Search
Koothan-movie-review

கூத்தன் விமர்சனம்

Koothan-movie-review

கூத்து என்பது வசனம், பாட்டு, அடவுகள் போன்றவற்றைக் கொண்டு நடிக்கும் நாட்டார் கலை. அந்தக் கலையைக் கற்றுத் தேர்ந்தவரைக் கூத்தன் என்றழைப்பார்கள். கலைகளின் தோற்றுவாய் எனக் கருதப்படும் சிவனுக்கும் அப்பெயர் வழங்கப்படுகிறது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நடிப்பிலும் நடனத்திலும் பேராவலுள்ள நாயகனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாயகன் வசிக்கும் ஃப்லிம் நகரில், சினிமா கனவுகளோடு 35 குடும்பங்கள் வாழ்கின்றன. அதன் உரிமையாளர் அந்த நகரை விற்க முற்படுவதால், ஃப்லிம் நகர்வாசிகள் அவ்விடத்தை வாங்க முயற்சி செய்கின்றனர். நாயகிகளின் நாட்டியப் பள்ளி வளாகம் கடனில் மூழ்கியுள்ளது. அதை மீட்கப் போராடுகின்றனர். இவர்கள் எப்படி இந்தக் கஷ்ட சூழலைச் சமாளித்து தங்கள் சிக்கல்களைத் தீர்க்கின்றனரே என்பதே படத்தின் கதை.

நடனத்தை மையப்படுத்திய படம். அதனாலேயே, பிரபுதேவவின் தம்பி நாகேந்திர பிரசாத்தை வில்லனாகப் போட்டுள்ளனர். ஆனால், அவரது வில்லத்தனம் எங்குத் தொடங்குகிறது என்பதைப் படம் சரியாகக் கடத்தவில்லை. நடனக் கலைஞராக அறிமுகமாகும் அவர், ஒரு வருடத்திற்குப் பின் சட்டென வில்லனாவது ஏனென்ற கேள்வி எழுகிறது. தொடக்கம் முதலே பகையைக் காட்டுகிறாரே தவிர அதில் போதுமான அழுத்தம் இல்லாததால், நாயகனின் இறுதி வெற்றி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஸ்ரீஜிதா கோஷ், கிரா நாராயணன், சோனல் சிங் என படத்தில் மூன்று கதாநாயகிகள். மூவருக்கான ஸ்பேஸ் படத்தில் இருந்தும், அவர்களின் அமெச்சூர் நடிப்பாலும், வழக்கமான திரைக்கதை நகர்வாலும், மூவருமே மனதில் பதிய மறுக்கின்றனர். க்ளைமேக்ஸ் நடனப் போட்டியில், மூன்று கதாநாயகிகளில் எவர் நாயகனுடன் சேர்ந்து ஆடுகின்றனர் என்பது யூகிக்க முடியாத நல்ல ட்விஸ்ட். நாயகனுக்கு ஜோடி என்பதால் ஸ்ரீஜிதா கோஷைப் பிரதான நாயகியாகக் கொள்ளலாம். ஆனால், அவரது மூத்த சகோதரியாக வரும் கிரா நாராயணனை பரதக் கலைஞர் என ஏற்க முடியுமளவு இவரை ஏனோ ஏற்க முடியவில்லை. அதற்கு, வடக்கத்திய முகச்சாயலும், தூக்கலான உதட்டுச் சாயமும் காரணமாக இருக்கலாம். ஸ்ரீஜிதா முகத்தில் இன்னும் இயல்பான பாவனைகளோடு இருந்திருக்கலாம். பாவம், சோனல் சிங். ஒப்புக்குச் சப்பாணியாக உபயோகப்படுத்தியுள்ளனர்.

32 டேக் வாங்கும் சீனியர் ஆர்டிஸ்டாகவும், நாயகனின் அம்மாவாகவும் ஊர்வசி நடித்துள்ளார். வழக்கம் போல் அவரது கதாபாத்திரத்தைக் கலகலப்பாகச் செய்துள்ளார். சம்பந்தமே இல்லாமல், கே.பாக்கியராஜையும் ரேணுகாவையும் கொண்டு அசட்டுத்தனமான நகைச்சுவையைத் திணித்துள்ளனர்.

தயாரிப்பாளரான நீல்கிரீஸ் முருகன், தன் மகன் ராஜ்குமாரை நாயகனாக்கி அழகு பார்த்துள்ளார். நடனக் குடும்பத்தில் பிறந்த நாகேந்திர பிரசாத்தினை இறுதிப் போட்டியில் வெல்லவேண்டும் ராஜ்குமார். ஏனோ தானோ என்றில்லாமல், முழு ஈடுபாட்டுடன் நடனமாடி அசத்துகிறார். இசையமைப்பாளர் பால்ஜீயின் துள்ளலான இசை கதையைச் சுணக்கமின்றிச் செலுத்த உதவுகிறது. ‘மன்க்கிஸ்தா கிங்கிஸ்தா’ என டி.ஆரின் குரலில் வரும் பாடல் நல்ல எனர்ஜியுடன் ஒலிக்கிறது.

நல்ல டிராமாக்குரிய தருணங்கள் படத்தில் மிஸ்ஸாகின்றன. அதில், இயக்குநர் A.L.வெங்கி இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் ஒரு நிறைவினைத் தந்திருக்கும்.