Patti-Cakes-review-fi

பட்டி கேக்ஸ் விமர்சனம்

பட்டி கேக்ஸ் விமர்சனம்

நம்முள் ஏதோ ஒரு திறமை இருக்கிறது. அந்தத் திறமையைக் கொண்டு தட்டினால் வெற்றியின் கதவுகள் திறக்குமா திறக்காதா எனத் தெரியாது. திறந்தால் பிரச்சனையில்லை. ஒருவேளை திறக்காமல் போனால்? இல்லை திறந்த இடத்தில் ஏமாற்றம் மிஞ்சி நின்றால்? வாழ்வையே வெறுத்துப் போகச் செய்யும் தோல்வியும் அவமானமும் தொடர்ந்து வந்தால்? இதற்கு மேலும், இந்தத் திறமையை நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா என்ற விரக்தி ஏற்பட்டால்? அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் திறமையின் கதவுகளுக்குப் பெரும் தலைவலியாக வந்து நின்றால்? இவை எல்லாவற்றிற்கும் மேல் உங்கள் உடலமைப்பே உங்களுக்கு எதிரியாக வந்து நின்றால்? இதில் ஏதோ ஓர் ‘ஆல்’ நம் மீது மோதிய அடுத்த நொடியே நாம் உடைந்து நொறுங்கியிருப்போம் அல்லது நம் திறமைக்கு ஒரு வந்தனம் வைத்துவிட்டு எந்தத் திறமையின் மீது காதலும் நம்பிக்கையும் கொண்டு அலைந்தோமோ, அந்தத் திறமைக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லாத ஓரிடத்தில் சமரசம் கொண்டு ஒடுங்கி விடுவோம். நாம் எல்லோரும், அதிலும் குறிப்பாக மிடில்கிளாஸ் லோகிளாஸ் ஜீவராசிகள், வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் இத்தகைய அனுபவத்தை எதிர்கொண்டிருப்போம். 

முயற்சி செய்யாமலேயே பலனைக் கணக்கு போட்டுப் பார்த்து, ‘ச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்பதெல்லாம் வேறு கூட்டம். இங்கே பேசவிருக்கும் கதை குறைந்தபட்ச முயற்சி செய்து தோற்றுப் போனவர்களுக்கும், தோற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்கும். இந்தக் கதையில் இருக்கக் கூடிய சுவாரசியமே இது ஓர் உண்மைக் கதை என்பதில் தான். ஏனென்றால் எப்போதுமே உண்மைக்கு தான் வலிமை அதிகம். ஏனென்றால் உண்மையைத் தான் நம் மனம் அதீதமாக நம்பும்.

Patti cakes Siddharth DhananjayPatti Cake$ கதைக்குள் நுழையும் முன், இந்தத் திரைப்படத்தை நாம் ஏன் கவனிக்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணமாக நான் கருதுவது, சித்தார்த் தனஞ்செய் என்கிற இந்தியத் தமிழர்தான். வெறும் இருபத்தி ஐந்து வயதேயான இந்த இளைஞருக்குக் கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பு லட்சத்தில் ஒருவருக்குக் கூடக் கிடைக்காத வாய்ப்பு. அதுதான் கான்(ஸ்) மற்றும் சன்டேண்ஸ் சர்வதேசத் திரைப்படக் குழுமங்களின் மூலம் வெளிச்சம் பெறக் காத்திருக்கக் கூடிய ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு. சித்தார்த்திற்கு இத்தனை பெரிய வாய்ப்புக் கிடைத்தது அவரே சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. அதிலும் அவர் எதிர்பார்க்காத ஒரு கதவின் வழியே நுழைந்த வாய்ப்பு. அடிப்படையில் சித்தார்த் ஒரு ‘RAP’ பாடகர். லாஸ் ஏஞ்சல்ஸில் பட்டம் பெற வந்தவருக்குக் கிடைத்த நட்பு வட்டத்தின் மூலம் தன் திறமையைப் படைப்பாக்கி யூ-ட்யூபில் (Dhananjay – The First) பகிர்கிறார். திறமைக்குச் சிறிது வெளிச்சம் கிடைக்கிறது. தனது அடுத்தடுத்த படைப்புகளை யூ-ட்யூபிலும் ‘WorldstarHipHop’ என்கிற குழுமத்திலும் பகிர்கிறார். பகிர்ந்ததோடு தனது அடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார். அவ்வப்போது தனக்குக் கிடைக்ககூடிய ‘awsm bro’, ‘super bro’ பாராட்டுக்களின் வழியாக தனது அன்றாட வேலைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

