Search
ratchasi-movie-review

ராட்சசி விமர்சனம்

ratchasi-movie-review

பெரும்பாலானோரின் பொதுப்புத்தியில் ஓர் அரசுப்பள்ளியைப் பற்றிய பிம்பம் எவ்வாறு பதிந்துள்ளதோ, அப்படி ஓர் அரசுப்பள்ளி தான் விருதுநகர் மாவட்டம் R.புதூரில் இருக்கும் அந்தப் பள்ளி. அங்கு தலைமை ஆசிரியையாக கீதா ராணி பொறுப்பெடுத்துத் தன் சாட்டையைச் சுழற்ற, அவருக்கு ‘ராட்சசி’ எனும் அடைமொழி கிடைக்கிறது.

சாட்டை படத்தை நிறையவே ஞாபகப்படுத்துகிறது. குறைந்தபட்சம், அதையொரு சவாலாக எடுத்துக் கொண்டு வேறு பரிமாணத்தில் பயணிக்கக் கூடப் படம் முயற்சி செய்யவில்லை. நேரடியாக, ‘இது தவறு, இப்படிச் செய்யலாம்’ எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் தலைமை ஆசிரியையான கீதா ராணி டீச்சர்.

படத்தில் ஏகத்துக்கும் வில்லன்கள் உண்டு. துணைத் தலைமை ஆசிரியர், தனியார் பள்ளி நிறுவனர், உள்ளூர் அரசியல்வாதி போன்றோர் தலைமை ஆசிரியைக்குக் குடைச்சல் தருவதை முதன்மை லட்சியமாகக் கொண்டுள்ளனர். உண்மையின் உரைகல்லாகவும், அவலங்களைச் சுட்டிக் காட்டும் கூர்வாளாகவும் பாரதி தம்பியின் வசனங்கள் உதவினாலும், அவை திரைப்படமென்ற கட்டமைப்புக்குள் இருந்து விலகி, பரிபூரணச் சுதந்திரத்துடன் பிரச்சார நாடகப் பாணியில் இயங்குகின்றன.

கதையின் மூலமாக எது ஒன்றைக் கட்டமைத்தாலும், அதன் தாக்கம் நேரடியாகச் சொல்லப்படும் பிரச்சாரத்தை விட வலிமையாக இருக்கும். ‘ஆமாங்க, காலம் கெட்டுக் கிடக்குதுங்க. சிஸ்டம் சரியில்லைங்க. இதையே தான் அந்த டெயிலரும் சொன்னாருங்க’ என்று தலையை ஆட்டி விட்டுப் போகத்தான் பிரச்சாரப் பாணிப் படங்கள் உதவும். இங்கு எதுவும் சரியில்லை என்று பயத்தைத்தான் அதிகப்படுத்துகிறது படம். மாவட்ட ஆட்சியரே கூடப் பள்ளிகளின் நிலைமையைப் பார்த்துப் பரிதாபம் தான் படமுடியும், ‘ஜாக்கிரதையாக இருங்க’ என தலைமை ஆசிரியரை எச்சரிக்கத்தான் இயலும், மாற்றத்திற்கு யாரும் உறுதுணையாக இருக்கமாட்டார்கள் என்கிறது படம். மாவட்ட ஆட்சியர் யாரிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார் எனத் தெரியவில்லை.

தனியார் பள்ளி நிறுவனரும் ஜோதிகாவை ஏதாவது செய்துவிடுவாரோ என பதைபதைக்க வைத்து, ‘பேசிக்லி அவரொரு பணம் சம்பாதிக்க நினைக்கும் வாட்ச் மெக்கானிக் தான்; மத்தபடிக்கு நல்லவரு’ எனச் சான்றிதழ் வழங்கிவிடுகிறார்கள். எது அரசுப் பள்ளிகளின் இந்த நிலைமைக்குக் காரணமெனப் படம் பகுத்தாய்வு செய்யவில்லை. தங்கள் சம்பள உயர்விற்காகப் போராடும் ஆசிரியர்கள் மீதே எல்லாக் கணக்கையும் எழுதி விடுகிறார் இயக்குநர் கெளதம்ராஜ். அந்தக் கணக்கை மூன்றே மூன்று கேள்விகளால் வலுப்படுத்துகிறார் ஜோதிகா.

