Search
Thuklag---Amaithi-Padai---LKG

துக்ளக், அமைதிப்படை வரிசையில் LKG

Thuklag---Amaithi-Padai---LKG

எல்.கே.ஜி. படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், “எல்.கே.ஜி எனது ஹோம் பேனரின் முதல் தயாரிப்பாகும். என் தந்தை ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைவதற்கு ஒரு கனவு கண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 46 வயதில் காலமானார். இந்தப் படத்தின் மூலம் அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவருடைய மொத்த குழுவும் சொன்னபடியே படத்தை முடித்துத் தந்திருக்கிறார்கள். எனவே அது எங்கள் ஸ்டூடியோவில் வெளியாகும் முதல் படமாகி இருக்கிறது. காரில் ஒன்றாகப் பயணிக்கும்போது ஆர்.ஜே. பாலாஜி இந்தப் படத்தின் அடிப்படைக் கருத்தை எனக்கு விளக்கினார். அது என்னை மிகவும் ஈர்த்தது. உடனடியாக படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். நேற்று இரவு நாங்கள் இந்தப் படத்தின் இறுதிப்பிரதியைப் பார்த்தோம். ஆர்.ஜே.பாலாஜியைப் பாராட்டுவதை என்னால் நிறுத்த முடியவில்லை. இது மற்றவர்களைக் கலாய்த்து எடுக்கப்படவில்லை, ஒரு நல்ல செய்தியைத் தாங்கி வந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில், இப்போது வரை கொண்டாடப்படும் சத்யராஜ் சாரின் அமைதிப்படை படத்தின் மிகத் தீவிரமான ரசிகன். அந்த வரிசையில் இப்போது LKG படமும் சேரும்” என்றார்.

“ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்துக்கு இசையமைக்க முதல் முறையாக என்னை அணுகியபோது, நான் மிகவும் உற்சாகமாகமானேன். படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், பின்னணி இசையமைக்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். படத்தை பார்த்த உடனேயே ஆர்.ஜே. பாலாஜியை அழைத்து சமீபத்தில் என்னைக் கவர்ந்த முதல் அரசியல் திரைப்படம் இது தான் என்று கூறினேன். அதனால் சிறந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருந்தது” என்றார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.

இரண்டு படங்களே நடித்துள்ள ஜே.கே.ரித்தீஷ், “ஹீரோவாக மட்டுமே நடித்த என்னை ஆரம்பத்தில் இந்தத் திரைப்படத்திற்கு அணுகியபோது, அது பாஸிடிவ்வான முன்னணி கதாபாத்திரமாக இருக்கும் என  நினைத்தேன். இந்தப் படத்தில் ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்று இப்போது வரை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் உண்மையில் ஜிகர்தண்டா பாபி சிம்ஹா கதாபாத்திரம் போன்றது தான் என் நிலை என்பதை இப்போது நான் உணர்கிறேன். என்னை வச்சுச் செஞ்சுட்டார் ஆர் ஜே பாலாஜி. நடிகர்கள் மற்றும் ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்குகளில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஆர்.ஜே. பாலாஜியை உங்கள் படங்கள் எதிலும் தவற விடக்கூடாது என்று ஐசரி கே கணேஷ் அவர்களிடம் நான் அடிக்கடி சொல்லுவேன். அவரின் எனர்ஜியும் அர்ப்பணிப்பும் அப்படிப்பட்டது” என்றார்.

படத்தை வெகியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், “சமூகத்தை பற்றிய ஆர் ஜே பாலாஜியின் சிந்தனை சோ ராமசாமி அவர்களுடையது போலுள்ளது. சார்லி சாப்ளின் ஹிட்லர் படத்தை எடுத்தது போல, சோ ராமசாமி சார் முகம்மது பின் துக்ளக் படத்தை எடுத்தது போல, எல்.கே.ஜி படம் ஆர்.ஜே.பாலாஜிக்கு இருக்கும் என்று நிச்சயமாக உறுதியளிக்கிறேன்” என்றார்.

“நாஞ்சில் சம்பத் சார் ஒர் அரசியல்வாதியாக இருந்தபோதும், இந்தப் படத்திற்கு நாங்கள் அவரை அணுகியபோது, அவர் கேட்ட முதல் விஷயம், அவருடைய மகனின் கல்லூரி கட்டணத்திற்கு பணம் கட்ட முடியுமா என்பது தான். இத்தகைய மோசமான சூழ்நிலையில் அவரைப் பார்க்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மோசமான அரசியல்வாதியின் கதாபாத்திரத்திற்காக நாங்கள் அவரை அணுகிணோம். ஆனால் அவரைப் பற்றிய எனது கருத்துகள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருந்தன. அவர் ஒரு அற்புதமான மனிதர். இப்போது சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அவர் நடித்து வருகிறார், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் பிஸியான நடிகராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். 

கடந்த சில ஆண்டுகளாகவே நான் நகைச்சுவை நடிகராக நடிக்கவில்லை, அதில் எனக்கு திருப்தியே இல்லை. நிறைய பேர் கிடைக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணாத, நடிச்சி நல்லா பணம் சம்பாதி என அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அந்த நேரத்தை நான் LKG ஸ்கிரிப்ட் எழுத உபயோகித்துக் கொண்டேன். சென்னை வெள்ளம் முடிந்து வந்த தேர்தலில் வெறும் 57% வாக்குகள் பதிவான போது தான், இளைஞர்கள் யாருக்கு, ஏன்  வாக்களிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். LKG படத்தைப் பார்த்த பிறகு, அவர்கள் நிச்சயம் வெளியே வந்து வாக்களிப்பு சதவிகிதத்தை அதிகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இது ஒரு ஸ்பூஃப் படம் அல்ல. பார்வையாளர்களை ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்திக்க வைக்கும் படம். இது என் சொந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு படம் அல்ல. சமூகத்திற்கு ஏதாவது செய்யும் படம். பிப்ரவரி 22 அன்று படம்  வெளியான ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி.