Search
Review-July-Kaatril

ஜூலை காற்றில் விமர்சனம்

Review-July-Kaatril

“உன்னாலே உன்னாலே” படத்தில், ‘ஜூன் போனா ஜூலை காற்றில்’ என்ற பாடலை பா.விஜய் எழுதினார். ஜீவாவின் அப்படத்திற்கு, இந்தத் தலைப்பையும் அவர் ஓர் ஆப்ஷனாக வைத்திருந்தார். அவரது அசிஸ்டென்ட்டான KC.சுந்தரம், ஜீவாவிற்கு ட்ரிப்யூட் செய்யும் வண்ணம் தனது முதல் படத்திற்கு ‘ஜூலை காற்றில்’ எனத் தலைப்பிட்டுள்ளார்.

ராஜீவ், ஸ்ரேயா, ரேவதி என மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையேயான காதலை, உறவுச்சிக்கலை மையமாகக் கொண்ட படமிது. படத்தை ஐந்து அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார் அறிமுக இயக்குநர் சுந்தரம்.

கடைசி அத்தியாயமான ‘Moving on (கடந்து செல்லு) தான் படத்தின் சாரம். காதலில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மைண்ட் பிளாக்-கைக் காலகாலமான தமிழ்ப்பட நாயகர்கள் ஆழப் பதிந்து விட்டனர். ஓர் உறவில் இருந்து வெளியேறுவது என்பது மிகப் பெரிய குற்றமாகவே திரைப்படங்கள் சதா போதித்து வருகின்றன. சமூகம் ஒரு transition பீரியடில் உள்ளது. கணவன் இறந்தால் மனைவியை எரிக்கும் சதி கலாச்சாரமாக இருந்தது, விதவை மறுமணம் அசிங்கம் என ஒரு காலத்தில் இருந்தது. ஒரே காதல் என்பது கெளரவமாகவும் , தெய்வீகமாகவும் கருதி வந்த காலத்தில் இருந்து, matured ஆன இளைஞர்கள் அடுத்த புள்ளிக்கு நகர்ந்து வருகின்றனர். ஆனால், இதை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவ்வுறவில் இருந்து வெளி வர முடியாமல், அந்த உறவினை இயல்பாகக் கடக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள்தான் அதிகம்.

மறுக்கப்படும் காதல் அல்லது ப்ரேக்-அப் என திடீரென காதலிலுள்ள ஆணோ/பெண்ணோ ஏமாற்றினால், அதை ஏற்றக் கொள்ள வேண்டுமா? கசஷ்டமாக இருந்தாலும் ‘ஆம்’ என்ற பதிலே யதார்த்தம். ராஜீவ், ஸ்ரேயாவின் காதலை மறுக்கிறான்; ரேவதி, ராஜீவின் காதலை மறுக்கிறாள். ஆனால், வாழ்க்கை அங்கேயே முடிந்து விடுவதில்லை என்ற புரிதலும் மெச்சூரிட்டியும் தான் கதாபாத்திரங்களின் பலம். ஸ்ரேயா, சற்றுச் சிரமப்பட்டாலும் மீண்டு விடுகிறார். கடந்து செல்லுதல் தானே வாழ்க்கை.

“You need to respect her privacy” என்பதுதான் நாயகனுக்குக் ‘கோவா’வில் கிடைக்கும் உறவுப்பாடம். கணவனோ, மனைவியோ, காதலரோ, ஒவ்வொருவருக்கும் ஓர் அந்தரங்கமான இடம் உண்டு. ‘யார் கூடப் பேசின?’, ‘அவன் கூட ஏன் பேசுற? எனக்குப் பிடிக்கல’ என்பது போன்ற சிறுபுத்திகளைக் கடந்து, மற்றவரின் private space-ஐ மதிப்பதே உறவுச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் வழி. படம், அந்தப் புள்ளியை மிக அழகாகத் தொட்டுச் செல்கிறது.

ராஜீவாக நடித்த ஆனந்த் நாக்கிற்குப் பொருந்தும்படியான கச்சிதமான பாத்திரம். நேரம் படத்தில் சின்ன பாத்திரத்தில் வந்தாலும் தனது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸைத் தனித்துப் பதித்திருப்பார். முழுப் படத்தில் சோலோ ஹீரோ என்றால் சொல்லவும் வேண்டுமா? குறிப்பாக, ரேவதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சம்யுக்தா மேனனுடனான காட்சிகளில் தன் அவஸ்தையையும், ரேவதி மீதான காதலையும் அழகாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். ஸ்ரேயாவாக வரும் அஞ்சு குரியன், தனது சின்னச் சின்ன பாவனைகளாலும் ரசிக்க வைக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோ, ஒளிப்பதிவாளர் சேவியர் எட்வர்ட்ஸ்தான். ஒவ்வொரு ஃப்ரேமுமே நேர்த்தியான ஒழுங்கில் கவிதை போல் உள்ளன.

படத்தின் க்ளைமேக்ஸ் அழகான ஆச்சரியம். ஆனால், பார்வையாளர்கள் சிரிக்கத் தொடங்கிவிடுகின்றனர். இயல்பான ஒன்றை நகைச்சுவையாகப் புரிந்து கொள்ளும் ரசிகர்களுக்கு, இப்படியான கலாச்சார அதிர்ச்சி கொடுக்கும் படத்தினைத் தனது முதற்படமாகத் துணிந்து எடுத்த இயக்குநர் KC.சுந்தரத்துக்கு வாழ்த்துகள். மற்றவரின் விருப்பு, வெறுப்பை மதிக்கும் சமூகமாக மாறும்பொழுது, காலத்தில் முந்தி வந்துள்ள இப்படத்தின் அருமை ரசிகர்களுக்குப் புரியவரும்.