Search
Mortal-Engines movie reviwew

மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம்

Mortal-Engines movie reviwew

இருக்கும் இடத்தில் இருந்தே உலகின் பெரும்பகுதியை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்து. அத்தகைய சூரியன் அஸ்தமிக்காத தேசம் என்ற கர்வம் கொண்ட இங்கிலாந்து அரசின் தலைநகரமான லண்டன் ஒருவேளை நகரத் தொடங்கினால்? ஆம், முழு நகரமே பெரிய வாகனம் போல் சக்கரங்களில் நகரத் தொடங்கிவிட்ட காலத்தில், லண்டன் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும் என்பதுதான் படத்தின் கதை. பிலீப் ரீவ், 2001 இல் எழுதிய ‘மார்டல் இன்ஜின்ஸ்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது.

கதிர்வீச்சின் பாதிப்பில் நிலமும் நீரும் பாழாகி விட, மக்கள் ராட்சஷ வாகனங்களில் அடைக்கலம் புகுகின்றனர். அதற்கும், ‘அழியக்கூடிய இயந்திரங்கள்’ எனப் பொருள்படும்படி தலைப்பு வைத்துள்ளனர். எல்லாமும் அழியும், இங்கிலாந்து பேரரசிலும் சூரியன் அஸ்தமிக்கும் என்பதே படத்தின் உட்கரு.

ஒரு பெரும் நகரமே சக்கரங்களில் பயணிக்கிறது என்ற மிகு கற்பனையை மிக அற்புதமாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர். கற்பனைக்குப் பிடிபடாத அந்த அதிசயத்தை மிக நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் திரையேற்றியுள்ளார் இயக்குநர் க்றிஸ்டியன் ரிவர்ஸ். பறக்கும் நகரம், இயந்திரப் பாகத்தினிலான வீரர்களில் கடைசியாக எஞ்சியிருக்கும் ஷ்ரைக், இயற்கையை நாசமாக்கி நகரும் இயந்திர நகரங்களுக்கு எதிராகப் புரட்சி செய்யும் பறக்கும் குழு எனப் படம் நெடுகே பார்வையைத் திரையில் இருந்து அகலவிடாமல் செய்ய பல அம்சங்கள் உள்ளன. எனினும், ‘அட’ எனச் சிலிர்க்க வைக்கும் காட்சி ஒன்று கூட இல்லாதது குறை.

ஹெஸ்டர் ஷா எனும் பெண், தன் பெற்றோரைக் கொன்ற தாடீயஸை வஞ்சம் தீர்க்க முயல்கிறாள். அதைத் தடுத்துவிடும் டாம் நட்ஸ்வொர்த்தியுடனே இணைந்து தன் லட்சிய வஞ்சத்தை முடிக்கிறாள்.
ஹெஸ்டருக்கும், ஷ்ரைக்கிற்கும் இடையேயான உறவு மனதிற்கு நெருக்கமாய் உள்ளது. இந்த அத்தியாயம் தான், இயந்திரங்களின் இரைச்சலில் இருந்து சற்றே ஆசுவாசம் அளிக்கிறது.

நூறு வருடங்களிற்குப் பிறகு, உலகம் வாழத் தகுதியற்ற இடமாய்ச் சிதைந்து போய்விடுகிறது என்ற புள்ளியில் இருந்தே படம் தொடங்குகிறது. அவர்களுக்கு முந்தைய காலத்தை, திரைக்காலம் (Screen Age) என்றழைக்கின்றனர். நாம் திரைக்காலத்தின் பொற்தருணங்களில் வாழ்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தான், காலில் சக்கரம் கட்டி ஓடும் யுகத்தில் இருந்து, சக்கரங்களில் நகரங்கள் ஓடும் காலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பிரம்மாண்டமாய் திரையில் காட்டியுள்ளனர்.