Search
Super-deluxe---glittering-empty-box-2

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 2

Super-deluxe---glittering-empty-box-2

ஒரு கதை சொல்லட்டுமா?

திருவாரூர் தொகுதியில், அமமுக கட்சியின் வேட்பாளர் பெயர் எஸ்.காமராஜ். அமமுக-விற்குக் குக்கர் சின்னம் கிடைக்கவிடாமல் செய்த அதிகார மையம், அதே தொகுதியில் சுயேட்சையாக நிற்கும் B.காமராஜ்க்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கிக் குழப்பத்தை உண்டு செய்ய முயல்கிறது. தோட்டத்து வாசல் மூலம் உள்ளே நுழைவதில் பெரும் பிரேமை கொண்டவர்களின் தர்மம் (தேவை), இப்படியான குழப்பத்தை ஏற்படுத்துவதில் இருந்தே தொடங்கும்.

‘தென்னந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம்’ தொடங்க உதவி செய்து தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய ‘ரெட் டீ’ நாவல் எழுதிய பி.எச்.டேனியலை அசிங்கப்படுத்துவது போல மருத்துவர் பரிசுத்தம் கதாபாத்திரத்தினைப் பரதேசி படத்தில் அமைத்திருப்பார் இயக்குநர் பாலா. பி.எச்.டேனியல் எனும் மனிதர் வாழ்நாளெல்லாம், தொழிலார்களுக்காகப் போராடி, அவர்களுக்கு உரிமையையும் அடிப்படை வசதியும் மீட்டதோடு, தேயிலைத் தோட்டத்தில் நடைபெற்ற கொடுமையை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துள்ளார். இயக்குநர் பாலா ஆஃபீஷியலாக அந்த நாவலுக்கு ரைட்ஸ் வாங்கி, அந்த நாவலை எழுதிய போராளியையே கோமாளி மருத்துவர் ஆசிர்வாதமாகச் சித்தரித்து, ‘வாட்டே கலைஞன்!’ என்ற பெயரையும் வாங்கிக் கொண்டுவிட்டார். வரலாறைத் தனக்குச் சாதகமாய்க் காயடிக்கும் அப்பழுக்கற்ற தூய ஃபாசிசம் இது. ‘நானொரு படைப்பாளன். எனக்கு எதையும் கிண்டல் செய்யும், மாற்றும் சுதந்திரம் உண்டு’ என்பது எவ்வளவு சொரணையற்ற வன்ம மனநிலை? சமூகப் பொறுப்புணர்வில் இருந்துதானே படைப்பூக்கம் எழ வேண்டும்? பாலாவின் தகிடுதத்தால் டேனியல், இனி என்றென்றைக்கும் ஆசிர்வாதமே!   

ஒரு பெயரில் என்ன இருக்கிறது?

அற்புதத்தின் மகனைக் காப்பாற்ற தன் பைக்கை விற்கும் ஒரு சாமானியருக்கு ராமசாமி என்று பெயர் வைத்திருப்பார் தியாகராஜன் குமாரராஜா. அந்தப் பாத்திரம், கடவுளின் வலது கரமான அற்புதத்திற்கு வலது கரமாகவும், கடவுளின் கிருபையை சதா விஸ்வாசித்துக் கொண்டிருப்பதுதான் பிரச்சனை. அப்படிப் பெயர் வைத்ததில் இயக்குநரின் நக்கலும் கிண்டலும் வெளிப்படுகிறதாம். இதில் என்ன டேஷ் கிண்டல் என்று புரியவில்லை?

vadivelu-changing-history

ராமசாமி என்று குறிப்பிட்ட அந்தக் கதாபாத்திரத்திற்குப் பெயர் வைத்தது பச்சை அயோக்கியத்தனம். எப்படியேனும் காலை ஊன்றிவிட வேண்டுமென ஹிந்து மத அடிப்படைவாதிகள் எல்லா வழிகளிலும் அச்சுறுத்தும் வகையில் முயன்று வருகின்ற வேளையிது. அவர்களை அண்டவிடாமல் தடுக்கும் சக்தியாக ஈ.வெ.ராமாசாமி போட்ட பகுத்தறிவு விதை தான் இன்றளவும் தமிழ்நாட்டைக் காப்பாற்றி வருகிறது.

