Search
the-ballad-of-buster-scruggs-movie-review

‘மீல் டிக்கெட்’ எனும் அட்சய பாத்திரம்

the-ballad-of-buster-scruggs-movie-review

இந்த வருடம் வந்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கியமான திரைப்படம், The Ballad of Buster Scruggs 2018 (பஸ்டர் ஸ்க்ரக்ஸுடைய பிரபலமான பாடல்).

கோயன் சகோதரர்கள் எழுதி இயக்கியது. கோயன் சகோதரர்கள் சம கால ஹாலிவுட்டின் தனித்துவமான படைப்பாளர்கள். Fargo, No country for old man போன்ற என்றும் நினைவில் தங்கும் படங்களை அளித்தவர்கள்.

இந்தத் திரைப்படம் Western ஜானரில் Anthology வகையைச் சார்ந்த திரைப்படம். Western ஜானர் என்றாலே பரந்த வறட்டு நிலங்கள், குதிரையுடன் சுற்றும் கௌபாய்கள், சாரட் வண்டி, கிளாசிக்கான இசை என்று 200 வருடங்களுக்கு முந்தைய அமெரிக்க நிலப்பரப்பின் கதைகள் உற்சாகம் தரும்.

அந்தப் பின்னணியில், ஒரு நாவலைப் போல இரண்டு மணி நேரம் ஒரு கதையைக்கூறாமல், சிறுகதைத் தொகுப்பைப் போல 6 குறும்படங்களை இரண்டு மணி நேரத்தில் அடக்கியிருக்கிறார்கள். இந்த வகை anthology படங்களில் சில வருடங்களுக்கு முன்னாடி வந்த Wild storiesக்கு அடுத்து இந்தப் படம் அசத்துகிறது.

மிக எளிமையான கதைக்கருக்கள் தான். கொம்பனுக்குக் கொம்பன் உண்டு, எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும், எது தேவையோ அதுவே தர்மம், உழைப்புக்கான கூலி நிச்சயம் கிடைக்கும், விதியை அனுபவித்தே ஆகவேண்டும், ஆபத்தை எதிர்கொள்வதே தப்பிக்கும் வழி என ஒவ்வொரு கதையும் அடிப்படையான ஒரு கருத்தை வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது.

இதில் மூன்றாவது கதையான Meal Ticket மனதை அதிரச்செய்யும் படம். கருணையின் அளவீடும், பிழைப்புவாதத்தின் உச்சமும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. ஆக்‌ஷன் ஹீரோ லியம் நீசனை இந்தக் கதையில் நடிக்க வைத்ததே பெரிய ஆச்சரியம் தான்.

ஒரு வயதான கலைஞர் (லியம் நீசன்), இரண்டு கைகள், இரண்டு கால்கள் இல்லாத ஹாரிசனை (ஹாரி மெல்லிங்) தன்னுடைய காட்சி வண்டியில் ஊர் ஊராகக் கொண்டு சென்று இரவு நேரங்களில் நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்கிறார். ஹாரிசன், ஆங்கில இலக்கியத்தில் ஆழமான புலமை உடையவர். நிகழ்ச்சிகளின் போது மணிக்கணக்காக, ஷெல்லியுடைய பாடல்கள், ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள், ஆப்ரஹாம் லிங்கனுடைய மக்களாட்சி குறித்த பிரபலமான கெட்டிஸ்பர்க் பேச்சு ஆகியவற்றைப் பகிர்வார். பிறகு அந்த வயதான கலைஞர் பார்வையாளர்களிடம் நன்கொடை வசூலித்து அதில் இருவரும் வாழ்வார்கள். எந்தக்காட்சியிலும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே இல்லை.

காலப்போக்கில் இந்த நிகழ்ச்சியால் வருமானம் மிகவும் குறைந்து போய்விடுகிறது. அந்த லியம் நீசன், சந்தையில் புதியதாக வந்திருக்கும் கோழி ஒன்று மக்கள் கேட்கும் கணக்கு புதிர்களை சரியாகக் கணித்துப் பதிலளிப்பதைப் பார்க்கிறார். சேமித்த பணத்தை எல்லாம் கொடுத்து அந்தக் கோழியை விலைக்கு வாங்கிக் கொள்கிறார். பிறகு அடுத்த ஊருக்கு அந்தக் கோழியுடனும், ஹாரிசனுடனும் பயணம் செய்கிறார். போகும் வழியில் ஒரு பெரிய ஆற்று பாலத்தைப் பார்க்கிறார். அங்கு தனது குதிரை வண்டியை நிறுத்தி, பாலத்தின் மேலிருந்து ஒரு பெரிய கல்லை ஆற்றுக்குள் வீசி, அந்தக் கல் எப்படி விழுகிறது எனச் சோதிக்கிறார். அடுத்த காட்சியில் அவர் குதிரை சாரட்டை ஓட்டிக் கொண்டிருக்கிறார். வண்டிக்குள் அந்த கோழி மட்டும் இருக்கிறது.

ஹாரி, தன்னுடைய உரைகளில் எல்லாம் ஆப்ரஹாம் லிங்கனுடைய பேச்சிலிருந்து, மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தேசம் அழுகுவதில்லை என்று இறுதியாகக் குறிப்பிடுவார். மக்களால் புறக்கணிக்கப்பட்ட அவரது திறமை, அவரது உயிரையே பறிப்பது ஆழமான சட்டயர். எது தேவையோ அதுவே தர்மம் என்பது அந்த லியமுடைய செயல்வழியே புலப்படுகிறது. அவனைப் பொறுத்தவரை, கோழியும் சரி, ஹாரியும் சரி, அவர்கள் தான் பொருளீட்ட உதவும் ஒரு கம்மாடிட்டிகள் தான். அதற்கான சந்தை விருப்பம் இருக்கும் வரை அதற்கான மதிப்பும் இருக்கும். இதனைச் சமகால கார்ப்பரேட் கலாச்சாரத்துடன் தொடர்புப்படுத்தவும் முடியும்.

இப்படி மீதமிருக்கும் 5 கதைகளும் அதனதன் அளவில் பொழுதுபோக்கு என்ற அளவில் மட்டுமல்லாமல் நாம் வாழும் சமூகத்தின் மீதான விமர்சனமாகவே கையாளப்பட்டுள்ளது. அதுவே படைப்பின் தரிசனம். இந்தத் திரைப்படம் netflix-இல் காணக் கிடைக்கிறது.

– ஜானகிராமன் நா