Meyadhaa-Maan-review-fi

மேயாத மான் விமர்சனம்

Meyaadha maan movie review

மேயாத மான் என்ற தலைப்பு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. ஏன் பரவசமூட்டுகிறது என்று கூடச் சொல்லலாம். தலைப்பு விஷயத்திலேயே நாயகன் ஓர் அடிப்படை நேர்மையைக் கடைபிடித்துள்ளார் என்றே தோன்றுகிறது. ‘ஸ்ரீவள்ளி (1945)’ படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. முருகன் வள்ளியைக் கரெக்ட் செய்யப் பாடும் பாடலில், வள்ளியினது கற்பைப் போற்றும் வகையில் வரும் பதம்தான் ‘மேயாத மான்’. அதாவது படி தாண்டா விர்ஜின் கேர்ள் என்பதன் கவித்துவ பதம் தான் மேயாத மான். ஆனால் இதையே இயக்குநர் ரத்ன குமார், நாயகன் தான் மேயாத மான் என மிகச் சாதுரியமாக நிறுவுகிறார். ஒரே வகுப்பில் படித்தும், மூன்று வருடமாக நாயகியிடம் காதலைச் சொல்லாத நாயகன் (இதயம் முரளி) தான் மேயாத மேனாம். கண் முன் புல்லுக்கட்டு இருந்தும் அதை மேயாதவன், அதாவது காதலைச் சொல்லாததால் நாயகன் மேயாத மேனாம். அடடே.!

ஆனால், நாயகனுக்கு ஏன் நாயகியைப் பிடிக்கிறது என்றால், ‘வீடு விட்டா காலேஜ், காலேஜ் முடிஞ்சா வீடு, யாரிடமும் பேசாம, ஏன் கேன்டீனுக்குக் கூடப் போக மாட்டா. வீட்ல பார்த்த பையன் கூடவே என்கேஜ்மென்ட் பண்ணிக்கிறா-ன்னா அவ எவ்ளோ நல்லவ?’ எனச் சிலாகிக்கிறான். அடடடே.!!

மான்கள் மேய்ச்சலில் ஈடுபடுவதுதான் படத்தின் கதை.

வழக்கமான காதல் கதையாகத் தொடங்கும் படம், நாயகனின் நண்பன் வினோதாக வரும் விவேக் பிரசன்னாவின் நடிப்பில் பட்டையைக் கிளப்புகிறது (இவர் விக்ரம் வேதா படத்தில், ஹெளசிங்-போர்ட் சந்தில் கஞ்சா விற்றுத் தொழிலதிபராக மாறும் ரவியாக நடித்திருப்பார்). நாயகன் – நாயகி காதல் கதையை அப்படியே ஒதுக்கி விட்டு, விவேக் பிரசன்னாவிடம் முதல் பாதி முழுவதும் நிலை கொள்கிறது. நிச்சயமாக, விவேக் பிரசன்னா தவிர்க்க முடியாத பிசியான குணசித்திர நடிகராக வலம் வருவார். வைபவின் தங்கை சுடர்விழியாக நடித்திருக்கும் இந்துஜாவும் கலக்கியுள்ளார்.

Actress Indhujaபடத்தின் முதல் பாதி மிக நன்றாக உள்ளது. ஒரு கொண்டாட்ட மனநிலைக்குத் தள்ளுகிறது. பாடல்களும், பின்னணி இசையும் அதற்கு முக்கிய காரணம். இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணனும், பிரதீப் குமாரும் அதகளப்படுத்தியுள்ளனர். ‘எங்க வீட்டு குத்துவிளக்கே’ எனும் துள்ளலான கானா பாடலில், கட்-ஷாட்களாகப் பல்வேறு முகங்கள் காட்டப்படுகின்றன. மிக ரசனையாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். விது அய்யன்னா ஒளிப்பதிவில் ராயபுரம் கொண்டாட்டப் பூமியாக மிளிர்கிறது. அண்ணன் – தங்கை பாசத்தைக் குத்துப்பாட்டாக மாற்றி அசத்தியுள்ளனர். ‘அனபெல் பேயி வர்றா; அன்பில் குட்டி தாய் வர்றா’ என விவேகின் பாடல் வரிகளும் அற்புதமாக உள்ளன. நிஜமாகவே படம் மியூஸிக்கல் ட்ரீட் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்’ என்று கிராமோஃபோனில் ஒலிக்கும் பாடல் ஸ்ட்ரக் ஆகி விடும் காட்சி அசத்தல்.

இதயம் முரளியாக வைபவ் கலக்கியுள்ளார். ‘மேயாத மான்’ என்ற பெயரில் மியூசிக் பேண்ட் ஒன்று நடத்துகிறார். “எப்பவும் ஜலத்தை வாயில் வச்சு தான் குடிப்பேளா!?” என்ற நாயகியின் அம்மா கேட்கும் கேள்விக்கு வைபவ் தரும் பதிலால் திரையரங்கம் சிரிப்பொலியில் அதிர்கிறது. நல்ல பொண்ணு அல்லது மேயாத மானைக் காதலிக்கும் அக்மார்க் தமிழ் சினிமா நாயகன். ‘எங்களை மாதிரி பசங்க ஏன் தெரியுமா காதலைச் சொல்லலை?’ என்ற அவரது க்ளைமேக்ஸ் வியாக்கியானத்தை இயக்குநர் ரத்ன குமார் தவிர்த்திருக்கலாம். மதுமிதாவாக நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர் கவர்கிறார். முதல் பாதியில் வைபவின் தங்கையாக நடிக்கும் இந்துஜா தான் பிரதான நாயகியோ என்ற ஐயத்தை எழுப்புகிறார். இரண்டாம் பாதியில் தான் ப்ரியாவிற்குத் திரைக்கதை இடமளிக்கிறது.கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அவியல் படத்தின் கதாநாயகி அம்ருதா, இதில் நாயகியின் தோழி பிரியங்காவாக வருகிறார். ஆனால், இந்துஜாவுக்கும் விவேக் பிரசன்னாவுக்கும் கிடைத்த அட்டகாசமான வாய்ப்பு இவருக்கு வாய்க்கவில்லை.

முதல் பாதியில் இருந்த கொண்டாட்டம், இரண்டாம் பாதியின் யூகிக்க முடிந்த வழக்கமான தமிழ் சினிமா ஃப்ளோவினால் இல்லாமல் போகிறது. இதற்கே கதை இரண்டாம் பாதியில் தான் தொடங்குகிறது. கதையே இல்லாமல் முதல் பாதியை ஜாலியாக ஒப்பேத்தியுள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ், இதே போன்று ரசனையான படங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதே இதுதமிழின் விழைவும் கோரிக்கையும்.

Comments

comments
One thought on “மேயாத மான் விமர்சனம்

Comments are closed.