Search
the-accountant-fi

தி அக்கெளன்டன்ட் விமர்சனம்

The Accountant Review in Tamil

மிக நிறைவானதொரு ஆக்‌ஷன் த்ரில்லர்.

க்றிஸ்டியன் வொல்ஃப் ஓர் ஆட்டிச சிறுவன். படம் முக்கியத்துவம் பெறுவது இந்தப் புள்ளியில்தான். அது மேலும் விசேஷமாவது, அதில் வரும் வித விதமான மனிதர்களால். “க்றிஸ்டியனை எங்களிடம் விட்டுப் போங்க. இந்தக் கோடையில் மட்டுமாவது.. பணம் எதுவும் வேண்டாம். இலவசமாக.. நாங்க அவனைப் பொறுப்பா கவனிச்சிக்கிறோம்” என்கிறார் ஹார்பர் நியூரோசயின்ஸ் நிறுவனத்தின் தலைவர். “இவர்கள் போன்றவர்களுக்கு, திடீர் சத்தமும் வெளிச்சமும் பாதுகாப்பற்ற உணர்வைத் தருவதால் கத்துறாங்க. ஸ்பெஷல் கிட்ஸைப் பார்த்துக் கொள்வது ஒரு சவால்” என்பார் அந்நிறுவனத்தின் தலைவர். அதற்கு க்றிஸ்டியனின் அம்மா, “மற்ற குழந்தைகளுக்கு அப்படி நேரும்போது, அது சவால். உங்க குழந்தைகளுக்கு அப்படியாகும் போது அது பிரச்சனை” என்பார் மன அழுத்தத்தில். அவருக்கு க்றிஸ்டியனை அங்கேயே விட்டுவிட வேண்டுமென எண்ணம். இராணுவ அதிகாரியான க்றிஸ்டியனின் தந்தை, “அவனுக்கு சத்தமும் வெளிச்சமும் பிரச்சனைன்னா, அதை கம்மி செய்யக் கூடாது; அதிகப்படுத்தணும். அவனை நானே பார்த்துக்கிறேன்” என்கிறார் அதீத பாசத்துடன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு. இதனால் மேலும் பதற்றத்துக்கு உள்ளாகும் க்றிஸ்டியனின் அம்மா, கணவனை விட்டு விலக முடிவு செய்கிறார். அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் க்றிஸ்டியனின் தம்பி ப்ராக்ஸ்டன், தங்களை விட்டுப் பிரிந்து போகும் தாயைப் பார்த்து நடு விரலை மட்டும் நீட்டுகிறான்.

ஆஜானுபாகுவாக, ஆட்டிசக் குறைபாடுள்ள கணித அறிவாளியாக, கார்ப்ரேட் நிறுவனங்களின் மிகச் சிக்கலான கணக்கு வழக்குகளைச் சீர்ப்படுத்தும் அக்கெளன்டன்ட்டாகத் திரையில் தோன்றும் பென் அஃப்ளெக் கலக்கியுள்ளார். அவரிடமுள்ள ஒரே கெட்ட பழக்கம், நெற்றியில் மட்டுமே சுடுவார். தப்பித் தவறி வயிற்றிலேயோ காலிலேயோ சுட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், அடுத்த குண்டுகளில் ஒன்றை நெற்றிக்கு அனுப்பி விடுவார். அவரது பிரச்சனைகளில் அதுவும் ஒன்று. செய்யத் தொடங்குவதை முடிக்காவிட்டால், தன் இயல்பு நிலையை இழந்து விடுவார். அவருக்கு காமிக்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். காமிக்ஸ் ஹீரோக்கள் எதிரிகளை நெற்றிப் பொட்டில் சுட்டுத்தான் வீழ்த்துவார்கள். தன்னைத் தேடி கொலையாளிகள் எப்பொழுது வேண்டுமானாலும் வருவார்கள் என்ற பதற்றமான நிலையிலும், தனக்குப் பிடித்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தை எடுத்துக் கொண்டே இடத்தை காலி செய்கிறார்.

வசனங்கள் எல்லாம் செம ஷார்ப். நாயகனின் விநோதமான நடவடிக்கைகளால் குழம்பிப் போகும் டானா க்யூமிங்ஸ், “என்ன கிண்டலா?” எனக் கேட்பார். “இல்லை. கிண்டல் மிக எரிச்சலானது” என சீரியசாகப் பதில் சொல்வார் நாயகன். மிக இயல்பானதொரு விவாதத்தை க்றிஸ்டியனுடன் முன்னெடுக்க விரும்பும் டானாவிற்கு நிறைய ‘பல்ப்’களைத் தருவார் க்றிஸ்டியன். பிறிதொரு சமயத்தில், “எனக்கு மற்றவர்களிடம் பேசுவதிலும் பழகுவதிலும் இயல்பாகவே சிக்கல். நான் விருப்பப்பட்டாலும் என்னால் முடியாது” என்பார். படம் ஆக்ஷன் படமெனினும், நாயகன் மூலமாக ஆட்டிசம் பற்றிய புரிதலையும் மிக நேர்த்தியாகப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார் திரைக்கதையாசிரியரான பில் டுபுக்யு (Bill Dubuque).

