அட்வைஸ் கேட்டகரியில் வரும் படங்கள் நல்ல கலைத்தன்மையோடு இருப்பதில்லை என்ற விமர்சனம் சமீபகாலமாக அதிகமாக வைக்கப்படுகிறது. அந்த விமர்சனத்திற்கு வலு சேர்ப்பது போல் தான் சில படங்களும் வெளியாகின்றன. “ஆ, ஊ”ன்னா சாட்டையைச் சுழட்டி விடுகிறார்கள். ஆனால் மாயநதி அதிலிருந்து விலகி ஒரு தனித்துவத்தைth தொட முயற்சி செய்துள்ளது.
நாயகி வெண்பா, அப்பாவின் கனவைத் தன் நினைவெனக் கருதி 12-ஆம் வகுப்பில் முதலாவதாகத் தேர்ச்சி பெறப் படிக்கிறார். அவருக்குள் காதலனாக நுழைந்த ஆட்டோ டிரைவர் அபி சரவணன் படிப்பில் தேக்கத்தை ஏற்படுத்துகிறார். அப்பாவின் கனவுக்கும், இடையில் தோன்றிய அப்பாவித்தனமான காதலுக்கும் இடையில் என்னானது என்பதே படத்தின் கதை.
அப்பாவாக ஆடுகளம் நரேனும், மகளாக வெண்பாவும் நடிப்பில் ஒரு அத்தியாயத்தை எழுதி இருக்கிறார்கள். அப்பா மகளுக்கான கெமிஸ்ட்ரி அத்தனை அழகாகப் பொருந்தியுள்ளது. அபி சரவணன் கேரக்டர் அந்தளவிற்கு ஸ்ட்ராங்காக எழுதப்படவில்லை. நடிப்பும் அப்படியே! அப்புக்குட்டி அவரின் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். சக ஆட்டோ ஓட்டுநராக வரும் கார்த்திக் ராஜா இயல்பான நடிப்பால் வசீகரிக்கிறார்.
பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் சரியாக கவனம் செலுத்தி மனதை இலகுவாக்கி விடுகிறார் இசையமைப்பாளர் பவதாரிணி. ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் பார்க்கும் கண்களுக்குப் பழுதில்லாத வகையில் உள்ளது.
காதலுக்கு என்று ஒரு வயது இருக்கிறது என்பதைச் சொல்லும் படம், வயதை மீறிய காதல் எதனால் வருகிறது என்பதையும் அலசி இருக்கிறது. ஆசிட் கலாச்சாரம் எந்தளவிற்கு நம் பிள்ளைகள் மனதில் ஊடுருவியுள்ளது என்பதையும் இயக்குநர் தெளிவாகப் பேசியுள்ளார்.
உறுதி என்பது மிக முக்கியம். அதை உருக்குலைக்க எது வந்தாலும் நம் உறுதிப்பாடு உடைந்து விடக்கூடாது என்று படம் அறிவுறுத்துகிறது. மேலும் வெண்பாவிற்கு எத்தனை வலிகள் சேர்ந்தாலும் இறுதி வரை அவள் தன் பயணத்தைத் துவளாமல் தொடர்கிறார் ஒரு நதிபோல! அதுதான் குறைகள் மறந்து மாயநதியைக் கொண்டாட வைக்கிறது.
– ஜெகன் சேட்