Search

ஹாட்ரிக்கால் கனிந்த வெற்றிக்கனி

chetan-sharma

87 ரிலையன்ஸ் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் சேத்தன் ஷர்மா எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுக்களில் ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. முதலில் அவுட் ஆன ரதர்ஃபோர்டு, மிடில் ஸ்டம்ப் பெயர போல்டு ஆகிவிடுவார். அடுத்து வந்த நியூசியின் விக்கெட் கீப்பர் ஸ்மித், ஆஃப் ஸ்டம்ப் பெயர் போல்டு ஆகிவிடுவார். அப்பொழுது டிவியில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தோன்றியது, அடுத்த பந்தில் லெக் ஸ்டம்ப் போல்டு ஆகி ஹாட் ட்ரிக் எடுத்தால் எப்படி இருக்கும் என.

நினைத்தபடியே அடுத்து வந்த சாட்ஃபீல்டின் மட்டையைத் தாண்டிக் கொண்டு போன பந்து லெக் ஸ்டம்பைப் பெயர்த்து எடுத்து விடும்.

இன்று சற்று நேரம் இந்தியா – ஆப்கானிஸ்தான் மேட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைய 20-20 பரபரப்பில், கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுப்பது எல்லாம் ஜுஜுபி விஷயமாச்சே என ஆஃப்கானிஸ்தானின் சேஸிங்கைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அந்த மாயாஜாலம் மீண்டும் நிகழ்ந்தது. 32 ஆண்டுகளுக்கு அப்புறம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு ஹாட்ரிக் சாதனையைக் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது இன்று.

மொகமது ஷமியின் முதல் பந்தில் நபி ஒரு பவுண்ட்ரி விளாச, இந்தியாவின் வெற்றி வாய்ப்பினைப் பற்றிய எதிர்பார்ப்பு முற்றிலும் அடங்கிப் போனது. ஆனால், ஒரு பந்திற்குப் பின் அடுத்த மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகள் விழ, 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை வென்றது.

சேத்தனின் ஹாட்ரிக்கில் இயல்பாக அமைந்த அந்த ஒழுங்கு முறை (மூன்று வெவ்வேறு ஸ்டம்புகளைப் பெயர்த்து எடுத்து போல்ட் ஆக்கிய) ஷமியின் ஹாட்ரிக்கில் இல்லை. போலவே 87இன் நியுஸி அணி இன்றைய ஆஃப்கானிஸ்தான் அணியை விட திறனில் பல படிகள் முன்னேறியிருந்தது.

ஆனால் ஷமியின் இந்த ஹாட்ரிக், ஊசலாடிக் கொண்டிருந்த வெற்றிக் கனியை, விளிம்பிலிருந்து தவறிப் போகும் தருணத்தில் தட்டிப் பறித்து வென்றது. மயிர்க்கூச்செறியும் அற்புத தருணம் இது.

 ஸ்ரீதர் நாராயணன்