Search
kaatchi-pizhai-fi

காட்சிப்பிழையும், குருட்டுத் தீர்மானங்களும்

தொடர்ந்து ஃபோன் ஒலித்துக் கொண்டே இருந்தது. சிக்னலைத் தாண்டியதும் இடதுபுறம் வண்டியை ஓரங்கட்டிப் பேசினேன். என்னெதிரே ஹெல்மெட் போடாதவர்களை மறித்துக் கொண்டிருந்தார் ட்ராஃபிக் கான்ஸ்டபிள். நான் வண்டியைச் சீராக நகர்த்தியதுமே என்னையும் மறித்தார். ஆவணங்களைச் சரி பார்த்து விட்டு, “உங்களை ஏன் தெரியுமா நிறுத்தினேன்? சிக்னல் விழும் முன்பே, ஃப்ரீ லெஃப்ட் போல் திரும்பிட்டீங்க!” என்றார்.

நான் கொஞ்சம் திகைத்து, “சார் நான் லெஃப்ட்ல இருந்து வரலை. நேரா வந்தேன். ஃபோன் பேச ஓரமா நிறுத்திட்டு வர்றேன்” என்றேன்.

லைசென்ஸை என்னிடம் கொடுத்தவாறு, “அவரைப் பாருங்க” என்றார். அவரருகில் போய் நின்றேன். “என்ன கேஸ்?” என்றார். “சார், நான் நேரா வந்தேன். லெஃப்ட்ல இருந்து வந்தேன் எனச் சொல்லி உங்களைப் பார்க்கச் சொன்னார்” என்றேன். “அவரிடம் போய் பேசுங்க” என்றார்.

மீண்டும் என்னை மடக்கிய கான்ஸ்டபிளிடம் வந்தேன். “என்ன சொன்னார்?” எனக் கேட்டார். “உங்களைப் பார்க்கச் சொன்னார்” என்றேன். “என்னை எதுக்குப் பார்க்கணும்? அவர்ட்ட ஃபைன் கட்டிட்டுக் கிளம்புங்க” என்றார். “சார், நான் நேரா வந்தேன் சார்!! நான் ஏன் ஃபைன் கட்டணும்? முனைல இருக்கிற பெட்டிக் கடைக்காரர்கிட்ட கேளுங்க. அங்க நின்னு தான் பேசினேன். என் ஃபோனை வேணா செக் செய்ங்க” எனச் சொன்னேன்.

“தம்பி, நீங்க நேரா வந்திருக்கலாம்! ஃபோன் வந்ததுக்காக ஓரம் கட்டியிருக்கலாம்! அந்தக் கடைக்காரரும் அதையே சொல்லலாம்! ஆனா நான் பார்க்கலையே! நான் பார்த்திருந்தா ஏன் உங்களை நிறுத்தப் போறேன்!” எனச் சொல்லிக் கொண்டே ஹெல்மெட் போடாமல் வந்த கல்லூரி மாணவன் ஒருவனை மடக்கினார். அவனிடம் இன்ஷ்யூரன்ஸ் இல்லை. வீட்டிலிருக்கு எனச் சொல்லிக் கொண்டிருந்தான்.

“வீட்டுக்கு ஃபோன் செய்து, வாட்ஸ்-அப்பில் அனுப்பச் சொல்லுங்க” என்றார் கான்ஸ்டபிள். அவனெதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான். “ஒன்னு ஃபைனைக் கட்டுங்க. இல்ல வாட்ஸ்-அப்பில் அனுப்பச் சொல்லுங்க. உங்களுக்கு எவ்ளோ ஆப்ஷன்ஸ் தர்றேன் பாருங்க. இவரு (என்னைக் காட்டி), டாக்குமென்ட்ஸ் எல்லாம் சரியா வச்சிருக்கார். ஏதாச்சும் கேட்டமான்னு கேளுங்க. இல்லாததால் தானே உங்களிடம் கேட்கிறேன்” என அவனை ஃபைன் கட்டச் செய்துவிட்டார். முட்டாளாக்கப்படுறோமென்ற கோபம் மெல்ல எழுந்தது.

“நான் லெஃப்ட்ல இருந்து வரவே இல்லை சார். நேரா வந்தேன்.”

