Search
vip-2-review-fi

வேலையில்லா பட்டதாரி – 2 விமர்சனம்

vip 2 movie review

‘இன்ஜினியர் ஆஃப் தி இயர்’ பட்டம் வாங்கும் ரகுவரன் மீண்டும் வேலையில்லாப் பட்டதாரி ஆகி விடுகிறார். வி.ஐ.பி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எனும் சொந்த நிறுவனம் தொடங்குகிறார். அதுவும் கை விட்டுப் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை.

வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி. வசுந்தராவாக கஜோல். அனைத்திலும் பெஸ்ட், எப்பவும் ஃபர்ஸ்ட் என்பதுதான் அவரது கொள்கை. எப்பவும் வெந்நீரில் காலை நனைத்துக் கொண்டது போல் ஓர் அவசரத்துடனும், முழு மேக்கப்புடனுமே திரையில் வலிய வருகிறார் கஜோல். அவரால் ஒரு நிமிடத்தைக் கூட வேஸ்ட் செய்ய முடியாத அளவு பிஸியான கதாபாத்திரமாம். ஆனாலும், நம்பர் 1 இன்ஜினியர் ஆன ரகுவரனைக் கார்னர் செய்ய தன் பொன்னான நேரத்தையும், கோடிக்கணக்கில் பணமும் செலவழிப்பார் என்பது முரணாக உள்ளது.

மனைவி என்றாலே கத்திக் கொண்டே இருப்பார் என்பதைப் படத்தின் முதல் பாதியில் தேவைக்கு அதிகமாகவே பதிகிறார். சிகரெட் பிடிப்பது ஹீரோயிசம் என்பதை ஆழமாக நம்பும் ஆளாக உள்ளார் ரகுவரன். சவால் விடும் பொழுதெல்லாம் பின்னணி இசை தூபம் போட, சிகரெட்டை ஸ்லோ மோஷனில் புகைக்கிறார். இத்தகைய விடலைத்தனமான காட்சிபடுத்துதலை, இயக்குநர் செளந்தர்யா முளையிலேயே நிறுத்தி விட்டால் தேவலாம்.

வசனத்தில் திருக்குறள் ரெஃபரன்ஸை அதிகம் உபயோகித்துள்ளார் தனுஷ். எனினும் வசனங்கள் எதுவும் இயல்பாக இல்லாமல் இருப்பது பெருங்குறை. உதாரணத்திற்கு, ‘ஒரு பொண்ணாக யார் உதவியும் இல்லாமல் தனியாக ஜெயிச்சேன்’ என கஜோல் சொல்வதை இடைமறித்து, ‘ஆணும் பெண்ணும் சமம். ஆணுக்கு உடலில் வலு அதிகமெனில் பெண்ணுக்கு மனதளவில் உறுதி அதிகம். மேடம், பெண்ணாக இருந்து சாதித்தேன் எனக் கர்வமாகச் சொல்லுங்க. உங்களிடம் கர்வத்தில் ஒன்னும் குறைச்சலில்லை’ என்கிறார். அதைத் தானே படத்தின் பெயர் போடும் பொழுதிருந்தே கஜோல் செய்கிறார்; தனுஷ் என்ன சொல்ல வருகிறார் எனக் குழப்பமாக உள்ளது.

முதல் பாகத்தில் இருந்த துள்ளலும், இயல்பான நகைச்சுவையும் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். அதை ஈடு செய்யும் வகையில் க்ளைமேக்ஸை அற்புதமாக்கியுள்ளார். பவர் பாண்டியில் ஓர் இயக்குநராக அசத்தியது போல், திரைக்கதையாசிரியராக, இந்த க்ளைமேக்ஸின் மூலம் அசத்தியுள்ளார் தனுஷ். சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் எப்படி வசுந்தராவின் ஈகோவைப் போக்குகிறது எனப் பாசிட்டிவாக முடித்துள்ளார் படத்தை.

3 படமும் சரி, இந்தப் படமும் சரி, ஒரு பெண் இயக்குநரின் பார்வையில் புரிதலில் பயணிக்காதது மிகப் பெரும் குறை. நாயகன் போற்றி வகை படங்களுக்கு ஏன் பெண் இயக்குநர்? (இவ்வகைமையில் பெண்கள் படம் எடுக்கக் கூடாது என்ற தொனியிலான கேள்வியில்லை). ‘மனைவின்னாலே டார்ச்சர்’ என்ற ஆணின் குரலும் பார்வையும் தான் படம் முழுவதும். இதே படத்தில், தனுஷின் மனைவியாக வரும் அமலா பால், குடும்பத் தலைவியாக எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களையும் யதார்த்தமாகப் பதிந்திருக்கலாமே என்ற ஆதங்கத்தாலும் எதிர்பார்ப்பாலும் மட்டுமே அக்கேள்வி எழுந்தது.