Search
Padaiveeran-review-fi

படைவீரன் விமர்சனம்

Padaiveeran movie review

ஆண்ட பரம்பரை என்ற பெருமையைத் தலையில் சுமந்தவாறு திரியும் முனீஸ்வரன், படைவீரனாய்க் காவல்துறையில் சேருகிறான்.

‘சாதிக்கு ஒன்னுன்னா பெத்த தாயைக் கூடக் கருவறுப்பேன்’ என்று நாயகனின் நண்பன் சொல்வான். இவ்வசனத்தை, படத்தின் ஒரு வரிக்கதையாகக் கொள்ளலாம்.

படம் ஒரு முக்கியமான அம்சத்தைத் தொடுகிறது. அது சாதிப்பற்று மனிதத்தன்மையை அழித்து எப்படி வெறியாகப் பரிணமிக்கிறது என்பதே! ஊரிலேயே இருக்கும் இளைஞர்களுக்கும் மத்திம வயது பெண்களுக்கும், அவர்களை வழிநடத்தும் பழமையில் ஊறிய தலைவனுக்கும் அவ்வெறி நிறைந்துள்ளது. தன் சகோதரியை ஊர்ப் பெண்கள் கூடிக் கொலை செய்யும் பொழுது, அந்த அண்ணனுக்கு எந்தப் பதற்றமும் எழுவதில்லை. சாதிப் பெருமையைக் காப்பது தான் தங்கள் தலையாயக் கடமையெனக் கருதிக் கொலை செய்யும் பெண்களுக்கோ எந்தக் குற்றயுணர்ச்சியுமில்லை! ‘உங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா?’ என்று தலைவராக வரும் கவிதா பாரதியின் கேள்விக்கு, பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் போல், ஒரு சடங்கை நிறைவேற்றும் பாவனையில் ஊர்ப்பெண்கள் கொலை செய்கின்றனர். இந்தக் காட்டுமிராண்டித்தனம் தரும் பதற்றத்தை ஏனோ க்ளைமேக்ஸ் காட்சி தரத் தவறிவிடுகிறது. தீயை வீசுவதாகட்டும், தீயை அணைக்கச் செல்லும் பாரதிராஜாவின் கையிலுள்ள பாத்திரத்தைத் தட்டி விடுவதாகட்டும், வில்லன் கவிதா பாரதியை விட ஊர்ப் பெண்கள் பயத்தினை மனதில் விதைக்கின்றனர். எத்தனை வன்மம் அவர்களிடம்?

2018 இன் மிகச் சிறந்த படைப்பாக வர அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்தும், கதைப்போகின் சில விலகல்களால் நல்ல படமாக மட்டும் தேங்கிவிடுகிறது. உதாரணத்திற்குப் படத்தின் இடைவேளை, நாயகனின் சீண்டலால் காயமுற்ற நாயகியின் அகத்தைக் காட்டுகிறது. அதற்கு முன், போலீஸ் ட்ரெயினிங்கில் பெறப்படும் அனுபவத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் உள்ள வேறுபாட்டினை நகைச்சுவையாகக் காட்டியுள்ளனர்.

விஜய் யேசுதாஸ் அனைத்துத் தேர்வுகளிலும் தோற்று, தொங்கும் கயிறில் ஏற முடியாமல் தொப்பெனக் கீழே விழுகிறார். அந்த ஃப்ரேமில் நாயகன் ‘செலக்டட் (Selected)’ என முத்திரை குத்தப்படத் திரையரங்கு சிரிப்பொலியில் நிறைகிறது. படம் நெடுகே இது போன்ற சிறு சிறு நகைச்சுவைகள் ரசிக்க வைக்கின்றன.

மாரி படத்து வில்லன் விஜய் யேசுதாஸிற்கும், இப்படத்து முனீஸ்வரனுக்கும், நடிப்பில் மிகப் பெரிய வித்தியாசம் தெரிகிறது. மிக நன்றாக நடித்துள்ளார். எனினும் ஓர் அந்நியத்தன்மை மெல்ல இழையாய்த் தொடர தான் செய்கிறது. குரங்கு பொம்மையைத் தொடர்ந்து, பாரதிராஜாவிற்கு மிக அற்புதமான வேடம். பெண்ணின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் அவர் புலம்பும் காட்சியிலும், சாதிப் பெருமிதத்தில் உள்ள விஜய் யேசுதாஸிடம் பேசும் காட்சியிலும் படத்தின் நாடி நரம்பான பாத்திரமாக உள்ளார்.

நண்பனின் அக்கா, நாயகனின் அக்கா, நாயகி என படத்தில் வரும் இளம்பெண்கள் அனைவருமே கவர்கின்றனர். ஓரே மாதிரியான வார்ப்பாக இல்லாமல், ‘குட் நியூஸ்’ என மாப்பிள்ளை பார்க்க வரும் பொழுது குதூகலமாகும் நாயகி மலர், ‘தன்னால் ஓர் உயிர் போய்விட்டதே எனப் பரிதவிக்கும்’ விதவையான நண்பனின் அக்கா, தம்பியை விட்டுக் கொடுக்காத நாயகனின் அக்கா என அவர்களுக்குத் தனியே ஒரு குணமும் மனமும் உள்ளன. சாதி வெறியில் மூழ்காத ஒரு தன்மையைப் பெற்றவராகவும் உள்ளனர். உண்மையில் நிகழும் கெளரவக் கொலைகளின் பின்னணியில் உள்ள யதார்த்த உளவியலோடு இது பொருந்துகிறது. வன்மத்தோடு இருப்பவர்களும் பெண்களே, சாதியைத் தூக்கி எறிவதும் அவர்களே! நாகரீக மாற்றத்திற்குச் சட்டெனத் தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் போக்கு இயல்பிலேயே பெண்களுக்கு அதிகமென்றே தோன்றுகிறது. மலராக நடித்திருக்கும் அம்ரிதா தமிழுக்கு நல்லதொரு அறிமுகம்.

இயக்குநர் தனா, தானொரு கவனிக்கத்தக்க படைப்பாளி என்பதை நிரூபித்துள்ளார். படத்தின் பேசுபொருளும் மேக்கிங்குமே அதற்குச் சான்று.