Search

எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

MGR: A life

ஈராக்கில் பணி புரியும் ஐ.நா. சபை அதிகாரியான ஆர்.கண்ணன், “MGR: A Life” எனும் புத்தத்தை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா, 2017 ஜூலை 8ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. புத்தகத்தை பாராளமன்ற உறுப்பினர் திரு. சசி தரூர் வெளியிட, எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவரான திரு.இராம.வீரப்பன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய சசி தரூர், “நானும் எம்.ஜி.ஆரின் ஊரான பாலக்காட்டைச் சேர்ந்தவன் தான். எனது குழந்தைப் பருவத்தின் ஹீரோ அவர். என் சகோதரர்களுடன் பல எம்.ஜி.ஆர். படங்களை ரசித்திருக்கிறேன். எம்.ஜி.ஆர். தான் இந்திய அரசியலில் சாதித்த முதல் சினிமா சூப்பர் ஸ்டார். தமிழ்நாட்டில், தேசிய கட்சிக்கும், மாநில கட்சிக்கும் இருந்த அரசியல் போட்டியை, மாநில கட்சிகளுக்கு இடையேயான போட்டியாக மற்றியவர் எம்.ஜி.ஆர். முப்பது வருடங்கள் முடிந்த பிறகும், எங்களையும் (காங்கிரஸ்) சேர்த்து எந்தத் தேசியக் கட்சிகளாலும் தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. அதற்கு எம்.ஜி.ஆர். தான் காரணம்.

அவரைத் தவிர அரசியலில் யாரும் இத்தகைய மகத்தான சாதனையைச் செய்ததில்லை. ஆந்திராவில் என்.டி.ஆர்.க்கு அப்படியொரு புகழுண்டு என்றாலும், அவரது கடைசி கால அரசியல் வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கடைசி வரையிலும் அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகத்தில் அரிதான புகைப்படங்களைத் தேடி இணைத்துள்ளார் கண்ணன். எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த புகைப்படத்தைச் சுட்டிக் காட்டி ஆர்.எம்.வீரப்பனும் அதையே சொன்னார். நான் அந்தப் படத்தை என் சிறு வயதில் பார்த்துள்ளேன். எம்.ஜி.ஆரின் வாழ்க்கையைக் குறித்து மிகச் சுவாரசியமாக எழுதியுள்ளார் கண்ணன். நடிக்க ஆசைப்பட்டு வந்தவரல்ல எம்.ஜி.ஆர். குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக நடிக்க வந்தார். அதை அவர் என்றுமே மறக்கவில்லை. அதனால் தான் காமராஜரால் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினார். அதனால் 69 லட்சம் குழந்தைகள் பயன் அடைந்தனர். அவர் செய்த மகத்தான சாதனைகளில் ஒன்று அது. பசியுடன் உள்ள குழந்தையால் எப்படிக் கல்வி கற்க முடியுமென்ற கேள்வி தான் அவரை மதிய உணவு திட்டத்தைச் செயல்படுத்த வைத்தது. அந்தத் திட்டம், பின் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. அவரது அந்தப் பெருந்தன்மையை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். அவரது வாழ்க்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது” என்றார்.

‘இந்து’ ராம் பேசுகையில், “ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான். அவரைப் போல் தங்களுக்கும் மக்கள் செல்வாக்கு இருக்கென்று எண்ணி அரசியலுக்கு வர நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அவரது அரசியல் வளர்ச்சி என்பது திராவிட இயக்கத்தின் வளர்ச்சியோடு ஒன்றறக் கலந்தது. இன்றைய சூப்பர் ஸ்டார்கள் யாரேனும் எம்.ஜி.ஆரைப் போல சுலபமாக ஆட்சிக் கட்டிலில் அமரலாம் என நினைத்தால், அதை விடப் பெரிய முட்டாள்த்தனம் வேறில்லை” என்று எம்.ஜி.ஆரின் தனித்தன்மையைப் புகழ்ந்தார்.

MGR - A lifeஎம்.ஜி.ஆருடன் பழகியவரும், தற்போதைய காங்கிரஸ் தலைவருமான திரு. திருநாவுக்கரசர் பேசுகையில், “எம்.ஜி.ஆருடன் பயணம் செய்தவர்களால் கூட இப்படி எழுத முடியாது. திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் எம்.ஜி.ஆருடன் 37 வருடங்கள் இருந்தவர். அவரால் கூட இப்படி எழுத முடியாது. எந்தப் பக்கமும் சார்புமின்றி, யார் மனமும் வருத்தப்படாதளவுக்கு எழுதியிருக்கிறார். ஆர். கண்ணன் உண்மையை மட்டுமே சொல்லியிருக்கிறார்; அதையும் மென்மையாகச் சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். ஒரே ஒரு ரூபாயைக் கூட அவர் தன் சொந்த செலவிற்குப் பயன்படுத்தியதில்லை. பார்க்கத்தான் ராஜா மாதிரி இருப்பார். எளிமையாக வாழ்ந்தார். முதலமைச்சராக இருந்த பொழுது கூட, தன் வீட்டின் உடைந்த வாசற்படியை அவர் சரி செய்து கொள்ளவே இல்லை. எனக்குத் தெரிந்து அது கடைசி வரை அப்படியே தான் இருந்தது. நகைகளிலும் விருப்பமில்லாதவர். ஒருமுறை ஒரு அமைச்சர் நகை போட்டுக் கொண்டு வந்தார். வீட்டுப் பெண்களுக்கு வாங்கிக் கொடுங்க எனச் சொன்னார்.

