Search
Pakka-review-fi

பக்கா விமர்சனம்

Pakka movie review

விக்ரம் பிரபு முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

அரசன்குடியைச் சேர்ந்த ஜமீன்தாரின் மகளான நதியாவிற்கு, திருவிழாவில் பொம்மை கடை வைக்கும் பாண்டி மீது காதல் வருகிறது. தனது அந்தஸ்தினை நினைத்துத் தயங்கும் பாண்டியை ஊர் ஊராய்த் தேடிச் சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார் நதியா. தாம்பரம் ரயில் நிலையத்தில் நதியாவை உட்கார வைத்து விட்டுச் செல்லும் பாண்டி திடீரெனக் காணாமல் போவதால், தற்கொலை புரிந்து கொள்ள தண்டவாளத்தில் படுத்துக் கொள்கிறார் நதியா.

அச்சமயம், குடித்து விட்டு தண்டவாளத்தில் வீழ்ந்து கிடக்கும் தோனி குமார் நதியாவைக் காப்பாற்றுகிறார். பாண்டி போலவே இருக்கும் தோனி குமாரிடம் தன் காதல் கதையைச் சொல்கிறார் நதியா. இது படத்தின் முதல் பாதி.

நதியாவிடம், ரஜினி ராதாவுடனான தன் காதல் கதையைச் சொல்கிறார் தோனி குமார். இது ப்ரீ க்ளைமேக்ஸ் வரைக்குமான கதை.

பாண்டி என்னானார்? நதியா தன் காதலனுடன் இணைந்தாரா? தோனி குமாரின் காதல் என்னானது முதலிய கேள்விகளுக்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

Pakka Nikkil Kalrani

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் S.S.சூர்யா. சுவாரசியம் கிஞ்சித்தும் இல்லாமல் வளவளவென காட்சிகள் கடைசி வரை நீண்டு கொண்டே இருக்கின்றன. மலைப்பும் களைப்பும் படம் முழுவதும் நீள்கிறது.

சூரி, சதீஷ், சிங்கமுத்து, சிங்கம்புலி, ரவி மரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, முத்துகாளை ஆகிய நடிகர்கள் இருந்தும் நகைச்சுவை எடுபடவில்லை. தோனி குமாரும், ரஜினி ராதாவும் வாழும் செம்படாக்குறிச்சி எனும் ஊரின் நாட்டாமையாக ஆனந்த்ராஜ் வருகிறார். அவரது போர்ஷனிலும் கூட நியாயமாக இருந்திருக்க வேண்டிய கலகலப்பு மிஸ்ஸிங். ‘நாட்டாமை’ படத்தில் டீச்சராக வரும் ராணியை, அந்தப் பாத்திரமாகவே உபயோகித்துள்ள புத்திசாலித்தனம் ரசிக்க வைத்தாலும், அதையும் சரியாக இயக்குநர் உபயோகிக்காதது துரதிர்ஷ்டம். இரண்டு நாயகர்களும் முதல் முறையாகச் சந்தித்துக் கொள்ளும் காட்சியில், யாரும் எந்த அதிர்ச்சியும் வெளிபடுத்திக் கொள்கிறார்கள் இல்லை.

தோனி குமாருக்கும் பாண்டிக்கும், மரு அளவு வித்தியாசம் கூட இல்லை. குணத்திலும் பேச்சிலும் நடவடிக்கையிலும் கூட! கவர்ச்சி “கபாடி” ஆட்டம் (எழுத்துப்பிழை இல்லை) ஆடுவதற்காக ரஜினி ரசிகர் மன்ற தலைவியாக நிக்கி கல்ராணியும், கண்டவுடன் காதலில் விழுந்து கண்ணைக் கசக்கி அன்பைப் பொழிய பிந்து மாதவியும் நாயகிகளாக உள்ளனர். பொம்மை கடை, கிரிக்கெட் என ஒப்பேத்தல் காமெடிக்காக சூரியும் சதீஷும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதிபர் படத்தைத் தயாரித்த T.சிவகுமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார். C.சத்யாவின் இசையில், “ஓல வீடு நல்லால்ல” எனத் தொடங்கும் திருவிழா பாடல் துள்ள வைக்கிறது. எஸ்.சரவணனின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் திருவிழா மயம் தான் – கதாபாத்திரங்களுக்கு மட்டும்.