பட்டி கேக்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் ஜெரிமி ஜாஸ்பர், ராப் இசையைக் காதலிக்கும் ஒரு மிடில் கிளாஸ் இளைஞியின் போராட்டத்தைக் களமாகக் கொண்டு ஒரு கதை பின்னுகிறார். அந்தக் கதையில் கதாநாயகியின் நண்பனாக ஒரு இந்தியமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சித்தார்த்தைத் தொடர்பு கொள்கிறார். சித்தார்த்தின் திறமைக்கான கதவு வழியாக சிறிது வெளிச்சம் பாய்கிறது. கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார் சித்தார்த். இந்த வாய்ப்புக்காக சித்தார்த் செய்தது ஒரேயொரு விஷயம் தான். தன்னிடம் இருக்கும் திறமையை நம்பினார்; அதனை விதையாக்கினார். அந்த விதை தனக்கான அறுவடையை ‘WorldstarHipHop’ குழுமத்தின் மூலமாக பெற்றுக் கொடுத்தது. கிட்டத்தட்ட, ‘திறமையைக் காட்டு, பலனை எதிர்பாராதே!’ வகையறா வழியாகத் தனக்கான கதவுகளைத் திறந்திருக்கிறார் சித்தார்த். திறமையிருக்கும் ஒவ்வொருவரும் நம்ப வேண்டிய மிக முக்கியமான விஷயம் இதுதான். திறமையை நம்பி முயற்சி செய்தால் முயற்சி திருவினையாக்கும்.

Patti Cakes movie review

முன்னமே சொன்னபடி பட்டி கேக்ஸ் கதைக்களம் இதுதான், ராப் இசையைக் காதலிக்கும் ஒரு மிடில் கிளாஸ் இளைஞியின் போராட்டம். இந்தப் போராட்டம் உணர்வுகளின் வாயிலாக எவ்வாறு கடத்தப்பட்டுள்ளது என்பதில் இருக்கிறது இந்தப் படத்தின் வெற்றி. வழக்கமான கதையம்சங்களில் இருந்து சற்றே ஒதுங்கி முழுக்க முழுக்க உணர்வுகளின் வாயிலாகக் கதைசொல்லும் கலைப்பட இயக்குநர்களைக் கண்டுபிடித்து ஆதரவு தரும் சன்டேண்ஸ் குழுமம் வாயிலாக ஹாலிவுட்டின் வெள்ளித்திரை கண்டிருக்கிறது Patti cake$. வெள்ளித்திரை காணும் முன் கான்(ஸ்) திரைப்பட விழாவில் இப்படத்திற்குக் கிடைத்த மரியாதை வேறு மாதிரியானது. அதனைப் பிறகு சொல்கிறேன். அதற்கு முன் கதையைப் பார்த்து விடலாம் (ஸ்பாய்லர்ஸ் இருக்கலாம் ஆனால் அவை படம் பார்க்கும் பொழுது உங்கள் அனுபவத்தைக் குறைத்து விடாது).

பட்டி என அழைக்கப்படும் பட்ரிஷியா டம்ப்ரெளஸ்கி தான் கதையின் நாயகி. மிடில் கிளாசா இல்லை அந்த மாத ட்யூ கட்டக் கூடப் பணம் இல்லாத லோ கிளாசா என்று பிரித்தறிய முடியாத குடும்பச் சூழல் உடையவர். வயதால் தளர்ந்தாலும் மனதால் தளராத நாயகியின் பாட்டி, மூன்றாம் தர பாரில் பாடகியாக வேலை பார்க்கும் குடிக்கார அம்மா, அதே பாரில் சரக்கு ஊற்றிக் கொடுக்கும் இளம்பெண்ணாக பட்டி என அமெரிக்காவின் நார்த் ஜெர்சி மாகாணத்தில் இருந்து ஆரம்பமாகிறது கதை. இயல்பாகக் கதைசொல்லும் தன்மை இயக்குநருக்கு வாய்த்திருக்கிறது. கொஞ்சம் அசந்தாலும் கொட்டாவி விடவைத்து நெளிய வைக்ககூடிய கதைதான். அதைச் சொன்னவிதத்தில் தான் இயக்குநர் நம்மை ஈர்க்கிறார்.