ஒரு விதையில் என்ன இருக்கிறது?

சூப்பர் டீலக்ஸ் மாநிலமாய் தமிழகம் திகழ்வதற்கான காரணம் அதில் இருக்கிறது. அதற்கு என்றென்றும் ராமசாமிக்குக் கடமைப்பட்டுள்ளவராய் இருத்தல் அவசியம். அல்லது உத்திர பிரதேசத்தில் நடந்ததுபோல் நமது குழந்தைகளின் பிணம் மீது அமர்ந்து நம்மை நாட்டாமை செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்களால் என்ன இயலுமெனத் தூத்துக்குடியில் முகத்தில் சுட்டு டெமோவும் காட்டிவிட்டார்கள்.

இந்தியாவெங்கும் இருந்து 125 இயக்குநர்கள் ஒன்றிணைந்து, பா.ஜ.க.வை வெல்ல விடக்கூடாதென கூட்டறிக்கை விடுகின்றனர். அந்த அறிக்கையில் உள்ள பெரும்பான்மைவற்றைப் பற்றி தன் வாழ்நாளெல்லாம் மேடைதோறும் முழங்கியவர் ராமசாமி. தியாகராஜன் குமாரராஜா, அந்த 125 கலைஞர்களோடு தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியதில்லை, அவர்களது முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், எப்போ எப்போ எனக் காத்திருக்கும் தீவிர வலதுசாரி (Hindu Extremists) நபர்களைக் குளிர்விக்கும்படியான அயோக்கியத்தனத்தைத் தவிர்த்திருக்கலாம். இதற்குச் சங்கிகளின் குதூகலமே சாட்சி.

அற்புதத்தின் வலதுகரத்திற்கு எந்தப் பெயர் வேண்டுமானாலும் இயக்குநர் சூட்டியிருக்கலாம். ஆனால், அப்படி அந்தப் பாத்திரத்திற்கு ராமசாமி எனப் பெயர் வைத்ததுதான் நகைமுரண், இயக்குநரின் ஜீனியஸ் எனச் சிலாகிக்கிறார்கள். தியாகராஜன் குமாரராஜாவின் அந்த டேஷ் கிண்டலை திருவாளர் ஹெச்.ராஜா போன்றவர்களால் வேண்டுமானால் ரசிக்க முடியலாம். பின்னங்கதவையே எடுத்து விட்டு, இரும்புச் சுவரெழுப்ப நினைப்பவர்களால் அதை ரசிக்க இயலாது.

ஏலியன் வருடம் 56″

நாகதத்தன்: யார் சப்ப?

நரேந்திரகுப்த செளக்கிதான்: ஏழாவது சீனில் வரும் செந்நிறச் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் மஞ்சள் போஸ்டரிலுள்ள நீல நிற எழுத்துகளைப் படித்து, பதிமூன்றாவது சீனில் பச்சைச் சட்டை போட்டு ஃப்ரேமின் ஓரம் நடந்து செல்பவரின் பாக்கெட்டில் வரையப்பட்டிருக்கும் சின்னத்தை டீகோட் செய்து, இருபதாவது சீனில் ரேடியோவில் வரும் குரலோடு பொருத்திப் பார்த்து, யாரால் எல்லாம் ராமசாமிக்கான குறியீட்டுப் பெயர் விளக்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையோ அவர்களே சப்ப என்றறிவாயாக!

நாகதத்தன்: போடாங் வெங்காயம்.

தொடரும்..

– தினேஷ் ராம்

(பிற்சேர்க்கை.: “ஒரு பெயருக்கா இத்தனை ஆவேசம்? ‘சோ’ கூட ராமசாமி தான்!” என்றார் நண்பர். எத்தனையோ ராமசாமிகளில், சட்டென ஞாபகத்துக்கு வருபவர் பெரியார்தான். மேலும், ஒட்டுமொத்த படமே வலதுசாரி (மனு ஸ்மிரிதி) சார்பு எடுத்திருப்பதாகத் தோன்றுவதால், பெரியாரை அவரது ‘கடவுள் மறுப்பு’க் கொள்கைகாகக் கிண்டல் செய்யும் இயக்குநரின் அற்பத்தனமான மகிழ்ச்சியாகவே பார்க்கிறேன்.)