டானா க்யூமிங்ஸாக அன்னா ஹெண்ட்ரிக்கும், மெடினா எனும் பாத்திரத்தில் சின்த்தியா அடை ராபின்சன் அசத்தியுள்ளனர். கணக்கு வழக்குகளில் நடக்கும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் ட்ரெஷரி டிப்பார்ட்மென்ட்டில் அனாலிஸ்ட்டாகத் திருப்திக்கரமான வேலையில் இருக்கும் மெடினாவை, அந்த டிப்பார்ட்மென்ட் இயக்குநரான ரே கிங், அவளின் பழைய க்ரைம் ரெக்கார்டைத் தோண்டி எடுத்து அக்கெளன்டன்ட்டைக் கண்டுபிடிக்காவிட்டால், ரெக்கார்ட்களை மறைத்தததைப் பகிரங்கப்படுத்தி வேலைக்கு உலை வைத்து விடுவேன் என அச்சுறுத்துகிறார். ரேமண்ட் கிங்காக நடித்திருக்கும் J.K.சிம்மன்ஸும் பிரமாதப்படுத்தியுள்ளார். பிரம்மப் பிரயத்தனப்பட்டு மெடினா, அக்கவுன்டன்ட் யாரெனக் கண்டுபிடித்து விடுகிறார். அதன் பின் மெடினாவிற்கும், ரே கிங்கிற்கும் நடக்கும் உரையாடல்கள் மிக முக்கியமானவை. அந்த உரையாடல் ஒரு கேள்வியிலிருந்து தொடங்கும். அது, “உங்களுக்கு கடினமான வாழ்க்கை (rough) என்றால் என்னவென்று தெரியுமா?” என ப்ளாக்-மெயில் செய்யப்பட்ட கடுப்புடனும் வெறுப்புடனும் கருப்பினப் பெண்மணியான மெடினா கேட்கும் கேள்வியே!

படத்தில் நாயகியென யாரும் இல்லையெனினும், ஒரு பெண்ணின் கணினிக் குரலை (Computer voice) நாயகியாகப் பாவிக்கலாம். நாயகனின் பிரதான வேலை என்னவென்றால், யாராவதொரு கணித மேதையின் பெயரைப் புனைப்பெயராகச் சூடிக் கொண்டு பயங்கரவாதக் குழுக்களின் கணக்கு வழக்குகளைச் சீர்படுத்தித் தருவதுதான். பயங்காரவாதக் குழுக்களோடு பேசி நாயகனை அந்த வேலைக்கு அமர்த்துவது, நாயகனின் இலைமறை வேலைகளுக்குத் தேவையான அனைத்து விதமான தகவல்களையும் திரட்டித் தருவது, ரேமண்ட் கிங்கிற்கு உதவுவதென அந்தக் “பெண் குரல்” பல ஹை-டெக் சாகசங்களைப் புரியும்.

டானாவையும், அக்கவுன்டன்ட்டான நாயகனையும் கொலை செய்யச் சொல்லி பெருமுதலாளியான லாமர், ஒரு கை தேர்ந்த தொழிற்முறை கொலையாளி ஒருவனை நியமித்திருப்பார். கொலையாளி அனுப்பும் அடியாட்களின் நெற்றியில் எல்லாம் ஓட்டை போட்டுவிட்டு, லாமரைத் தேடிச் செல்வார் நாயகன். லாமரின் மாளிகையைச் சுற்றி கேமிராக்களைப் பொருத்தி, தனது ஆட்களோடு அக்கவுன்டண்ட்டாகக் காத்திருப்பான் கொலையாளி. கொலையாளியின் அடியாட்களை எல்லாம் கொன்று விடுவார் நாயகன். லாமரோ நிலைகொள்ளாமல் தவிப்பார். இறுதியில், கொலையாளியும் நாயகனும் நேருக்கு நேர் சந்தித்து, ஒண்டிக்கு ஒண்டி மோதலில் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொள்வார்கள். க்ளைமேக்ஸ் சண்டை. ஆனால், திரையரங்கிலோ செம சிரிப்புச் சத்தம். குறிப்பாக, என்ன நடக்கிறதெனப் புரியாமல் முழிக்கும் லாமரின் முகத்தைக் காட்டும் பொழுது சிரிப்புச் சத்தம் உச்சத்தைத் தொடுகிறது. படம் சுபமாய் முடிந்து, அந்தக் “கம்ப்யூட்டர் வாய்ஸ்” எங்கிருந்து வருகிறது எனக் காட்டும் பொழுது, மகத்தான ஆச்சரியமும் பிரமிப்பும் எழுகிறது (ஆனால், ஒரு சிலருக்கு அப்படியொன்றும் பிரமாதமான ஆச்சரியமாய் இருக்காது. ஆனால், ஆட்டிசம் பற்றிய புரிதல் கொஞ்சமேனும் இருந்தால் தான் உணர இயலும். எஸ்.பாலபாரதியின் துலக்கம் நாவல் படித்திருந்தால், படத்தின் க்ளைமேக்ஸினுடைய காரணத்துக்கான பதில் நாவலின் முடிவிலுள்ளது என்பது உங்களுக்கு நினைவில் எழும்).

ஒரு சாதாரண ஆக்‌ஷன் படம் எப்படி நிறைவைத் தரும்? அதன் இறுதி வசனங்களால்தான்.

“உங்க பையன் அனைவரையும் போல் நார்மலாகத்தான் இருக்கான். அதை அவனுக்கு உங்களிடம் சொல்லத் தெரியவில்லை. அல்லது, இன்னுமும் நமக்கு அதை எப்படிக் கவனிப்பதெனத் தெரியவில்லை.”