பட்டியின் கனவையும் திறமையையும் பற்றிக் கூறுமுன் அவருடைய உடலமைப்பைக் கூறிவிடுவது சரியாக இருக்கும். ஒட்டுமொத்த அமெரிக்காவும் கண்டு பயப்படும் ஒபிசிட்டி (அதீதமான உடல் எடை அதிகரிப்பு) என்கிற நோயால் பாதிக்கப்பட்டவர் பட்டி. அதீதமான உடல் எடையின் காரணமாக அதிகமான அவமானங்களுக்கு உட்பட்டவர். எனினும் தனக்கான திறமையின் மூலம் வெடித்து எழ முடியும் என்று நம்புகிறார். குடும்பச் சூழ்நிலை, உடலமைப்பால் கிடைக்கும் அவமானங்கள், அத்தனை இடங்களிலும் அடைக்கபட்ட கதவுகள் என மிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கும் பட்டியை மையமாக வைத்து மட்டுமே எழுதபட்டிருக்கிறது கதை. பட்டியாக, முழுப் படத்தையும் தூக்கிச் சுமக்கும் பொறுப்பைத் திறம்படச் செய்துள்ளார் நடிகை டேனியல் மெக்டொனால்ட்.

தனக்கான ராப் உலக புனைப்பெயராக ‘கில்லா (Killa P)’ என்று மாற்றிக் கொள்ளும் பட்டியின் குழுவில் இருக்கும் மற்றுமோர் நண்பர் ஹரீஷ் என அழைக்கப்படும் ஜெரி. இந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கும் தமிழரான சித்தார்த் தனஞ்ஜெய்க்குத் திரைப்படம் முழுக்கவே இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘ஹே பாலிவுட்’ என்று இவரைப் பார்த்தும் அழைக்கும் அமெரிக்கர் மூலம் பாலிவுட்டும் ஹாலிவுட்டால் கவனிக்கப்படுகிறது என்பது தெரிகிறது.

தங்களுடைய ஆல்பத்தை வெளிக்கொணர எத்தனையோ முயற்சி செய்கிறார்கள் பட்டியும் ஜெரியும். போகும் இடங்களில் எல்லாம் கிடைக்கும் அவமானங்களால் தான் செய்யும் முயற்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட ஆரம்பிக்கிறார் பட்டி. இந்த நேரத்தில் தான் பாஸ்டெர்ட் (Bastered) என்கிற மற்றுமோர் இசைக்கலைஞனின் அறிமுகம் கிடைக்கிறது. அவனுடன் சேர்ந்து PBNJ (Patti, Bastered, Nana, Jeri) என்கிற சிறிய இசைக் குழுமத்தை ஆரம்பிக்கிறார்கள். இதில் நானா என்பவர் பட்டியின் பாட்டி. பாஸ்டெர்ட் என்கிற ஆப்பிரிக்க – அமெரிக்க நண்பனிடம் இருக்கும் இசைக்கருவிகளைக் கொண்டு, PBNJ தன் முதல் ராப் ஆல்பத்தைத் தயார் செய்து, சாலைகளின் ஓரமாக நின்று கூவிக்கூவி விற்கிறார்கள். ஆல்பம் வெளிவந்தவுடன் வேற லெவல் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் மண் விழுகிறது. ஒரு முன்னேற்றமும் இல்லை. ஆரம்பித்த இடத்திலேயே தான் நிற்கிறார்கள். மனம் உடைந்து போயிருக்கும் பட்டிக்கு அப்போதுதான் ஒரு உண்மை தெரிகிறது. தன்னுடைய அம்மாவும் பாப் உலகில் மிகப் பிரபலமாக ஆரம்பித்து குடும்பச் சூழ்நிலைகளால் ஒரு மூன்றாம் தர மதுபானக் கடையில் வேலை பார்க்க ஆளானார் என்பது. பட்டியை இந்த விஷயம் மேலும் வருத்துகிறது. குடும்பப்பாரத்தின் அழுத்தம் காரணமாக வேறு ஒரு நல்ல வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். நட்சத்திர விடுதியில் மது பரிமாறும் வேலை. பட்டிக்கு நன்றாகத் தெரிந்த வேலை என்பதால் அவளால் எளிதாகச் செய்யமுடிகிறது. சராசரி வாழ்க்கை சராசரி கஷ்டங்களுடன் நகர்ந்து கொண்டிருக்க, அவளது அம்மாவின் மன உளைச்சல் அதிகமாகிறது. கூடவே நானாவின் உடல்நிலை கடுமையாக மோசம் அடைகிறது. பாஸ்டெர்ட் உடனான காதல் பிரிவுக்கு வருகிறது. நானாவும் மறைகிறார்.

