Search
once-upon-a-time-in-kollywood-review

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் விமர்சனம்

once-upon-a-time-in-kollywood-review

லியானார்டோ டி காப்ரியோ, பிராட் பிட் என ஹாலிவுட்டின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம். அதை விட ஈர்ப்பான விஷயம், இந்தப் படத்தின் இயக்குநர் க்வென்டின் டாரன்டினோ என்பதேயாகும்.

ஹாலிவுட்டில் 1969 இல் நடக்கின்ற பீரியட் ஃபிலிம். டைட்டானிக் நாயகன் லியானார்டோ சொன்னது போல், ’இப்படம், 60 களின் ஹாலிவுட்க்கு டாரன்டினோ எழுதிய காதல் கடிதம்’ என்பதே சரி. செம கிளாஸான படம்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ரிக் டால்டன் தனது இறங்குமுகத்தில் உள்ளார். அவரது உற்ற நண்பரான க்ளிஃப் பூத், ரிக்கிற்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுகிறவர். ரிக் டால்டனின் பக்கத்து வீட்டுக்காரராக ரோமன் பொலான்ஸ்கியும், அவரது மனைவி ஷரோன் டேட்டும் வசிக்கின்றனர். இவ்விடத்தில் ஒரு செய்தி: உலகை உலுக்கிய கொடூரமான மரணங்கள் பட்டியலில், ஹிப்பிகளால் கொலையுண்ட மிக அழகான நாயகியான ஷரோன் டேட்டின் வழக்கும் ஒன்று. வரலாறை ஒரு படைப்பாளனால் மாற்ற முடியுமானால், அவன் எவ்வாறு மாற்றுவான் என்பதற்கான விடையாக உள்ளது இப்படத்தின் க்ளைமேக்ஸ்.

ரிக் டால்டனாக லியானார்டோ டி காப்ரியோவும், க்ளிஃப் பூத்தாக பிராட் பிட்டும், ஷரோன் டேட்டாக மார்காட் ராபியும் நடித்துள்ளனர். மேலும், அல் பேசினோ, கர்ட் ரஸல் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லியானார்டோ வழக்கம் போல் சிறப்பாக நடித்திருந்தாலும், தனது ஸ்டைலான கதாபாத்திரத்தால் சுலபமாக மனதைக் கவர்ந்து விடுகிறார் பிராட் பிட். ஒவ்வொருவரிடமும் சிறப்பான நடிப்பை வெளிகொணர்வதில் வல்லவரான டாரன்டினோ படம் முழுவதும் அதகளம் புரிந்துள்ளார். தனது கேரியரை நினைத்து 15 வருடங்களாகவே உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்கும் வருத்தத்தில் உள்ள லியானார்டோ, 8 வயதான மெத்தட் ஆக்டிங் நடிகையான ஜூலியா பட்டர்ஸைப் பார்க்கிறார். ஃப்ரேமில் அந்த சிறுமி உட்கார்ந்திருக்கும் தோரணையே அலாதியாக இருக்கும். டாரன்டினோ ஏன் மாஸ்டர் என்பதற்கு அந்தக் காட்சியே சான்று. எட்டே வயதான சிறுமியும், புகழின் உச்சியில் இருந்து பின் 15 வருடங்களாக இறங்குமுகத்தைக் கண்டு பழங்கதையாகிவிட்ட ஒரு நாயகனும் பேசிக் கொள்கின்றனர். அட்டகாசம்.

இந்தப் படத்தின் மீதான முக்கியமான சர்ச்சை, டாரன்டினோ வெள்ளை இனவெறியோடு ப்ரூஸ் லீ சம்பந்தப்பட்ட காட்சியைச் சித்தரித்துள்ளார் என்பதே. ப்ரூஸ் லீ இறக்கும் போது, நான்கே வயதான அவரது மகள் ஷனான் லீ, அக்காட்சிக்குக் கடும் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார். ஆனால், டாரன்டினோவைப் பொறுத்தவரை, 60 களின் ஹாலிவுட்டை உண்மைக்கு நெருக்கமாகப் பிரதியெடுத்துள்ளார். கதாபாத்திரங்களையும், நிஜ ஹாலிவுட் மாந்தர்களில் இருந்தே எடுத்துள்ளார். ‘க்ரீன் லேன்டர்ன்’ தொலைக்காட்சித் தொடரின் பொழுது, பல சண்டைக் காட்சி இயக்குநர்கள் ப்ரூஸ் லீயின் போக்கைச் சமாளிக்க முடியாமல் விலகியுள்ளனர். ப்ரூஸ் லீ, தன் மீதும், தன் தற்காப்புக் கலை மீதும் அசைக்க முடியாத வித்யா கர்வத்துடன் இருந்தவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் பட்டவர்த்தனம். ப்ரூஸ் லீ ஒரு சகாப்தம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; என்றாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லை.

பிராட் பிட்டிடமும், லியானார்டோவிடமும், பிராண்டி எனும் பிட் புல் வகை நாயிடமும் ஹிப்பிக்கள் சிக்கிப் படாதபாடுபடுகின்றனர். கொலைவெறிக் காட்சி அது. ஆனால், திரையரங்கில் அப்படியொரு சிரிப்பொலி. மூன்று ஹிப்பிகளில் இருவர் பெண்கள். ‘பெண்கள் மேல் இவ்வளவும் ஆத்திரமும் வன்மமுமா?’ என டாரன்டினோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. படத்தைப் பற்றிய ஸ்பாய்லர்ஸ் ஆகிவிடுமென கான்ஸ் திரைப்பட விழாவில், அக்கேள்விக்குப் பதிலளிக்க டாரன்டினோ மறுக்க, பிராட் பிட்டோ, “அது தனிப்பட்ட பெண்கள் மீதான ஆத்திரமில்லை; ஓர் அப்பாவியின் இழப்பினால் ஏற்பட்ட ஆத்திரம்” என சாதுரியமாகப் பதிலளித்தார். டாரன்டினோவின் சாமர்த்தியமோ, இசையுடன் கலந்த விஷூவலாகத் திரையில் பளிச்சிடுகிறது. கேரியரை இழக்கும் சோக நாயகன், மனைவியைக் கொன்றவன் என்ற பழியால் வேலை கிடைக்காத ஸ்டண்ட் மேன், கொலைவெறித் தாண்டவமாடும் ஹிப்பிகள் என சோகமான சீரியசான அம்சங்கள் இடம்பெற்ற படத்தை செம நகைச்சுவையாகக் கொண்டு போயுள்ளார் டாரன்டினோ. படத்தில் ஒவ்வொரு ப்ரேமும் விஷுவல் கவிதை.

பெளன்ட்டி லா, எஃப்.பி.ஐ. போன்ற ஹாலிவுட்டின் தொலைக்காட்சித் தொடர்கள் பரீட்சயமாக இருந்தால், படம் மிகச் சிறந்த நாஸ்டாலஜியாக இருக்கும். அப்படியில்லாவிட்டாலும்பரவாயில்லை. டாரன்டினோ தன் சிக்னேச்சர் மேக்கிங்கால் பார்வையாளர்களைக் கொள்ளை கொண்டு விடுகிறார்.