Search
petta-movie-review-1

பேட்ட விமர்சனம்

petta-movie-review-1

ட்ரெய்லரில் பார்த்த அதே இளமையான துள்ளலான ஸ்டைலான ரஜினியைத் திரையில் கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். எதற்கும் காத்திருக்காமல் படம் நேரடியாக ஒரு மாஸ் ஃபைட் சீனில் இருந்து தொடங்குகிறது.

ரஜினிஃபை பண்ணப்பட்ட படத்தில் ரஜினி எது செய்தாலும் அழகாக உள்ளது. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் படத்தின் முதற்பாதி ஒரு வண்ணக்கவிதையாய்க் கண்ணைக் கவர்கிறது. திணிக்கப்படாமல், அதே சமயம் வசனங்களில் அரசியலையும் கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஹாஸ்டலில் ரேகிங் நடக்கும்பொழுது, அதை நிறுத்தும் ரஜினி, ‘புதுசா வர்றவங்களை வர விடாமல் இப்படித்தான் ஓரம் கட்டி வைப்பீங்களா?’ என சீனியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்பது போல் வரும் வசனம் ஓர் உதாரணம்.

அனைவரும் பார்க்க விரும்பிய ரஜினியைத் திரையில் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜ், கதையில் அதிகம் மெனக்கெடவில்லை. ஒரு பழி வாங்கும் கதையை எந்தப் பெரிய திருப்பமும் இல்லாமல் வழங்கியுள்ளார். இரண்டாம் பாதியில் வரும் நேட்டிவிட்டி இல்லா மாஸ்த்தனம் நெருட வைக்கிறது. ‘புருஸ்லீ கராத்தே பள்ளி’ வைத்திருக்கும் பேட்ட வேலன், கார் டிக்கியில் இருந்து ஒரு துப்பாக்கியை உருவித் தேவாரத்தைச் சுடுகிறார். மாஸ் ஹீரோ என்றால் யோசிக்காமல் கொலை செய்வதும், எத்தனை பேர் வந்தாலும் அடிப்பதும் என்பதாகப் புரிந்து கொண்டிருப்பார் போல! அல்லது துப்பாக்கிகள் இலகுவாய்க் கிடைக்கக் கூடிய வன்மேற்கு (Wild west) நாயகர்களின் பாணியை வேட்டி கட்டி ரஜினியைச் செய்யவிட்டு விட்டார் போலும். மனப்பாங்கில் (Attitude) வில்லனுக்கும் ரஜினிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நவாசுதீன் சித்திக் ஒரு வெடிகுண்டினை வைத்து 40 – 50 பேரைக் கொல்கிறார். அதில் எஞ்சியவர்களை 10 பேர் கொண்டு துப்பாக்கிக் குழுவைக் கொண்டு கொல்கிறார். க்ளைமேக்ஸில் ரஜினியும் அதையே செய்கிறார்.

‘இது நான் விட்டு வச்ச 20 வருட பகை’ என உத்திரப் பிரதேசத்திற்குக் கிளம்பும் ரஜினி, நவாசுதீன் சித்திக்கிடம், ‘என் மண்ணையும் மக்களையும் சுரண்டியதுக்கு’ என விரலைச் சொடுக்குகிறார். அதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன், ‘என் நண்பன் குடும்பத்துக்கு ஒன்னுன்னா இந்த பேட்ட வேலன் முன்னாடி நிற்பான்டா. என் நண்பன் குடும்பத்தைத் தொட்டுத் தப்புப் பண்ணிட்ட’ என்பார். ரஜினியின் கோபம் மண்ணைச் சுரண்டியதற்காகவா அல்லது நண்பன் மகனைக் கொல்லப் பார்த்ததற்காக என்ற தெளிவு கார்த்திக் சுப்புராஜிற்கே இல்லை போலும். இரண்டாம் பாதி சசிகுமாருக்காக எழுதப்பட்ட கதையோ என்ற சந்தேகமும் எழுகிறது.  ‘கொல்லணும்னு முடிவு பண்ணிட்டா பேசிட்டு இருக்கக்கூடாது. கொன்னுடணும்’ என்றே தன் முதல் கொலையைச் செய்வார் பேட்ட வேலன். ஆனால் க்ளைமேக்ஸில், முதலில் கொழந்தங்களை விட்டு நவாசுதீன் சித்திக்கை அறைய விடுகிறார். கர்மா கணக்கை டேலி செய்தலில் வரும் போல? பின் சோஃபாவை இழுத்துப் போட்டு பழங்கதை எல்லாம் பேசுகிறார். படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். நவாசுதீன் சித்திகின் லிப் சின்க்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

‘குடியிருந்த கோயில்’ படத்தில் இருந்து, வில்லன் தன் எதிரியின் மகனையே கடத்திவிடும் சீனைக் கார்த்திக் சுப்புராஜ் சுட்டுவிட்டார் என்ற அவப்பெயரில் இருந்து தப்பிக்க, படம் முடிந்த பிறகும் ஒரு சீனை வைத்துள்ளார். ‘ராவணன் ஆண்டாலும் ராமன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை’ என்ற பாட்டிற்கு ரஜினி ஆடுகிறார். க்ளிஷே காட்சியாக இருந்தாலும் சரி, கார்த்திக் சுப்புராஜ் தன் இஷ்டத்திற்கு திரைக்கதையை வளைத்தாலும் சரி, எல்லா ஃப்ரேமிலும் ரஜினியின் மேஜிக்கை அவரிடமிருந்து கொண்டு வந்து விடுகிறார். ஹாஸ்டலில், சாவு வீட்டில், க்ளைமேக்ஸில் என ரஜினியின் ஸ்டைலான டான்ஸ் அட்டகாசமாக உள்ளது. கொண்டாட்டத்தைத் தரும் இந்தத் துள்ளலும் ஸ்டைலும் வேறு நடிகருக்கு வாய்க்குமா? அதனால் தான் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் படம் முழுவதும் ரஜினி மட்டுமே திரையில் இருக்கும்படி அவரது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை முழுவதுமாக உபயோகித்து, மற்ற அனைத்தையும் மறக்க வைக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

பேட்ட – ஏங்கிக் கிடக்கும் ரஜினியின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல கமர்ஷியல் சினிமா விரும்பிகள் அனைவருக்குமான வேட்ட!!