Search

கொரில்லா – சேட்டைகளின் நாயகன்

Gorilla-movie-Music-Launch

கொரில்லா எனத் தலைப்பு வைத்திருந்தாலும், படத்தில் சேட்டை செய்வதோ ஒரு தாய்லாந்து சிம்பன்சி. உடையணியப் பிடிக்காத அந்த சிம்பன்சி, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் உடையைக் களைந்து மொட்டை மாடிக்கு ஓடி விடுவோம். உடன் நடிக்கும் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோரைக் கடித்தும், தலைமுடியைப் பிடுங்கியும் படாதபாடுப்படுத்தியுள்ளது. இவ்வளவு சேட்டை செய்த சிம்பன்சியை நாங்கள் துன்புறத்தவில்லை என நடையாய் நடந்து, விலங்கு நல வாரியத்தைச் சமாதானப்படுத்தி சான்றிதழ் பெற்றுள்ளார் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா. ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாய் செலவு செய்ய்யப்பட்டுள்ளது – சிம்பன்சியின் உணவுக்கும், சிம்பன்சியைப் பராமரிப்பவர்களுக்குச் சம்பளமாகவும். ‘எங்களை விட சிம்பன்சியைத்தான் செளகரியமாகப் பார்த்துக் கொண்டார்கள்’ என ஜீவாவும் விளையாட்டாகச் சொன்னார்.

படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பது நிச்சயம். இந்தப் படத்தின் இசை வெளியீட்டைப் பிரம்மாண்டமான முறையில் நடத்தினார் ஆன் இன் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா.

“மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள்” என்றார் ராதாரவி.

ஜீவாவின் தந்தையான ஆர்.பி செளத்ரி, “ட்ரைலர் பார்த்தேன் ரொம்ப நல்லாருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பெரிய லக்கி. படத்தை இப்போதே விற்பனை செய்துவிட்டார். கண்டிப்பா இந்தப் படம் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். பாடல்கள் விஷுவல்ஸ் இரண்டும் நன்றாக இருந்தது. ஜீவாவிற்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்” என்றார்.

ராகுல் தாத்தா, “கொரில்லாவிடம் அடி வாங்காத ஆட்களே கிடையாது. அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். நிறைய செலவு செய்திருக்கிறார்கள். என்னை எங்கும் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். விட்டால் எங்கேயாவது மசாஜ் செய்யப் போய்விடுவேன் என அவர்களுக்கு பயம். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு என வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். இந்த இயக்குநர் டான் கிடையாது டானுக்கு எல்லாம் டான்” என்றார்

இயக்குநர் ராமின் உதவியாளரான டான் சாண்டி, “ஜீவா சாரை நான், ‘கற்றது தமிழ்’ படத்தில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. அந்தக் குரங்கு எங்களை அவ்வளவு அடித்திருக்கிறது. தாய்லாந்து சென்றும், மஜாச் செய்யாமல் வந்த டீம் நாங்கள் மட்டுமே! எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டிப் படத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்

இசை அமைப்பாளர் சாம் சி.எஸ்., “முன்னாடியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம் இது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு இசை அமைத்தப் படம் இது. ஒரு படம் பார்க்கும் போது இசை மனசுக்குள் ஓடும். இந்தப்படத்தைப் பார்த்தால் நிறைய பதட்டம் இருந்தது. ஏனென்றால் நிறைய வசனங்கள் இருந்தது. அவை நன்றாகவும் இருந்தது. இந்தப் படம் எனக்கு மிகப் புதுமையாக இருந்தது. பாடலாசியர்கள் யுகபாரதி, லோகன் இருவரும் நன்றாகப் பாடல் எழுதி இருக்கிறார்கள். இந்த ஆல்பம் ரொம்ப நல்லா வந்திருப்பதாக நினைக்கிறேன். இந்தப் படத்தில் நிறைய அரசியல் நையாண்டிகள் இருக்கிறது. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படம்” என்றார்

நடிகர் சதீஷ், “இந்தப் படத்தில் பெண் குரங்கு நடித்திருக்கிறது. ஆனால் அது கூட என்னிடம் ஒட்டவில்லை. மனிதரோடு நடிப்பது சுலபம். குரங்கோடு நடித்தது மிகவும் சிரமம். இது எல்லோரையும் கடித்திருக்கிறது. ஒவ்வொருத்தரும் படத்தை என்சாய் பண்ணி நடித்திருக்கோம்” என்றார் 

நடிகர் ஜீவா, “கொரில்லா படம் ஓர் அசாதாரணமான அனுபவம். ஏன் இந்தப் படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால் இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு அதனால் தான். தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். கொரில்லா மாதிரி ஒரு படம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது. டான் சாண்டி இந்தக் கதையை என்னிடம் சொல்லும் போது ரொம்ப என்சாய் பண்ணிக் கேட்டேன். படத்தையும் என்சாய் பண்ணி நடித்தேன். பக்கா காமெடி மசாலா தாண்டி ஒரு நல்ல மெசேஜு உள்ள ரொம்ப ஜாலியான ஒரு படத்தை எடுத்திருக்கோம்” என்றார்.

சிம்பன்ஸி, அழிந்து வரும் ஓர் உயிரினம். ஆதலால் இரண்டு சிம்ப்ன்சிகளைத் தத்தெடுத்துள்ளது ஆல் இன் பிக்சர்ஸ். விழாவின் முத்தாய்ப்பாக, சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை அனைவருக்கும் சிம்பன்சி அனுப்பியுள்ளது என வாழைப்பழத்தை அனைவருக்கும் அளித்தனர்.

கொரில்லா – ஜுன் மாதம் 21 ஆம் தேதி வெளியாகிறது.




சமீபத்திய பதிவுகள்

காணொளிகள்

கேலரி