‘டேய், புது ஹெட் மிஸ்ட்ரஸ் ஒருத்தனை ஒரு அடி அடிச்சதும் அவன் பறந்து போய் விழுந்தான்டா’ என இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவனான கதிரிடம் சொன்னதும், அவன் ஜோதிகாவிற்கு துர்க்கையின் உருவம் கொடுத்துப் பார்க்கிறான். அதே சிறுவன் கீழே விழுந்ததும், அவனைத் தூக்கி நிறுத்தி ஜோதிகா முத்தமிட்டதும், க்ரீடமும் வெள்ளைச் சிறகுகளையும் கொடுத்து தேவதையாகப் பார்க்கிறான். தீயவர்களுக்கு துர்க்கையான ஜோதிகா ராட்சசியாகத் தெரிகிறார் எனப் பொருள் கொள்ளலாம் எனப் பார்த்தால், இரண்டாம் வகுப்பு மாணவன் மூலம் தேவதை யார், ராட்சசி யாரென விளக்கி விடுகிறார் இயக்குநர். சினிமாக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு, இந்தக் குழந்தைகள் படும்பாடு இருக்கிறதே! அவர் துர்க்கை இல்லை, வெள்ளைச் சிறகுகளுடைய தேவதை தான் எனத் தெளிவு வந்ததும், அப்பொடியனுக்கு ஜோதிகா மீது காதல் வந்துவிடுகிறதாம். ஷ்ஷ்ப்ப்பாஆஆ.. (அதாவது அந்தக் காட்சி வெறும் நகைச்சுவைத்தான் என்றுணர்ந்து, தலையில் ஏற்றிக் கொள்ளாமல் பிரச்சாரத்திற்கு மட்டும் கண்ணை மூடி செவிமடுத்தால் காதுக்கும் மனதுக்கும் நல்லது).

அந்த அழகு சிறுவனின் குழந்தைமை மீது புல்டோசர் வைத்து ஏற்றிவிட்டு, “ஐ, ரப்பர் வச்ச பென்சில்!” என்று மீண்டும் அவனைச் சிறுவனாக்கி வயிற்றில் பாலை வார்த்துவிடுகின்றனர்.

இயக்குநர் கெளதம்ராஜிடம் மூன்று கேள்விகள். ராட்சசியாய் விஸ்வரூபமெடுத்து, பள்ளியை உயர்த்தும் கீதா ராணி டீச்சர், ஏ.ஹெச்.எம். மீது எழும் பாலியல் குற்றச்சாட்டைக் காதும் காதும் வைத்தாற்போல் மூடி மறைப்பது ஏன்? இரண்டு பெண் குழந்தைகளின் அப்பா என்பதால் ராட்சசி ஏ.ஹெச்.எம்.-மைச் சஸ்பென்ஷனோடு மன்னித்து விடுகிறார் என்ற பதில் படத்திலுண்டுதான். ஆனாலும், இராணுவ ஒழுங்கோடு அனைத்தையும் கட்டியாளும் ராட்சசி, யார் மூலம் பிரச்சனை ஏற்பட்டாலும், அது எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும், மாணவிகளின் பாதுகாப்புக்குப் பள்ளி நிர்வாகம் உத்திரவாதமளிக்கும் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டாமா? ‘விதைத்திடு’ எனும் புத்தகத்தை ஜோதிகா படித்துக் கொண்டிருக்கிறார் எனப் படத்தில் காட்டப்படுகிறதுதான். ஒரு பள்ளி மாணவிக்குத் தகாத முறையில் தொந்தரவு தரும் ஒருத்தனுக்கு, வேலையிழப்பு மட்டுந்தான் சட்டபூர்வமான தண்டனையா? ராட்சசி வேடம் பூணும் தேவதைகள், சக ராட்சசன்களை இப்படிக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் வரை இங்கு எதுவும் மாறாது. மாற்றம் வேண்டும் என்ற பிரச்சாரம் மட்டும் தொடர்ந்து நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.