Search
munnodi-hero-harish-fi

சினிமாவிற்கு வந்த முன்னோடி தொழிலதிபர்

Munnodi padam

சினிமா மீது கொண்ட காதலால், யாரிடமும் உதவியாளராக இல்லாமலேயே இயக்குநர் ஆகியிருக்கிறார் தென்காசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். அவரது பெயர் எஸ்.பி.டி.ஏ.குமார். ‘முன்னோடி’ என்று தலைப்பிடப்பட்ட அப்படத்திற்கு, கதையும் திரைக்கதையும் வசனமும் அவரே! யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாத குமார், மணிரத்னம் போன்ற ஆளுமைகளைத் தன் முன்னோடியாக எண்ணி சினிமாவுக்கு வந்திருக்கிறாராம். அவருடன் இணைந்து சோஹம் அகர்வால் படத்தைத் தயாரித்துள்ளார்.

ஒருவன் யாரை முன்னோடியாகப் பின்பற்றுகிறானோ, அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். ‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற கருத்தை முன் வைக்கிறது படம்.

தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். ‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனம் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை நடிகராக நிரஞ்சன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர். கேம்பஸ் இண்டர்வியூ போல நடிக்க ஆள் தேடியபோது வந்த 120 பேரில் இவர் தேர்வானவர்.

‘முன்னோடி’ படம் சென்னையில் நடக்கும் கதை என்றாலும் பிற வட்டார மொழியையும் சில பாத்திரங்கள் பேசுகின்றன.

படப்பிடிப்பு 120 நாட்கள் நடை பெற்றுள்ளது. படம் நன்றாக வரவேண்டும் என்று இயக்குநர் உறுதியாக இருந்ததால் செலவைப் பற்றி கவலைப்படவில்லை. நல்ல விஷயங்களுக்காக மெனக்கிடுவதில் ஒரு தப்புமில்லை.

படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது, “நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா? சூழலால் மாறியவனா? மாற்றப்பட்டவனா? என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும், தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன். இதனால் பரபரவென சுவாரsiயம் குறையாமல் படம் பறக்கும்.

இன்றைய சூழலில், வாழ்க்கையில் உறவுகளின் மேன்மை நமக்குத் தெரிவதில்லை. அப்படித் தெரியும் போது அவை இருப்பதில்லை. நம்மை விட்டுப் போய்விடுகின்றன. இதை இந்தப் படம் பேசும்.

படத்திற்கு இசை பிரபுசங்கர். இவர் குறும்பட உலகில் பிரபலமானவர் மட்டுமல்ல, கலைஞர் டிவியின் ‘நாளைய இயக்குநர்கள்’ நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற இசையமைப்பாளர் .

படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ஒரு பாடல் முழுக்க முழுக்க கிராஃபிக்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை 95 % படப்பிடிப்பு முடிந்து விட்டது.

நன்றாக முன் தயாரிப்பு செய்து கொண்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்தாரா இதில் அம்மா வேடமேற்று நடித்துள்ளார். படம் முழுக்க வரும் அருமையான பாத்திரம் அவருக்கு.

‘முன்னோடி’ காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்த முழு நீள கமர்ஷியல் படமாக இருந்தாலும் உளவியல் சார்ந்த விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

படத்தில் காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு ஏற்றும்படி திரைக்கதை இருக்கும். நான் பார்த்த, கேள்விப்பட்ட அனுபவங்கள் படத்தில் காட்சிகளாகியுள்ளன. போலிஸ் எப்படி ஒவ்வொரு வழக்கின்போதும் குற்றங்களைக் கூர்மையாகத் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்தவன் நான், இதில் அவற்றைக் காட்சிகளாக்கியுள்ளேன்.

இதில் வரும் சண்டைக்காட்சிகள் நிச்சயம் பார்ப்பவர் மனதில் பலநாள் நிற்கும். தொழில்நுட்ப ரீதியிலும் பேசப்படும் விதமாக காட்சிகளில் அமைத்து அசத்தியிருக்கிறோம்” என்கிறார்.

முன்னோடி டிசம்பரில் வெளியிடும் மும்முரத்தில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.