“சிக்னல் விழுந்தா சர்ரென நேரா வருவாங்க. லெஃப்ட்ல இருந்து வர்றவன் தான், ரோட்டோட இப்படி ஓரமா வருவான். அதான் சிம்பிள் லாஜிக். நீங்க நின்னு ஃபோன் பேசியதை நான் பார்க்கலை. அப்ப லெஃப்ட்ல இருந்து வந்தீங்கன்னுதான அர்த்தம்?” எனக் கேட்டார்.

Angry Dinசட்டென, “நீங்க பார்க்கலைங்கிறதுக்காக நான் சிக்னலை மீறினேன் என வீண் பழி சுமத்துவீங்களா? சி.சி. டிவி கேமிரால வேணா பாருங்க சார்” எனக் கேட்டு விட்டேன். புன்னகை மன்னனாக இருந்தவரின் முகம் சட்டெனச் சூம்பி, “ஓ.. பார்க்கலாமே! அப்படி ஓரமா நில்லு. பார்ப்போம்” என வண்டியில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டார். “என்னவாம்?” எனக் கேட்டுக் கொண்டே இன்னொருத்தவர் அருகில் வந்தார்.

“இவரு எந்தத் தப்பும் செய்யலையாம். நாம வேணும்னு வீண் பழி போட்டு, அவர் பாக்கெட்டில் இருக்கிற பணத்தை எடுத்து நம்ம பாக்கெட்டில் வச்சு வீட்டுக்கு எடுத்துட்டுப் போறமாம்” என்றார். “அப்படிலாம் சொல்லலை சார். நான் லெஃப்ட்ல இருந்து வரலை. நேரா தான் வந்தேன்னு மட்டுந்தான் சொன்னேன்” என்றேன். இன்னொருத்தவர் என் வண்டி நம்பரைப் பார்த்து கையில் வைத்திருந்த மெஷினில் அடிக்கத் தொடங்கினார்.

“பணத்தை நாங்க எடுத்துக்கலை. கவர்ன்மென்ட்க்குத்தான் போகுது. 100 ரூபாக்கு எல்லாம் கணக்கு பார்க்காதீங்க சார். சந்தோஷமா கொடுத்துட்டுப் போங்க. இன்னிக்கு ஃபுல்லா நீங்க வேற எங்கயும் பணம் கட்ட வேண்டி வராது. இந்த ரெசிப்ட்டைக் காண்பிச்சால் போதும்” என, துஷ்ட சக்திகள் அண்டாமல் இருக்க மந்திரவாதி தாயத்துத் தருவது போலவே ரெசிப்ட்டைக் கொடுத்தார். Violating the stop line என்ற காரணத்துக்காக 100 ரூபாய் அபராதம்.

காட்சிப்பிழை இதழ்

குற்றமே தண்டனை படம் குறித்து இரண்டு கட்டுரைகள் காட்சிப்பிழை இதழில் வந்துள்ளது. ‘விதார்த் தான் கொலை பண்ணார். நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன்’ என சத்தியம் செய்யாத குறையாக உள்ளன அக்கட்டுரைகள் இரண்டும்.

அந்தப் படத்தின் மகத்துவமே, குற்றவாளி யாரென்ற ஆராய்ச்சிக்குச் செல்லாமல் பார்வையாளர்களோடு கண்ணாமூச்சி ஆடி அவர்களின் முடிவிற்கே விடுவதுதான். ரவிச்சந்திரன் (விதார்த்) தான் கொலையாளி என நிறுவ முயன்றால், அதற்கான காரணங்களையாவது தெளிவாக முன் வைக்கவேண்டும். க.காமராசன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இருவருமே இலகுவாய் விதார்த்தைக் கொலையாளியாக்கி விடுகின்றனர்.

