Search
katteri-movie

ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி

katteri-movie

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் த்ரில்லரக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான் விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘யாமிருக்க பயமே’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டிகே இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே’ படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் டீகே, வைபவ் சோனம் பஜ்வா, பொன்னம்பலம், சேத்தன், ஜான் விஜய், ரவி மரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர்கள் அனைவரும் படத்தில் தாங்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் உடையில் வந்து ஆச்சரியப்படுத்தினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தபின் நடிகர் பொன்னம்பலம் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான். சொல்லப்போனால் இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நான்காவது நாளே படக்குழுவினர் யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்சாக பிக்பாஸ் வீட்டிற்குச் சென்றுவிட்டார் பொன்னம்பலம். இந்த நிகழ்வில் பேசிய பொன்னம்பலம், “இந்தப் படத்தில் மிக முக்கியமான கேரக்டரை இயக்குநர் டிகே கொடுத்துள்ளார். நாங்கள் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பேர் வைப்பது போல, இயக்குநர் டிகேவுக்கு ‘டிராகுலா கிங்’ என்கிற பட்டத்தை வழங்குகிறேன்” எனக் கூறினார்.

ரவிமரியா பேசும்போது, “இந்தப் படத்தில் ஐந்து நாட்கள் நடித்திருந்த நிலையில் திரையுலக ஸ்ட்ரைக் வந்தது. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பித்தபோது இயக்குநர் டிகே என்னை அழைத்து வேறு ஒரு கேரக்டரைக் கொடுத்து இது சூப்பராக இருக்கும் நடியுங்கள் எனக் கூறிவிட்டார். பின்னர்தான் தெரிந்தது, கிட்டத்தட்ட என்னை மூன்றாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்கள் என்பது. சொல்லப்போனால், என் தொடைக்கு ஷாட் வைத்து அரை ரம்பாவாகவே என்னை மாற்றிவிட்டார்கள்.

இது ஒருபக்கம் என்றால் நாயகன் வைபவும், கருணாகரனும் என்னைப் படப்பிடிப்பு நாட்கள் முழுதும் கதாநாயகி பக்கமே நெருங்க விடாமல் சதிசெய்து பார்த்துக் கொண்டார்கள். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்கள் சோகமாக அமைந்தாலும் எனக்கு இந்தக் கேரக்டரில் நடிப்பது புது அனுபவமாக இக்கிருந்தது. இதுவரை, வில்லன்,காமெடி கலந்த வில்லன் என நடித்துவந்தேன். இயக்குனர் டிகே தான், ‘நீங்க காமெடியனாகவே நடிங்க சார்’ எனப் புது கேரக்டரில் என்னைப் பொருத்தியுள்ளார் .

ஹாரர் படங்களில் சந்திரமுகிக்குப் பின்னர் புதுவிதமான திரைக்கதை அமைப்பில் உருவாகியுள்ள படம் என்றால் அது காட்டேரிதான் என அடித்துச்சொல்வேன். பாக்யராஜைப் போல திரைக்கதையில் வித்தியாசமாக யோசித்துள்ளார் டீகே.

அதேபோல வரலட்சுமியுடன் நடித்ததும் புது அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியில் அவர் என்னை உதைக்க வேண்டும். ‘என்னிடம் பாதுகாப்பது கவசம் அணிந்திருக்கீங்களா?’ எனக் கேட்டார் வரலட்சுமி. நான் எதற்கு எனக் கேட்க, அவரோ ரொம்ப கூலாக, ‘நான் பாலா சார் ஸ்டூடண்ட். உதைக்கிறது எல்லாமே ரியலாவே பண்ணித்தான் பழக்கம்’ எனத் தன் பங்குக்கு டெரர் ஏற்றினார் வரலட்சுமி” எனக் கலகலப்பாக தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.

இசையமைப்பாளர் பிரசாத் பேசும்போது, “பொதுவாகவே ஹாரர் படங்கள் என்றால் எனக்கு பயம். அதுவும் இந்தப் படத்தின் ஹாரர் காட்சிகளைப்பார்த்து, இரவில் இசையமைக்க பயந்துகொண்டு பகலில் தான் இசையமைத்தேன்” எனக் கூறினார்

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “நான் பார்த்த வரையில் இயக்குநர் டிகேவின் திறமையை இங்கே பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அடுத்து மீண்டும் ஹாரர் படமா என தயங்கிய அவரை நான் தான் வற்புறுத்தி இந்தப்படம் பண்ண வைத்தேன். காரணம் இது வழக்கமான பேய்ப்படம் இல்லை. டீகேவிடம் சூர்யா, விக்ரம் என மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் கைவசம் இருக்கின்றன. ‘காட்டேரி’ ரிலீஸுக்குப் பிறகு அவர் மாஸ் இயக்குநராக மிகப்பெரிய இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார். அதேபோல வைபவுக்கும் அவரது திறமைக்கு தீனிபோடும் கதைகள் கிடைக்கவில்லை என்றே சொல்வேன். அவரும் கூட, இங்கே குறைத்தே மதிப்பிடப்படுகிறார். பட்டினியில் இருந்தவன் வாய்ப்புக் கிடைத்ததும் சிக்ஸ் அடித்தது போல் நடித்துள்ளார்” என்றார்.