ஒருமுறை பிரின்ஸ் சார்லஸ் தமிழ்நாடு வந்தார். நான் தான் அவரை ஏர்போர்ட்டில் இருந்து வரவேற்று, முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்திக்க அழைத்துச் செல்கிறேன். கர்சீப்பிற்குக் கூட வலிக்காத மாதிரி பயன்படுத்துவார் எம்.ஜி.ஆர். திரும்பிச் செல்லும் பொழுது, “எம்.ஜி.ஆர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவரா?” என என்னிடம் விசாரித்தார் பிரின்ஸ் சார்லஸ்.

கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்பவர் எம்.ஜி.ஆர். நாகப்பட்டினம் வெள்ளத்தின் பொழுது, தண்ணியில இறங்கி நடந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று, “என்ன வேணும் உங்களுக்கு?” எனக் கேட்கிறார். வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த மக்கள், “நீங்க நல்லா இருந்தா போதும்” என்று சொல்கிறார்கள். கேட்பது ஒரு முதலமைச்சர். ஆனால், அவரது ஜிப்பாவைத் தொட்டதே கோடி கிடைச்ச மாதிரி என மக்கள் சந்தோஷப்பட்டார்கள்.

நானும் அவரும் ஒருமுறை காரில் போயிட்டிருந்தோம். சுற்றி நின்ற மக்கள், ‘எம்.ஜி.ஆர். வாழ்க; வாத்யார் வாழ்க’ என வாழ்த்திட்டிருந்தாங்க. அவர், “ஒருத்தராவது முதலமைச்சர் வாழ்கன்னு சொல்றாங்களான்னு பார்த்தியா?” எனஎன்னிடம் கேட்டார். நான், “இல்லண்ண” என்றேன். “ஏன் தெரியுமா?” என்று கேட்டார். நான், “தெரிலண்ண” என்றேன். “முதலமைச்சர் பதவி வரும் போகும். ஆனா, இதுதான் உண்மையான சொத்து” என்றார்.

ஆர்.கண்ணனின் இந்த நூலை ஐம்பதாண்டு கால தமிழ்நாட்டு நூல் என்றே சொல்லவேண்டும்” என்றார்.

நிறைவாகப் பேசிய திரு. இராம. வீரப்பன், “இந்தப் புத்தகம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும். எனக்கே தெரியாத சில செய்திகளைச் சேர்த்திருக்கிறார். நேரு, எம்.ஜி.ஆருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தியா – சைனா போரின் பொழுது தனி மனிதராக எம்.ஜி.ஆர் மட்டுமே 75000 ரூபாயை அனுப்பினார். நான் தான் அந்தப் பணத்தை, அப்போதைய தமிழ்க முதலமைச்சர் காமராஜரிடம் கொண்டு போய்க் கொடுத்தேன்.

அவர் என்னைப் பார்த்து, “நீ மலையாளியா?” என்று கேட்டார்.

“இல்லை. புதுக்கோட்ட பக்கம்” எனச் சொன்னேன்.

“ராமசந்திரன் மலையாளிகளைத்தான் பக்கத்தில் வச்சுப்பார்ன்னு சொன்னாங்க?” எனக் கேட்டார்.

“அவருக்கு மலையாளிகளையே பிடிக்காது” எனப் பதில் சொன்னேன்.

ஒருமுறை நானும் அண்ணாவும் ப்ளைமெளத் காரில் போயிட்டிருக்கோம். கோயில்பட்டி அருகே டீக்கடையில் நிறுத்தினோம். அங்கிருந்தவர்கள் காரிலுள்ள தி.மு.கவின் கட்சிக் கொடியைப் பார்த்து, எம்.ஜி.ஆர் கட்சிக் கொடி எனப் பேசிக் கொண்டார்கள். நான் காருக்குள் அமர்ந்திருந்த அண்ணாவிடம் போய்ச் சொன்னேன். “எம்.ஜி.ஆர் கட்சிக் கொடி எனச் சொன்னால் அது தி.மு.க.க்குத் தான் பெருமை” என்றார் அண்ணா.

இந்தப் புத்தக வெளியீட்டு விழா, கலைவாணர் அரங்கத்தில் நடப்பது இன்னும் சிறப்பு” என்றார்.

– தினேஷ் ராம்

(நன்றி: ஒளிவிளக்கு மாத இதழ்)