Search

மாம் விமர்சனம்

MOM movie Tamil review

ஆனந்தையும் அவரது மகள் ஆர்யாவையும், தன் குடும்பமாக வரித்து அளவில்லாப் பாசத்தைப் பொழிகிறார் தேவகி. ஆனால் ஆர்யாவால் தேவகியை அம்மாவாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்நிலையில் உடன் படிக்கும் மாணவன் ஒருவனால் ஆர்யா பலத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறாள். நொறுங்கிப் போகும் மகளை மீட்பதோடு, தேவகி எப்படி தன் அன்பை மகளுக்குப் புரிய வைக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

இரண்டு லாலிவுட் (லாகூர்/பாகிஸ்தான் சினிமா) நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒன்று, ஸ்ரீதேவியின் கணவராக நடித்திருக்கும் அத்னான் சித்திக்; மற்றொன்று, ஸ்ரீதேவியின் மகளாக நடித்திருக்கும் சாஜல் அலி. அத்னான் சித்திக் பார்ப்பதற்கு ‘துருவங்கள் பதினாறு’ ரஹ்மான் போல் அசத்தலாக உள்ளார். மனைவியைச் சமாதானம் செய்வதாகட்டும், தாயை மறக்க முடியாமல் தேம்பும் மகளைத் தேற்றுவதாகட்டும், குற்றவாளிகள் நிரபராதியெனத் தீர்ப்பளிக்கப் படும்பொழுது கோபப்படுவதாகட்டும், அத்னான் சித்திக் மிக நிறைவாக நடித்துள்ளார்.

தேவகியாக ஸ்ரீதேவி நடித்துள்ளார். தன் மகளின் துன்பத்தைக் காணச் சகியாமல், சட்டத்தை ஏமாற்றியவர்களை, ஆக்‌ஷன் நாயகியாகக் களத்தில் இறங்கிப் பழிவாங்குகிறார். தாய்மையின் பேரன்பை, ஸ்ரீதேவியின் முகம் இயல்பாக வெளிப்படுத்தாது மிகப் பெரிய குறை. உணர்ச்சிகளற்று இறுகி விட்ட ஓர் உணர்வாய்த் தருகிறது அவர் முகம். அவர் அழுகின்ற காட்சிகள் கூட, பார்வையாளர்கள் மனதில் எத்தகைய சலனத்தையும் ஏற்படுத்தாதது துரதிர்ஷ்டம். அவரது பழிவாங்கல்களை, தங்களது வடிகாலாகப் பார்வையாளர்கள் கருதாது ஸ்ரீதேவியின் அனுபவத்திற்குக் கிடைக்கும் பின்னடைவே! தனது மகளின் அன்பைப் பெறும் அந்த நொடி கூட, ஸ்ரீதேவியால் திரையில் எந்த மேஜிக்கும் செய்ய முடியவில்லை.

படத்தின் ஆகப் பெரிய பலமும் அழகும், பாகிஸ்தான் நடிகையான சாஜலி அலி தான். இயக்குநர் ரவி உதய்வாரின் தேர்வில், படத்தின் பிரதான கதாபாத்திரமான தேவகி தவிர மற்ற அனைவருமே படத்திற்குக் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொணர்ந்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். சாஜல் அலி தனது அற்புதமான நடிப்பால், தன் உணர்வுகளைக் கச்சிதமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார். அவர் சாக்கடையில் தூக்கி வீசப்படும் பொழுது, மனம் பாரமாகிப் பெரும் சங்கடத்திற்கு இட்டுச் செல்கிறது. வாழ்வின் சில கணங்கள், நம்மை வேரோடு சாய்த்து மெளனமாக்கி விடும். அப்படியொரு கனமிக்க தருணத்தை ஒளிப்பதிவாளர் அனய் கோஸ்வாமியும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அளித்துள்ளனர். இதில், சாஜலி அலிக்கு மேக்கப் போட்டவரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

எடுத்த வழக்கைச் சிரமேற்கொண்டு ஒழுங்காக முடிக்கவேண்டுமெனக் கருதுபவர் குற்றப்பிரிவுக் காவல்துறை அதிகாரி மேத்யு பிரான்சிஸ். அப்பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார் அக்‌ஷய் கண்ணா. அஸார், நிகாஸ் வர்மா, அபிமன்யு சிங் என வில்லனாய் நடித்தவர்களும் கலக்கியுள்ளனர். தமிழ் வசனங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள J.ஷங்கர், ஹிந்திப் படம் பர்க்கிறோம் என்ற உணர்வைப் பெருமளவு குறைக்க உதவியுள்ளார்.

ஸ்ரீதேவியால் பிரதிபலிக்க முடியாத உணர்வை, ப்ரைவேட் டிடெக்டிவாக வரும் நவாஸுதின் சித்திக் மிக அற்புதமாகப் பிரதிபலித்துள்ளார். ‘எனக்கும் உங்க வயதில் ஒரு மகள் இருக்கா!’ எனச் சொல்லும் சராசரியான இந்தியத் தந்தையாகக் கோலேச்சியுள்ளார். சீரியசான படத்திலும், தனது மாறுபட்ட வேடத்தில், 2-3 காட்சிகளில் படத்தின் கலகலப்பிற்கும் உதவியுள்ளார்.

லாலிவுட் நடிகர்களின் வரவு, பாலிவுட் தாண்டி டோலிவுட், சாண்டல்வுட் என ஹோலிவுட் வரை நீண்டால் நன்றாக இருக்கும்.