Search
rekha-utsav

காமோற்சவம்

‘காமாண்டி கூத்து’ என்பது வசந்தத்தை வரவேற்றுக் கொண்டாடும் பல தொல் பண்டிகைகளில் ஒன்று. மதுரைப் பகுதிகளில் காமன் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படும். திண்டுக்கல்லில் காமக் கடவுளுக்கு கோவில் கூட உண்டு. முன்பொருமுறை இலாவணிப் பாடல் வகையில் காமன் பண்டிகை பற்றி ‘எரிந்த கட்சி’ என்றொரு பாடல் எழுதியிருந்தேன். இன்றும் காமாண்டி கூத்து நடைபெறுகிறது என்றாலும், வள்ளி திருமணம் போன்ற கூத்துகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைதான். மக்கள் கூட்டத்தை ஈர்க்க வெகு ஆபாசமாக நடத்தப்படும்.

இந்தக் காமாண்டி வழிபாடு என்பது பெரும் வரலாறு கொண்டது. கிளியை வாகனமாகக் கொண்டு, கரும்பு வில்லேந்தி, சந்தனம் பூசி வரும் மன்மதனும், அவனுக்கு இணையாக வரும் ரதிதேவியும், காமாண்டி வழிபாட்டின் கடவுள்கள். தமிழில் அப்படித்தான். மாயாண்டி, விருமாண்டி, சிவனாண்டி என்றுதான் கடவுள்கள் எல்லாம் குறிக்கப்படுவர். இப்பொழுது இதையெல்லாம் புதியதாகக் கேட்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். சில வக்கிரம் பிடித்தவர்கள் இதையே வசையாகவும் பயன்படுத்துவர். எல்லா வக்கிரங்களுக்கும் ரசிகர் கூட்டம் இருப்பது போல, இந்த வசைகளையும் கேட்டு கிளுகிளுக்கவென விடலைக் கூட்டங்கள் எங்கும் உண்டு.

பங்குணி உற்சவத்தின் போது, மயிலை கபாலீஸ்வரர் பிக்ஷாடனர் கோலத்தில் எழுந்தருள்வதை, ‘இறைவன் இரவலர் கோலம்’ என வழிபடுகிறோமே, அதை பிச்சாண்டி. எனத்தான் தமிழில் குறிப்பிடுவது வழக்கம்.

எரிந்த கட்சி, எரியாத கட்சியின் தாத்பரியம் என்னவென்றால், சைவ சமயம் வலிமையோடு எழுந்தபோது காமாண்டி வழிபாட்டை உள்ளிழுத்துக் கொள்கிறது. காமக்கடவுளை எரித்து விட்டு, பிறகு ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரிபவனாகக் காமனை நிறுத்துகிறது. அதனால்தான், காமாண்டி கூத்தில் முதலில் வரும் ரதி தேவி தலைவிரிகோலமாக தன் துணைவனை இழந்த துக்கத்தில் பாடுகிறாள். அடுத்து வரும் எரியாத கட்சி, மீண்டும் மகிழ்ச்சியாக, கண்ணுக்குப் புலப்படாத காமவேளுடன், தங்கள் கொண்டாட்டத்தைத் தொடர்கிறது.

இந்து, பௌத்த சமயத்தின் அடிப்படை நான்கு புருஷார்த்தங்கள் – அர்த்தம், காமம், தர்மம் மற்றும் மோட்சம் எனப்படும். இந்த நான்கில் தர்மமும், காமமும் தனக்கென தனி வழிபாட்டைக் கொண்டு மேலெழுந்திருக்கின்றன. தரும தேவனின் திரிபாக விருமன் (பிரம்மன்) என்றும் சொல்வதுண்டு.

காமனுக்கென சூத்திரம் எழுதிய வாத்சாயனர், காமார்த்த தர்ம புருஷார்த்தங்கள் மூன்றும் வாழ்வின் மகிழ்ச்சிக்கான வழி என்கிறார்.

ம்ருச்சகடிகா என்கிற வடமொழி நாடகத்தைக் கொண்டு, மறைந்த திரைப்பட இயக்குநர் கிரிஷ் கார்னாட் ஒரு திரைப்படம் எடுத்திருந்தார். பாஸரின் நாடகம் எனவும் சொல்வார்கள். கிரிஷ் கார்னாட்டின் திரைக்கதையில் வாத்சாயனர் ஒரு பாத்திரமாக வருவார். ‘அரே ஓ, சம்பா’ என மிரட்டும் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற அம்ஜத்கான் தான் வாத்சாயனர் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். படத்தின் பெயர் ‘உத்ஸவ்’ (உற்சவம். கொண்டாட்டம்).

அதுவரை இந்தியத் திரையுலகில் வெளிவந்திருந்த மரபுரீதியான, கலைப்படங்களின் இலக்கணத்தை மாற்றி எடுக்கப்பட்ட புதிய, உண்மையான முயற்சி எனலாம். மூல நாடகத்தின் சில அங்கத தருணங்களை கிரிஷ் கார்னாடால் அப்படியே கொண்டு வர முடிந்திருந்தது. ஆனால், இது போன்ற, சமய கருத்துகளற்ற, நாடகங்களுக்கு மேலை நாட்டினரிடம் கிடைக்கும் வரவேற்பு போல இந்தியப் பார்வையாளர்களிடம் வரவேற்பு கிடைப்பது அரிது. அதுவும் வாத்சாயனரின் நூல் உருவாக்கக் காட்சியமைப்புகள் எல்லாம் வெகு ஜன ரசிகர்களை ஈர்க்காமல் போய்விட்டது. இந்தப் படத்தைத் தயாரித்த சசிகபூரால் அப்புறம் திரைப்படங்களே தயாரிக்க முடியாத அளவுக்கு பொருளாதார நஷ்டம்.

rekha-utsavஇதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நமது ஜெமினி கணேசனின் மகளான ரேகா, இந்தப் படத்தில் வசந்தசேனை என்னும் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். பிறகு 15 ஆண்டுகள் கழித்து வாத்சாயனரின் காமசூத்ராவில் ராஸ தேவி என்னும் காம சாஸ்திர ஆசிரியையாக நடித்திருப்பார். பிறகு ஹ்ரிதிக் ரோஷன் போன்றோருக்கு பாட்டியாகக் கூட நடித்து விட்டார். அண்மையில் வெளிவந்த Super Nani (பிரமாத பாட்டி) படத்தில் கூட அதே உன்னத அழகும் வனப்புமாக நடித்திருப்பார்.

இன்றைய நெட்ஃப்ளிக்ஸ் காலத்தில், உத்ஸவ் போன்ற படங்களை இன்னமும் சிறந்த தொழில்நுட்பத்துடன் இன்னமும் சிறந்த அழகியலுடன் எடுக்க முடியும். ஆனால், அதில் நடிப்பதற்கு ரேகா போன்ற நடிகைகள் கிடைப்பதுதான் கடினம்.

ஸ்ரீதர் நாராயணன்