Search
theatre tn

மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

theatre tn

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது.

கொரானோ தொற்றுப் பரவலைப் பொறுத்து, சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள் என எல்லாத் தொழில்களையும் நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்கத் தொழில் மூலம் அரசுக்கு வருவாய் தந்து வந்தது. இந்தத் தொழில் மூலம்சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.

திரையரங்குகள் மூடப்பட்ட பின் 50,000 தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது. பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என “தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்” வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகளாவன:

-> திரையரங்கு உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்.

-> அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால் அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டுட்டு திரையரங்கு உரிமையாளர்கள் முன் தயாரிப்புப் பணிகளை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.

-> தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்துப் பொருட்கள், போக்குவரத்துச் செலவுகள் விலையேற்றம் பெற்றுள்ளன

இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில் திரைப்படங்களைக் கண்டுகளிப்பது சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கட்டுகள் விற்பனைச் செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும்.

இதன் காரணமாக டிக்கெட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்கக் கூடிய திரையரங்கு தொழிலை பாதுகாக்கவும் பார்வையாளர்கள் வருகையை உறுதிப்படுத்தி அதிகரிக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றித்தர வேண்டுகிறோம்.

தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றன. இவற்றில் தனி திரையரங்குகள் 700,
இரண்டு மற்றும் அதற்கு அதிகமான திரைகளைக் கொண்ட மால், மல்டிபிளக்ஸ் 300 உள்ளன.

தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8% முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம்.
இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்க டிக்கெட் கட்டணம் குறையும. அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாகப் படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். இதன்மூலம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு என அனைத்துப் பிரிவினருக்கும் வருவாய் கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

தனித் திரையரங்குகளுக்கான GST வரியை 5 சதவிகிதமாகக் குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்.
இவ்வாறு குறைத்து நிர்ணயம் செய்யும் வரிக்கு தற்பொழுது உணவகங்களுக்கு விதித்துள்ளது போன்று உள்ளீடு மறுப்பு (no input tax credit) முறையை அமுல்படுத்த
வேண்டுகிறோம். இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது ₹100க்கு விற்பனை செய்யப்படும்
(GST 12% + LBTtax8%) டிக்கெட் விலை 84 ரூபாய் 5% GSTயுடன் சேர்த்துக் குறையும்.

இதன் காரணமாக திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறையும். சாமானிய மக்கள் திரையரங்குக்கு அதிகமாக வருவதற்கான சூழல் உருவாகும்.

மால், மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்பொழுது நடைமுறையில் 18% , 12% GST வரியை ரத்து செய்து, ஒரே GST 12% நிர்ணயம் செய்து தரவேண்டுகிறோம். தேசிய ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனித் திரையரங்குகளுக்கு அதிகபட்சமாக 15% பார்வையாளர்கள் அளவில்தான் வருகை இருந்தது. மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில், 20% பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும். இல்லாத பட்சத்தில் 10% பார்வையாளர்களுக்குக் குறைவாகவே வருவார்கள். இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் திரையரங்கு தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்.

தற்பொழுது கொரோனா காரணமாகத் திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் திரையரங்கிற்கான மின் கட்டணத்தில் 50% சலுகை தர வேண்டுகிறோம்.

மேலும் தற்பொழுது முழுமுடக்கக் காலம் வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம் தொழில் துவங்கிய பிறகு திரைத்தொழில் சகஜ நிலைக்குத் திரும்பும்வரை சொத்து வரியில் 50% சலுகை தர வேண்டுகிறோம்.

தமிழகத்தில் கிராமங்கள் சிறுநகரங்களில் கெளரவத்திற்காகக் காலங்காலமாக இயங்கிவரும் தனித்திரையரங்குகளை அழிவில் இருந்து காத்திட, மத்திய மாநில அரசுகள் மேற்காணும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுகிறோம்.

M. திருப்பூர் சுப்பிரமணியன், தலைவர்
R.பன்னீர் செல்வம், பொதுசெயலாளர்
D.C.இளங்கோவன், பொருளாளர்