விதார்த்தின் முன்னாள் காதலி ஐஸ்வர்யா என்றும், அவளால் அரைக் குருடனென விதார்த் அவமானப்படுத்துகிறான் என்பதோடு காட்சி ‘கட்’டாகிறது. அதை இயக்குநர் இறுதியாகக் காட்டுகிறார். அதனால் அவன் தான் கொலையாளி என பெரும்பாலோர் முடிவுக்கு வந்து விடுகின்றனர். அப்படியான சினிமாவிற்கே நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். கதாப்பாத்திரங்களை மனிதர்களாகப் பார்ப்பதை விட இவர் தான் ஹீரோ, இவர் தான் வில்லன், இவர் தான் காமெடியன் என்ற அடையாளங்களாகதான் தொன்று தொட்டு படம் பார்த்து வருகிறோம். ஆக, படத்தில் கொலை ஒன்று நடந்து விட்டால் கொலையாளன் என்ற ஒருவன் இருந்தே ஆகவேண்டுமென மனம் எதிர்பார்க்கிறது. இயக்குநர் அதை மிகக் கடினப்பட்டுப் பூசி மெழுகி உடைக்க முயன்றாலும், பழக்கத்தோஷத்தில் ஒருவனைப் பலிகடாவாக்குகிறது மனம்.

‘இது திட்டமிட்ட கொலை’ என்கிறார் காமராசன். “ஸ்வேதாவின் (ஐஸ்வர்யா) மரணத்தின் மூலம் தனக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டு, கொலையைச் செய்துள்ளான் என்று தோன்றுகிறது. ஏனென்றால் விஜயபிரகாஷை (ரஹ்மான்) அந்த வீட்டிற்கு வரவழைக்கும் அந்தக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட செல்பேசியை இறுதிக் காட்சியொன்றில் அவன் கொளுத்துகிறான்” என எழுதியுள்ளார். ரஹ்மானுக்கு அப்படியொரு குறுஞ்செய்தி போவதாகப் படத்தில் எந்தக் காட்சியிலும் காட்டப்படவில்லை. “ஸ்வேதா எனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான். கொஞ்ச நேரத்துக்கு முன் தான் ஃபோன்ல பேசினேன். ஒரு மாதிரி டிஸ்டர்ப்டா பேசி வச்சுட்டா. அதான் டவுட்ல என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்” என ரஹ்மான் விதார்த்திடம் கொலை நடந்த இரவு சொல்வார். ஸ்வேதாவிற்கு அதிகம் பேசிய இன்னொரு நம்பரும் ஸ்வேதா பெயரிலேயே வாங்கப்பட்டது என்று மட்டுமே போலிஸ்காரர் சொல்வார். அந்த சிம்மினை உடைய தனது ஃபோனைத்தான் கொளுத்துவார் விதார்த்.

‘இது திட்டமிடப்படாத கொலை’ என்கிறார் அழகர்சாமியின் குதிரை படப் புகழ் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. படத்தில் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு காமராசன் காரணம் கண்டுபிடித்தது போல் கூட இல்லாமல், ‘கோபத்தில் கொலை செய்துவிட்டான்’ என்ற ஒற்றை வரியில் விதார்த்தைக் குற்றவாளியாக்கி விடுகிறார் பாஸ்கர் சக்தி. வலிந்து திணிக்கப்பட்ட அந்த முடிவு தான் படத்தின் சிக்கல் என்கிறார். “அவன் கோபத்தில் ஒரு கொலை செய்து விட்ட பின் அவனது நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? ஒன்று கண்காணாமல் ஓடிப் போக வேண்டும். அல்லது வீட்டைப் பூட்டிக் கொண்டு தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லிச் சாதிக்க வேண்டும் இல்லையா?” எனக் கூறி, கொலை நடந்த அன்று ஸ்வேதா வீட்டுக்குள் விதார்த் செல்வது மிகப் பெரும் முரண் என்றும், திரைக்கதையிலுள்ள சிக்கல் என்றும் சொல்கிறார்.

இயக்குநர் மணிகண்டன் எதையும் வலிந்து திணிக்கவில்லை. உலக சினிமாக்களைத் திரைவிழாக்களில் பார்க்கும் பழக்கமுடைய பாஸ்கர் சக்தி, படத்தில் வரும் ஒரு பாத்திரம் தான் கொலை செய்திருக்க வேண்டும் என விதார்த்தைக் குற்றவாளியாக தீர்மானித்துக் கொள்கிறார். அந்தத் தீர்மானத்திற்குச் சாதகமற்ற காட்சிகளை எல்லாம் ‘முரண்’ என விமர்சிக்கிறார். தன் முன்னால் காதலியின் வீட்டின் முன்பு, ஒருவர் பதைபதைப்போடு நின்று கொண்டும், பின் வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டி வெளிச்சத்தை அணைக்கும் பொழுது, விதார்த் அங்குச் சென்று விசாரிப்பது மிக இயல்பான செயல்தானே! குறைந்தபட்ச சந்தேகத்தினைக் கூட விதார்த்திற்குச் சாதகமாக வழங்க மறுக்கிறார் பாஸ்கர் சக்தி.

