய விருதுகளை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்ரேஷன் தியேட்டரில், இயந்திரத்தின் உதவியில்லாமல் துளி கூட நடுங்கிடாத கைகளால் ஒரு நோயாளியின் மூளையிலிருந்து தோட்டா எடுக்கும் சீனில் இருந்து, மனிதர் கடைசியில் தாரிடம் (Thor) பேசும் வரை அதகளம் புரிந்துள்ளார். அகந்தையை மெளனப்படுத்தாமல், ‘ஏன்ஷியன்ட் ஒன்’னிடம் மூக்கு அறுபட்டுக் கொண்டவாறே தன்னை மாஸ்டராகப் பரிணமித்துக் கொள்கிறார். அதுவும் அவரைப் ‘பறக்கும் துணி (Levitation cloth)’  தேர்ந்தெடுத்து, அவரை முழு சூப்பர் ஹீரோவாக்கும் காட்சி மிகப் பிரமாதம். நாயகனின் அடிபட்ட இடத்தைப் பாசமாகத் தடவிக் கொடுக்கும் லெவிடேஷன் க்ளாத் கூட ஒரு கதாப்பாத்திரம் போல் ரசிக்க வைக்கிறது.

நார்நியா படத்தில் சூனியக்காரியாகக் கலக்கிய மத்’தில்டா’ ஸ்வின்டன், இப்படத்தில் ஏன்ஷியன்ட் ஒன்னாகத் தோன்றியுள்ளார். அவரது சோகையான பார்வை சூனியக்காரிக்கும் பொருந்துகிறது; உலகை வேற்றுக்கிரகவாசிகளிடம் இருந்து காக்கும் கமார்-தாஜின் தலைமை மந்திரவாதிக்கும் பொருந்துகிறது. அவரிடம் மிகுந்த மரியாதை வைத்துள்ளவராக மாஸ்டர் மோர்டோ. விதிகளை அதீத ஈடுபாடுடன் பின்பற்றுபவர். விதியைப் போட்டவரே மீறினாலும் மனசுடைந்து நெற்றிக்கண் திறக்கும் குணாதிசயம் கொண்ட அவரை, மந்திரவாதிகளை வேட்டையாடும் அடுத்த பாகத்திற்கான வில்லனாக மாற்றியுள்ளார் இயக்குநர்.

கிழக்கு, மெய்ஞானம் என படம் மேலோட்டமாகப் பேசினாலும், காற்றிலிருந்து மாங்காய் தருவிக்கும் மந்திர வித்தை அளவுக்கே படம் டீல் செய்துள்ளது. முதுகெலும்பு முறிந்தவரை மந்திரத்தால் எழுந்து நடமாட வைப்பார் ஏன்ஷியன்ட் ஒன். அது இயற்கைக்கு எதிரானது; தற்காலிகமானது; தந்திரமானது போலொரு கற்பிதத்தை உருவாக்குகிறது படம். ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது’ என்ற மெய்யான நம்பிக்கை உடையது கிழக்கு. இதில் எந்தப் பாவனையும் உள்ளதாகவோ; மரணத்தைத் தள்ளிப் போடுவது இயற்கைக்கு எதிரானதாகவோ கிழக்கில் எத்தகைய குறுகிய எண்ணமும் இல்லை. அவரவர் முயற்சிக்கேற்ப பலனென எளிய கொள்கையை உடையது.

படத்தின் வெற்றிக்கு அதன் க்ளைமேக்ஸ் மிக முக்கிய காரணம். எதிர்க்கவே முடியாத ஒரு மிகப் பெரும் எதிரியை நாயகன் தன் சாதுரியத்தால் கிடுக்குப் பிடி போட்டு பேரத்திற்கு அடிபணிய வைக்கிறான். இப்படி ஓர் அற்புதமான க்ளைமேக்ஸை யோசித்ததற்காக இயக்குநர் ஸ்காட் டெர்ரிக்ஸனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.