இத்தனை மன அழுத்தத்திற்கும் மத்தியில் ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து விடாதா என்று காத்துக் கொண்டிருக்கிறார் பட்டி. அற்புதம் நிகழ்கிறது. ராப் உலகின் காட்-ஃபாதராக நினைக்கும் O-Zக்கு மது பரிமாற வாய்ப்புக் கிடைகிறது. கிடைத்த வாய்ப்பில் அவருக்கு முன் அவருடைய அனுமதி இல்லாமலேயே ஒரு ராப் பாடல் பாடி அவரிடம் இருந்து நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்கிறார் பட்டி. இருந்த கடைசி நம்பிக்கையும் தளர்ந்து போக, கூடுதல் பரிசாக வேலையும் போகிறது.

இனி ஆவதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் PBNJ ஆல்பம் அந்த வருடம் நடைபெறக்கூடிய ராப் போட்டியில் தேர்வாகியிருப்பதாகவும், அந்த லைவ்-கான்சர்ட்டில் கலந்துகொள்ளும் படியும் அழைப்பு வருகிறது. நானா இல்லமால் PBNJ கூட்டணி ஒன்று சேருகிறது. அந்தப் போட்டியின் நடுவராக O-Z வீற்றிருக்கிறார். தன்னிடம் இருக்கும் அத்தனை வலுவையும் ஒன்று திரட்டி மேடையில் வந்து நிற்கும் பட்டியின் மீது கேலியும் கிண்டலும் குவிகின்றன. அத்தனையையும் மீறி PBNJ-இடம் இருந்து அட்டகாசமான ராப் வெளிப்படுகிறது. மிகச்சிறந்த இசையைக் கொடுத்திருந்தாலும் அந்தப் போட்டியில் தோற்றுப் போகிறார்கள் PBNJ. இருந்தும் ஏதோ ஒன்றை வென்ற உணர்வு. அந்த உணர்வு கொடுத்த வெற்றியை அந்த இரவில் கொண்டாடிக் கொண்டிருக்கும் போதுதான் PBNJ… PBNJ… PBNJ… என்ற பாடல் FMஇல் ஒலிக்கிறது.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த கான்(ஸ்) பார்வையாளர்களும் எழுந்து நின்று தொடர்ந்து பத்து நிமிடங்களுக்குக் கைதட்டுகின்றனர். இது இப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. கலைப்படங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் FOX Searchlight இந்தப்படத்தை பத்து மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி வெள்ளித் திரைக்குக் கொண்டு வருகிறது. இது இப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய திறப்பு. இவை எல்லாவற்றிற்கும் பின் ஏகப்பட்ட ‘ஆல்’ இருந்தபோதும், அத்தனையையும் உடைத்தெறிந்து வென்று நின்றது ஒன்றே ஒன்று தான். முயற்சி. அதுதான் இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலம்.

நாடோடி சீனு

Comments

comments