Search
Jarugandi-movie-review

ஜருகண்டி விமர்சனம்

Jarugandi-movie-review

ஜருகண்டி என்றால் நகருங்க எனப் பொருள்படும். ‘இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அதற்காக ஓடிக் கொண்டே இருப்பார்கள்’ எனத் தலைப்புக்கு விளக்கமளித்துள்ளார் இயக்குநர் பிச்சுமணி. இவர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படமிது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியில் பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்துக் கடன் வாங்குகிறார் ஜெய். அதனால் எழும் பிரச்சனையைச் சமாளிக்க்க, ரெபா மோனிகா ஜானைக் கடத்தி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பிரச்சனையைத் தீர்க்கப் பார்க்கிறார். கடத்தப்பட்ட பெண் பணத்துடன் மிஸ் ஆக, ஜெய்யின் பிரச்சனைகள் இரட்டிப்பாகிறது. பிரச்சனைகளை இருந்து நகராமல், ஓடி ஒளியாமல் எப்படி அதைத் தீர்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

பெரிய பிரச்சனையில் சிக்கினாலும், அதை மிகச் சுலபமாகத்தான் தீர்க்கிறார். திரைக்கதை, நாயகனுக்கு எழும் பிரச்சனையை ஒரு பெரிய விஷயமாகப் பொருட்படுத்தவில்லை. ‘ஜி, சின்ன பிரச்சனை தான் ஜி. நான் தான் ஹீரோ. ஐ வில் ஹேண்டில். டோண்ட் வொர்ரி’ என்று ஜெய் ரசிகர்களிடம் சொல்வது போல், லைட் வெர்ஷனிலேயே உள்ளது படம். ஜெய், கதாபாத்திரமாக மாறாமல் ஜெய்யாகவே இருப்பதே காரணம்!

அவரது சலிப்படைய வைக்கும் பாணி தான் என்றாலும், படத்தின் கலகலப்புக்கு ஆங்காங்கே உதவியுள்ளார் ரோபோ ஷங்கர். டேனியல் ஆனி போப், இக்கட்டான சூழலில் தனது பதட்டமான வசன மாடுலேஷனால் கொஞ்சம் ரசிக்க வைக்கிறார். நேர்க்கோட்டு கதை தான் என்றாலும், ட்விஸ்ட்கள் நிறைய உண்டு படத்தில். ஆனால், எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தாமல், ‘சரி, அதுக்கென்ன இப்ப?’ என்பதாக உள்ளது ஆடியன்ஸ் ரியாக்‌ஷன்.

ஒரு சீரியசான ஆக்‌ஷன் கதைக்கு காமெடி டோன் கொடுத்து இரண்டுங்கெட்டானாகக் கொண்டு போயுள்ளனர். நாயகனும் நாயகியும் பாண்டிச்சேரியில் இருந்து ஒன்றாக வருகின்றனர். கால்வாசி தூரம் வந்ததும், ‘அய்யோ பாவம்!’ என நாயகனுக்கு நாயகி மேல் பரிதாபம் வருகிறது. பாதி தூரம் கடந்ததும், ‘ச்சே, ஒரு நல்லவனைத் தப்பா நினைச்சுட்டோமே!’ என நாயகிக்குக் குற்றவுணர்வு எழுகிறது. முக்கால்வாசி தூரம் வந்ததும் வில்லன் தன் அடியாட்களுடன் சூழ்ந்து நாயகியைத் தன் கஸ்டடியில் எடுக்கப் பார்க்கிறார். உடனே நாயகன் சொல்கிறார், “அவ என் ஃபேமிலில ஒருத்திடா”. அதாவது அதன் அர்த்தம், ” நீ ஆசைப்பட்ட மாதிரி ஃபாரீனுக்கு எல்லாம் போகக்கூடாது. நான் தான் வில்லன்ட்ட இருந்து காப்பாத்தினேன். நீ எனக்குத்தான் சொந்தம்” என்பதாகும். அதைக் கேட்கும் வில்லனுக்கு, “இந்தப் படத்தில் நீ வில்லனா நான் வில்லனா?” என செம கோபம் வந்து விடுகிறது. நாயகி என்றாலே லூசாகத்தானே இருக்கணும். படம் முழுவதும் வரும் வில்லனை விட க்ளைமேக்ஸில் திடீரென ஃபார்மான வில்லனே சரணம் என தன் சுதந்திரத்தைப் பெரிய மனதுடன் விட்டுத் தருகிறார். படம் சீரியசாகத் தொடங்கினாலும், இப்படியாக சுபமாய் நகைச்சுவையாய் முடிகிறது.