Search
super-duper-review

சூப்பர் டூப்பர் திரைப்படம்

super-duper-review

சூப்பர் என்பது விலை மதிப்புமிக்க போதைப் பொருள் ஒன்றின் பெயர். டூப்பர் என்பது, ஏமாற்றுக்காரனான தன்னைத் தானே நாயகன் அழைத்துக் கொள்ளும் ஒரு பட்டப்பெயர்.

நிழலுலகத்து மைக்கேலிற்குச் சொந்தமான சூப்பர், டூப்பரிடம் சிக்கிக் கொள்கிறது. மைக்கேல் சூப்பருக்காக டூப்பரைத் துரத்த, டூப்பர் மைக்கேலிடம் இருந்து தப்பித்து, பின் சூப்பர் டூப்பர் அவதாரமெடுத்து, மைக்கேலைத் தன் வழியிலிருந்து அகற்றுவதுதான் படத்தின் கதை.

கோமாளி படத்தில் மனநல மருத்துவராக நடித்திருக்கும் சாரா, இப்படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். நாயகனின் மாமாவாக மீசை வைத்தும், ஐபிஎஸ் விக்ரமாக மீசை இல்லாமலும் வருகிறார். ஷிவா ஷா ரா எனத் திரையில் அவரது பெயரும் நீளம் பெற்றுள்ளது. பேசியே கொல்கிறார், ஆனால் நகைச்சுவைக்குக் கொஞ்சமும் உதவவில்லை. இந்தப் படத்தில் இவர் ஏன் இரண்டு பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கச் சொல்கிறார் இயக்குநர் ஏ கே (AK) எனும் அருண் கார்த்திக்.

வேதா எனும் ரெளடியாக ஸ்ரீனி நடித்துள்ளார். அவரைப் பிடிக்க நினைக்கும் காவல் அதிகாரி விக்ரம் கதாபாத்திரத்தில்தான் ஷிவா ஷா ரா வருகிறார். இந்த கிளைக் கதையை க்ளைமேக்ஸில் கொண்டு வந்து முடித்து வைத்துவிடுகின்றனர். எதையும் நேரடியாகத் தெளிவாகச் சொல்ல முடியாமல், காட்சிகள் ஃப்ரீஸ் செய்து நிறைய காமிக்ஸ் கட்களாக வழங்கியுள்ளார் இயக்குநர் ஏகே. சீரியஸான படம் போல் ஒரு தோற்றம் தந்தாலும், ஜாலியான ஜானரில்தான் முயற்சி செய்துள்ளனர். அந்தக் கலவை சரியான விகிதத்தில் இல்லாததால், படம் பார்வையாளர்களைப் பதம் பார்த்து விடுகிறது.

ஷெரினாக இந்துஜா நடித்துள்ளார். அவரது அப்பாவிற்கும், அண்ணனிற்கும், அம்மாவிற்கும் ஒரு வலுவான கதை இருப்பது போல் நாயகிக்கு ஏதும் ஸ்ட்ராங்காக இல்லை. ஜாலியான படமென்றாலும், சீரியசான தொனியில் சுலபமாய் ஏற்க முடியாத ஒரு கதையை நாயகியின் அம்மாவிற்கும் அண்ணனிற்கும் போகிற போக்கில் வழங்கியுள்ளார் இயக்குநர்.

வில்லன் மைக்கேலாக ஆதித்யா ஷிவ்பின்க் நடித்துள்ளார். கதைப்படி அவரது தந்தை பெயர் லாரன்ஸ்; இவரது பெயர் நந்து. பணத்தாசை எழுந்ததும், நிழலுலக மைக்கேலாகத் தன்னை உருமாற்றிக் கொள்கிறார். அவரது உடல்மொழி பொருந்திப் போனாலும், அவர் வில்லனாக மனதில் பதியமாட்டேங்கிறார். காரணம், இது சீரியசான படமாகவும் இல்லாமல், ஜாலியான படமாகவும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாகப் பயணிப்பதால்.

டூப்பர் சத்யாவாக துருவா நடித்துள்ளார். ‘ஆண்மை தவறேல்’ நாயகனாக நடித்தவரின் இரண்டாவது படமிது. திட்டம் தீட்டி எதையும் சாதிக்கவல்லவர். இவரது முன்கதையை டைட்டில் கிரெடிட்டின் பொழுதே காமிக்கலாகச் சொல்லி விடுகின்றனர். இவருக்கு இந்துஜா மீது காதல் வந்ததற்கான தருணங்கள் அழுத்தமாக இல்லை. படம் கொஞ்சம் எமோஷன்ஸையும் கணக்கில் கொண்டிருக்கலாம். இப்படி சீரியஸ், ஜாலி மிக்ஸிங் கலவைப் பிரச்சனையால், படம் எந்தத் தாக்கத்தையும் தரத் தவறிவிடுகிறது.