Kuttramae thandanai Aiswariya‘எங்களுக்குள் நட்புதான். சில சமயம் ஸ்வேதாவுடன் உடலுறவு வைத்துக் கொண்டது உண்டு. கல்யாணம் செய்து கொள்ள கேட்ட போழுது சண்டை போட்டது உண்மைத்தான். ஆனா..’ என அருணை அதற்கு மேல் எதுவும் பேச விடாமல், “அருண் கொலையைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன. ஆகவே, அவர் தான் கொலை செய்தாரென நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது” என நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார். இங்கே, சட்டம் தன் கடமையைச் செய்துவிட்டது. ‘ரவி ஸ்வேதாவைக் காதலித்தான். அவள் ரவியை அவமானப்படுத்தினாள். ஆக, அவன் தான் கொன்னுட்டான்’ என எழுத்தாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். பொதுப்புத்தி தன் கடமையைச் செய்துவிட்டது. பொதுப்புத்திக்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கன்று.

ஆனால், ரஹ்மான் கொலை செய்ததற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக படத்தில் சித்தரிக்கப்படுகிறது.

1. கொலை நடக்கும் இரவு, ரஹ்மான் விதார்த்திடம் சொல்வார்: “ஸ்வேதா எனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான். கொஞ்ச நேரத்துக்கு முன் தான் ஃபோன்ல பேசினேன். ஒரு மாதிரி டிஸ்டர்ப்டா பேசி வச்சுட்டா. அதான் டவுட்ல என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்.”

2. “குடலறுந்து, கழுத்து சீவப்பட்ட நிலையில் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை போராடியிருக்காங்க.” – மருத்துவர் நீதி மன்றத்தில் போஸ்ட்-மார்ட்டம் பற்றிச் சொல்வது.

3. “புது நம்பர் மாத்தி அருண்க்கு மட்டுந்தான் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கா!” – போலிஸ் தரப்பு. சாகும் முன் கடைசியாக ரஹ்மானுக்குத்தான் பேசினாள் என போலிஸ் எங்கும் விசாரிப்பதில்லை. ஆக, ஃபோன் வந்ததாக ரஹ்மான் சொன்னது பொய். ஐஸ்வர்யாவின் பழைய நம்பரில் இருந்து, நிறைய அழைப்புகள் வந்துள்ளதைப் பற்றி மட்டுமே போலிஸ் விசாரிப்பார்கள்.

4. அப்படியே ரஹ்மான் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில், மருத்துவரின் போஸ்ட்-மார்ட்டம் ரிப்போர்ட் படி இரவில்தான் ஐஸ்வர்யா கொல்லப்பட்டிருப்பார். விதார்த் அவமானப்பட்டுக் கிளம்புவது மாலை வேளையில். ‘ஈவ்னிங்’ என வசனத்தில் வரும்; லைட்டிங்கினைக் கொண்டு யூகிக்கலாம்.

5. 25 லட்சம் தரச் சம்மதிப்பதோடு, அருணை மாட்டி விடும்படியும் விதார்த்திடம் பேரம் பேசுகிறார் ரஹ்மான்.

ஆக, ரஹ்மான் மீது சந்தேகப்படுவதற்கு திரைக்கதை இடம் கொடுக்கிறது. ஆனால் அவர் தான் கொலையாளியெனத் தீர்மானம் செய்ய முடியாது. இப்படிக் கொலையைப் பற்றி எதுவும் தெளிவாகச் சொல்லாமல், இயக்குநர் யூகங்களுக்கு மட்டுமே வழி வகுத்துள்ளார். போலிசிடம் ஒன்றும் சொல்லாமல் விட்டதற்காக ரஹ்மான் விதார்த்க்குப் பணம் தருகிறார். அப்படி விதார்த் சொல்லியிருந்தாலும், பணபலம் மிக்க ரஹ்மான் வெளியில் வந்துவிடுவார். அவரது இமேஜ்க்கு பங்கம் விளையுமே தவிர வாழ்க்கை பறிப் போகாது. ஆனால், ‘பசி’ சத்யா (இஸ்திரிக்காரம்மா) போலிசிடம் விதார்த்தை ஸ்வேதா வீட்டில் பார்த்ததாகச் சொல்லியிருந்ததால், விதார்த்தின் வாழ்க்கையே பறிப் போயிருக்கும். ஊரை விட்டு ஒரேடியாகப் போகும் பொழுது, தனக்குக் கிடைத்த பணத்தில் கொஞ்சத்தை நன்றிக்கடனாகக் கொடுத்து விட்டுப் போகிறார் விதார்த். சாமானியனுக்குள்ள குணம்தானே அது?

