Search
Porukkis-audio-launch

மிஸ்டர் சுப்பிரமணிய சுவாமி, பொறுக்கிஸ் அல்ல நாங்கள்!

Porukkis-audio-launch

KNR மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்குக் கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப்-டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. ‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய S.மஞ்சுநாத் ‘பொறுக்கிஸ்’படத்தின் மூலம் இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளரான ராஜாவே இதில் கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் படத் தொகுப்பை கையாண்டுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மஞ்சுநாத் பேசும்போது, “நமது தமிழகத்தின் ஆதிக் கலையான கூத்துக் கலையையும், அந்த கூத்துக் கலையை நமக்கு தற்போதும் கொண்டு வந்து சேர்ப்பவர்களின் இப்போதைய வாழ்வியல் நிலையையும் அவர்களது இன்ப துன்பம் பற்றிய அலசலாகத்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்ல படத்தில் விவசாயப் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறோம். நாமும் மாற வேண்டும் என்கிற தீர்வையும் சொல்லியிருக்கிறோம். அதேசமயம் எதையுமே அறிவுரையாகச் சொல்லவில்லை.

தவிர, இன்றைய சமுதாயத்தையே அழித்துக் கொண்டிருக்கும் மதுவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பற்றி இந்தப் படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம்.

இந்தப் படத்திற்கு முதலில் ‘பொறுக்கிஸ்’ என்றுதான் பெயர் வைத்தோம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுப்ரமணியசாமி தமிழர்களைப் ‘பொறுக்கிஸ்’ என அழைத்தார். அந்தக் கோபத்தில்தான் இந்த டைட்டிலை வைத்தோம். ஆனால், ராதாரவி சார்தான் எங்களை அழைத்து, ‘பொறுக்கிஸ் அல்ல நாங்கள்’ என டைட்டில் வைக்கச் சொன்னார். அவரது வேண்டுகோளை ஏற்று டைட்டிலை மாற்றினோம்” எனக் கூறினார்.

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசும்போது, ”ஒருவகையில் நங்கள் பொறுக்கிஸ்தான். அரசாங்கம் போடுற குப்பையை அள்ளிக்கிட்டு இருக்கிறோம். ரிலையன்ஸ் போடுற பிளாஸ்டிக்கைப் பொறுக்கிட்டு இருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆசிட் கழிவுகளை உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டு இருக்கிறோம். லேட்டஸ்ட்டா ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வார்த்தைகளில் எடுக்கும் வாந்தியையும் பிடித்துக் கொண்டு இருக்கிறோம்.

தமிழ்நாட்டை ஒரு பரிசோதனைச் சாலையாகப் பயன்படுத்தி வேட்டையாடிக் கொண்டு இருக்கிறார்கள். நமது முதல்வருக்கு மக்களை துன்புறுத்துவதில் விருப்பம் இல்லை.. மத்திய அரசின் அழுத்தத்தால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் கவலைப்பட தேவையில்லை. அவரது துன்பங்களையும் நாங்கள் பொறுக்கி விடுவோம்.

உங்களை அன்றாடம் பாதிக்கும் விஷயங்கள் குறித்து அஞ்சு வரிகளில் ஒரு கடிதம் எழுதி பிரதமர், முதல்வர், கலெக்டர் என அனைவருக்கும் தினசரி தொடர்ந்து அனுப்புங்கள். நிச்சயமாக அதன் மூலம் மாற்றம் வரும்” எனக் கூறினார்.

நடிகர் ராதாரவி படக் குழுவைப் பாராட்டிப் பேசும்போது, “இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன். மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் சொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச் சென்று கேமராமேனாக அறிமுகம் செய்து வைத்தேன். மற்றபடி இப்போதுவரை அவரது சுய உழைப்புதான். மஞ்சுநாத் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டவர். இந்தப் படத்தில் பாடியுள்ள பாடகர் ஆலயமணியை எனக்குப் பிடிக்கும். இன்றைக்கு யார் யாரோ பாடும்போது, முன்னணி நடிகர்கள் எல்லாம் பாடும்போது, அவர்களைவிட ஆலயமணி நன்றாக பாடக் கூடியவர்தான். எனக்கு பாட வராது.. அதனாலேயே அவரைப் பிடிக்கும்.

பியூஸ் மனுஷ் இந்த விழாவில் கலந்து கொள்கிறார் என்றதுமே பயந்தேன். காரணம் அவர் எப்போதும் வாரண்ட்டோடு சுற்றுபவர். அவருக்கும் எப்போதுமே பொதுவுடமை எண்ணம். அதனால் நம்மையும் வாரண்ட்டோடு சுற்ற வைத்து விடுவாரோ என்றும் அரசியல் மேடை போல இது ஆகிவிடுமோ என்றும் பயந்தேன். காரணம் இந்தப் படத்துக்கு சென்சாரில் ஏதாவது பிரச்சினை வருமோ என்பதால்தான்.

இது அரசாங்கத்தை அட்டாக் பண்ணுகிற படமே அல்ல. அரசாங்கத்தில் உள்ள குறைகளைப் பற்றிச் சொல்லும் படம். எந்த அரசு வந்தாலும் நிச்சயமாக அதில் குறைகள் இருக்கத்தான் செய்யும். அது தவிர்க்க முடியாதது. அந்தக் குறைகளை சுட்டிக் காட்டும் விதமாகத்தான் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.