Search
Nadigaiyar-Thilagam-review fi

நடிகையர் திலகம் விமர்சனம்

Nadigaiyar Thilagam movie review

சினிமா, இன்றளவும், ஆண்கள் மட்டுமே கோலேச்சி வரும் துறையாக உள்ளது. டி.பி.ராஜலட்சுமி, பானுமதி, சாவித்திரி போன்ற மிகச் சிலரே விதிவிலக்குகளாகத் தங்களுக்கான முத்திரையை அழுத்தமாகத் திரையுலகில் பதித்துள்ளனர். துடுக்கான உடற்மொழியாலும், துள்ளலான பாவனைகளாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற கலைஞர் சாவித்திரி. அவரைப் பற்றிய ‘பையோ-பிக்’ படமாகத் தெலுங்கில் “மகாநதி” என படம் எடுத்துள்ளார் நாக் அஷ்வின். மிக அற்புதமான ஒரு காண் அனுபவத்தைப் படம் தருகிறது. தமிழ் டப்பிங்கும் உறுத்தாமல், தேவையான இடத்தில் தெலுங்கு வசனங்களையே அப்படியே பயன்படுத்தியுள்ளது சிறப்பு.

‘தொடரி’ படத்தைப் பார்த்து விட்டு கீர்த்தி சுரேஷை, இந்தப் படத்தில் சாவித்திரியாக நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார் நாக் அஷ்வின். படத்தின் உயிராய் மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். படத்தின் இரண்டாம் பாதியில், கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மறைந்து சாவித்திரியாகவே மாறியுள்ளார். ஆந்திர அரசின் ‘நந்தி’ விருது அவருக்கு கன்ஃபார்ம் என்று அடித்துச் சொல்லலாம்.

ஏனோ தானோ என்றில்லாமல் படம் முழுவதும் அவ்வளவு உழைப்பை மிகுந்த சிரத்தையுடன் போட்டுள்ளனர். 3 மணி நேரத்துக்கு 10 நிமிடங்கள்தான் குறைவு எனினும், படம் சிறு சுணக்கத்தையோ அயற்சியையோ தராமல், அக்காலகட்டத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறது. கலை இயக்குநர் அவினாஷ் கொல்லாவின் பங்கும் மகத்தானது. அதே போலே, உடை வடிவமைப்பாளர்கள் கெளரங், அர்ச்சனா ராவ், இந்திராக்‌ஷி ஆகியோரின் பங்களிப்பும் அசத்தல். இசை, ஒளிப்பதிவு என அனைவரும் உணர்வுபூர்வமாய்ச் செயலாற்றினால் திரையில் அது நிகழ்த்தும் மாயத்திற்கு இப்படம் ஒரு சிறந்த உதாரணம்.

ஜெமினி கணேசனைக் கொஞ்சம் நெகட்டிவாகக் காட்டியிருந்தாலும், படத்தில் சாவித்திரி சொல்லும் ஒரு வசனத்தை ஜெமினிக்குப் பொருத்திப் பார்த்து அவரை வியக்கத் தோன்றுகிறது. “பணம் தான் முக்கியமென ஓடும் உலகில், ஒரு நிமிஷம் உண்மையான காதல் கிடைச்சாலே, அவ பணக்காரிதான். எனக்கு 20 வருஷங்கள் கிடைச்சிருக்கு. அப்போ நான் கோடீஸ்வரிதானே?” என்கிறார் சாவித்திரி. சாவித்திரி போன்ற ஆளுமையைக் கோடீஸ்வரியாக வைத்திருக்க காதல் மன்னனால் தானே முடியும்? படத்தில் சித்தரிப்பது போல், அவரது கேரியரை நினைத்துக் குடிக்குமளவிற்கு மோசமான நிலையில் ஜெமினி இல்லை.

பெண் தயாரிப்பாளர்களைக் கொண்ட வைஜயந்தி மூவிஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்நிறுவனத்தின் லோகோவில் வருபவரான என்.டி.ஆர் தான் இந்நிறுவனத்தைத் தொடங்கிப் பெயர் வைத்தது. அவருக்கு ட்ரிப்யூட் செய்வது போல் ஒரு காட்சியை அழகாக வைத்துள்ளனர். ஜெமினியாக நடிக்க துல்கர் சல்மான் நல்ல சாய்ஸ். தெலுங்குப் படம் என்பதாலும், ஆந்திரப் பார்வையில் படம் நீள்வதாலும், எம்.ஜி.ஆர்., சிவாஜி, சந்திரபாபு போன்றோர்களுக்கான முக்கியத்துவம் படத்தில் இல்லாதது குறை. ஜெமினியாக நடிக்க துல்கர் சல்மான் நல்ல சாய்ஸ். அவரை ஜெமினியாக ஏற்பதில் எந்த மனச்சிக்கலும் எழவில்லை. ஆனால், ரங்காராவாக நடித்தவரைத்தான் ஏற்கவே முடியவில்லை. சாவித்திரியின் பெரியப்பா செளத்ரியாக நடித்த ராஜேந்திர பிரசாத் கலக்கியுள்ளார். அவரும், கீர்த்தி சுரேஷும் சென்னை ஸ்டுடியோவில் வாய்ப்புத் தேடி வரும் காட்சிகள் கலகலப்பாகப் போகின்றன.

3 மணி நேரத்திற்குப் பிறகு படம் முடிந்ததும் யாரும் இருக்கையில் இருந்து அவசரமாக எழுந்திருக்கவில்லை. திரையில் சாவித்திரியின் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. சில நொடி கனத்த மெளனத்திற்குப் பின் கைத்தட்டல் எழுகிறது.