கண் பார்வை முற்றிலும் போய் விடுமெனத் தெரிந்ததும் வெடித்து அழுகிறார் விதார்த். (அப்படித்தான் காட்சிக் கோர்வை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவரிடம் பேசும் பொழுது வலது கண்ணில் அடிபட்ட தழும்பு இருக்கும். அழும் பொழுது அப்படி எதுவும் இருக்காது. கன்ட்டினியூட்டி மிஸ்ஸோ என்னவோ?) மீண்டும் பார்வையாளனைக் குழப்ப, நாசரின் குரல் வாய்ஸ்-ஓவராக ஒலிக்கிறது. ‘தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு குற்றம் பண்ணிட்ட! அதை மறைக்க திட்டம் போட்டு இன்னொரு குற்றம் பண்ணினா, சட்டத்தில் இருந்து வேணா தப்பிக்கலாம். ஆனா உன் மனசு உன்னை ஒரு நாள் கேள்வி கேட்கும். அந்தச் சாபத்தில் இருந்து தப்பிக்க முடியுமான்னு பார்த்துக்கோ!’ என நாசரின் குரல் கேட்கிறது. “300 பேரை பின்னுக்குத் தள்ளிட்டு, லஞ்சம் கொடுத்து முன்னுக்கு வந்துட்ட. யாருக்கும் நான் நல்லது பண்ணலைன்னாலும், யாருக்கும் கெடுதல் பண்ணதில்லை” என நாசர் விதார்த்துடனான உறவைத் துண்டித்துக் கொள்கிறார். ஆக, நாசர் சொன்ன குற்றங்களாக இரண்டைப் பாவிக்கலாம். ஒன்று, 5 லட்சத்தை லஞ்சமாக மருத்துவமனையில் கட்ட முடிவெடுத்தது. இன்னொன்று, அருண் அப்பாவிடமும் பேரம் பேசி 5 லட்சம் கேட்டது. கண் போன பின்பும், விதார்த்துக்கு ஒரு வாழ்க்கை கிடைத்துவிடுகிறது. ஆனாலும், 25 லட்சம் வாங்கிக் கொண்டு பொய்ச்சாட்சி சொன்ன உறுத்தல் வாழ்நாள் முழுவதும் உறுத்தத்தானே செய்யும்!

இந்தப் படத்தில் ஓர் அழகான காதல் கதை இருக்கிறது. ரவிக்கு 3,20,000 ரூபாய் தேவையென்பதும், வேலை செய்ய முடியாதளவு உடலில் ஏதோ பிரச்சனை என்பதும் அனுவிற்குத் (பூஜா தேவாரியா) தெரியும். 22 லட்சம் பணம் எப்படி வந்ததெனக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலா ரவியோடு அனு வாழ்வாள்? மனநிறைவோடு கண் தெரியாத கணவனோடு பேசிக் கொண்டே அனு நடந்து செல்லும் படத்தின் இறுதிக்காட்சி கவிதையாக உள்ளது.

பார்வையாளன் மீது நம்பிக்கை கொண்டு, அவனோடு கண்ணாமூச்சி ஆடும் திரைக்கதையில், இன்னார் தான் குற்றவாளியென எந்தத் திறனாய்வுமின்றி எழுத்தாளர்கள் நிறுவுவது துரதிர்ஷ்டம். இந்தக் குற்றத்திற்கான தண்டனையாக, சுமோக்கள் பறக்கும் தமிழ்ப்படங்களில் இருந்து, இந்த ஜென்மத்தில் நமக்கு விடுதலை கிடைக்காது.

– தினேஷ் ராம்