Search

லைஃப் விமர்சனம்

Life movie review

பூமிக்கு வெளியில் வாழும் உயிரினம் ஒன்றைச் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். ஓர் அணு உயிரியான அதைக் கண்டுபிடித்ததன் மூலம் மகத்தானதொரு பெருமிதத்தில் உள்ளது ஆறு பேர் கொண்ட அக்குழு. அவ்வுயிரி அசைந்து தன் இருப்பைக் காட்டியவுடன் தான் படத்தின் பெயரே போடுகிறார்கள்.

ஒளி புகும்தன்மையோடு மிக அழகாய் இருந்த அந்த ஓர் அணு உயிரி, தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு பல்லணு உயிரியாக வளர்கிறது. அதிபுத்திசாலியாய்ப் பரிணமிக்கும் அந்த உயிரால் என்னென்ன விளைவுகள் நேர்கிறது என்பதுதான் படத்தின் கதை.

கதை இப்படித் தான் செல்லும் என்ற பார்வையாளர்களின் யூகத்தை மெய்ப்பிக்காதபடிக்கு மெனக்கெட்டிருக்கலாம் திரைக்கதை எழுதியுள்ள ரெட் ரீஸும், பால் வெர்னிக்கும். எனினும் படத்தைச் சுவாரசியப்படுத்துவது கலை இயக்குநர் ஸ்டீவன் லாரென்ஸும், இசையமைப்பாளர் எக்ஸ்த்ராந்த்தும், ஒளிப்பதிவாளர் ஷேமஸ் மேக்-கார்வியுமுமே! ஸ்டீவன் லாரென்ஸ் வடிவமைத்திருக்கும் அந்த சர்வதேச விண் நிலையம் வழக்கம் போல் பார்வையாளர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. அதற்குள் மிதந்தோ ஊர்ந்தோ செல்லும் கதாபாத்திரங்களை அழகாக படம்பிடித்துள்ளார் ஷேமஸ். விஞ்ஞானிகள், அமெரிக்க பள்ளி மாணவர்களிடம் என்ன சாப்பிடுவோம், எப்படி கழிவறையைப் பயன்படுத்துவோம் என்றெல்லாம் விண்ணில் இருந்தவாறே விவாதிப்பது சுவாரசியமான காட்சி. பள்ளி மாணவர்கள் தான், செவ்வாய் கிரகத்து உயிரிக்கு கால்வின் என்று பெயரும் வைக்கின்றனர்.

குழுவிலுள்ள உயிரியலாளரான ஹ்யூ டெர்ரிக்கு, கால்வின் மீது ஏன் பிரியம் எழுகிறது என்பதை அழுத்தமாகச் சித்தரிக்கத் தவறியுள்ளார் இயக்குநர் டேனியல் எஸ்பினோசா. ஹாலிவுட் க்ளைமேக்ஸ்களின் வழக்கத்திற்கேற்ப அடுத்த பாகத்திற்கான இழையோடு படத்தை முடித்துள்ளனர். ரையன் ரெனால்ட்ஸ் படத்தின் தொடக்கத்திலேயே முதல் நபராக மாண்டு விட, ஜேக் யீல்யின்ஹால் தான் படத்தின் நாயகனாகிறார். தனது முந்தைய படங்களை விடவும் மிக இளமையாகக் காட்சியளிக்கிறார். அவர் மேற்கொள்ளும் ஒரு நாயகத்துவம் மிக்க தியாகம் எதிர்பார்த்தது போல் நிகழாததால், படம் கொஞ்சம் நிறைவற்றதாய் மனதில் தங்காமல் போகிறது. வேட்டையாடும் சமூகமான ஆதி மனிதர்களின் எச்சமான நமக்கு, நம்மை ஒரு உயிரி வேட்டையாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாதது காரணமாக இருக்கலாம்.

அடல்ட்ஸ் ஒன்லி படம் இது. வளர வளர ஓரணு உயிரி கோரமான மிருகமாக மாறி விடுகிறது. விரலை நீட்டினால் விளையாடும் அதன் குறும்புத்தனம் மறைந்து பயங்கரமான ஹாலிவுட் ஏலியனாக உரு கொள்கிறது. வேற்றுக்கிரகவாசிகள் எப்பவும் கோரமாகவும், வேட்டையாடவும் தான் செய்ய வேண்டுமா? ரோரி என்ற கதாபாத்திரம் உயிரியின் தாக்குதலால் ரத்தம் கக்கிச் சாகிறார். அவர் கக்கும் ரத்தம் புவியீர்ப்பு விசை இல்லாததால் காற்றில் அழகாய் மிதக்கிறது. காட்சியின் அழகியலாலோ என்னவோ, மனதில் எந்தவித பதற்றமும் எழவில்லை.

நாயகன் ஜேக் வேற்றுக்கிரக மிருகத்தைச் சிறைபிடிக்க ஒரு யுக்தியைக் கையாள்கிறார். அப்பொறியில் சிக்கும் அம்மிருகம், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆக்சிஜன் ட்யூபை அழகாய்க் கட்டிப் பிடித்துக் கொள்கிறது. நாயகனின் பொறியில் சிக்கினாலும், படத்தின் க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது.