Search
Genius-movie-review

ஜீனியஸ் விமர்சனம்

Genius-movie-review

ஜீனியஸ் என்பதற்கு மேதை எனப் பொருள் கொள்ளலாம். யார் மேதை, எது மேதைத்தன்மை அல்லது மேதையாய் இருப்பது அவசியமா என்ற கேள்விகளைப் படம் எழுப்புகிறது.

ஏழாவது வரை ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த தினேஷ் குமாரை, அவனது தந்தை ராம் மூர்த்தி தினேஷைக் கூண்டிலடித்து, படிப்பைத் தவிர வேறெதுவும் இல்லை என அவனது பதின்பருவத்தைச் சிறைபிடித்து விடுகிறார். ஒருநாள், அவன் வளர்ந்து நல்ல வேலையில் இருக்கும் பொழுது, அவனது மூளை ஷட்-டவுன் ஆகிவிடுகிறது. தனக்குள் பேசிக் கொண்டிருப்பது, எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது என அவன் மனம் பிறழ்கிறது. அதிலிருந்து எப்படி தினேஷ் குமார் மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை.

ஆச்சரியப்படுத்துவதற்கு சுசீந்திரன் எப்பொழுதும் தவறுவதில்லை. ஒன்று அசத்தி ஆச்சரியப்படுத்துவார் அல்லது பயங்கரமாகச் சொதப்பி ஆச்சரியப்படுத்துவார். நூறு நிமிடங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட படம். படி, படி என உயிரை எடுக்கும் தந்தையின் கொடுங்கனவுக்குப் பலியாகும் ஒரு மகனைக் கதையின் கருவாக எடுத்துள்ளார். ஆனால், அதில் போதுமான அழுத்தம் இல்லாதது மிகப்பெரும் குறை. ஐ.டி. துறையை, ஒரு கொடும் பூதம் போல் சுசீந்திரனும் சித்தரிக்கத் தொடங்கிவிட்டார். ஒரு பகல், ஓரிரவு முழுவதும் வேலை பார்க்கும் தினேஷ் குமாரைப் பக்கத்து இருக்கைக்காரர் கிண்டல் செய்ததும், ‘ஆமா இல்ல!’ என ரெஸ்ட் ரூம் போகிறார். அதை ஒரு பெரும் குத்தமாகச் சொல்லிக் காட்டித் திட்டுகிறார் அவரது பாஸ். அந்தக் கம்பெனியிலேயே, அவர்தான் ‘சின்சியர்’ மேதை என அவரது பாஸ் நம்புகிறார். கொஞ்சம் தூன்ஹ்கி ஓய்வு எடுக்கணும் என டாக்டர் அங்கே மருத்துவமனையில் சொன்னதுமே, அதை ஒற்றறிந்து அவனை உடனே வேலையில் இருந்து தூக்குகிறார் பாஸ். ஏன் பாஸ், ஒரு மாச வேலையை ஒரு வாரத்தில் செய்யும் ஒரு சின்சியர் மேதை அல்லது இளிச்சவாயன் கிடைப்பதே குதிரைக் கொம்பு, அவனை ஏன் கம்பெனியில் இருந்து உப்புசப்பில்லாத விஷயத்துக்காகவா தூக்குவீங்க? இந்த ஐ.டி.காரங்களே இப்படித்தான் கொடுமையானவங்க என நிரூபிக்கக் கொஞ்சம் மெனக்கெட்டாலே போதும். ஐடின்னா கார்ப்ரேட், கார்ப்ரேட்ன்னா வில்லன் என்ற சினிமா துறையின் ராம் ஃபார்முலா ரசிக்கும்படி இல்லை.

ஜாஸ்மினாக அறிமுகமாகியுள்ள பிரியா லால் மிகச் சிறப்பான தேர்வு. மையக்கதையை விட ஜாஸ்மினின் கதை தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அந்தச் சின்ன அத்தியாயம், எடுத்துக் கொண்ட கருவிற்கு நேரெதிர் திசையில் பயணிக்கிறது. சின்னஞ்சிறு சுவாரசியம் கூட இல்லாமல், படம் மிகச் சுலபமாய் சுபமாக முடிகிறது.

படத்தைத் தயாரித்து கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார் ரோஷன். கதாபாத்திரத்திற்குப் பொருந்தினாலும், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாத திரைக்கதையால் மனதில் பதிய மறுக்கிறார். எங்கெங்கோ பயணித்து, அதாவது பிழன்ற மனதிற்கு ஆறுதலான நபரிடம் கிடைக்கும் உடலுறவு தீர்வை அளிக்கும் என்பதாகக் கொண்டு போய், குழந்தைகளுக்கு விளையாட்டு அவசியம் என்ற உன்னத செய்தியோடு படம் முடிகிறது.