Search

அக்கரைக்கு இக்கரையே பச்சை!

சுற்றுலா

இந்த முறை ஆல்பனியில் இருந்து கலிஃபோர்னியாவுக்கு, அதாவது கிழக்குக் கரையில் இருந்து மேற்குக் கரைக்குப் பயணம். வெறும் சுற்றுலா என்பதோடு மட்டுமில்லாமல் பல வகையில் எங்களுக்கு இது முக்கியமான பயணம். கடைசி நேரத்தில் வீட்டை ஒழுங்கு செய்து, எல்லோரையும் நேரத்துக்குக் கிளப்பிவிடும் வழக்கமான களேபரங்களை எல்லாம் சமாளித்து, அதிகாலை விமான நிலையம் வந்திறங்கினால், தன்னுடைய கேமரா பையை வீட்டில் மறந்து வைத்துவிட்டேன் எனச் சொல்லி கணவர் மட்டும் திரும்ப வீட்டுக்குப் போய் வந்து, ஒருவழியாய் செக்கிங் சம்பிரதாயங்களை முடித்து விமானத்தில் உட்காரும் வரை பதட்டமோ பதட்டம்தான். ஊரே தூங்கிக் கொண்டிருக்கையில் விமானநிலையம் மட்டும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

இருள் விலகாத, அதிகாலை விமானப் பயணங்கள் எப்போதுமே சுகமானவை. சூரிய உதயத்தை மேலிருந்து பார்க்கும் வாய்ப்பு. குடும்ப வழக்கத்தின்படி யாருக்கு ஜன்னலோர சீட் கிடைத்தாலும் அது எனக்குத்தான் என்பதால், இந்த முறை கணவரின் ஜன்னலோர சீட்டில் ‘டபக்’கென்று அமர்ந்து கொண்டேன். விமானத்தில் தங்களுடைய திருமணத்திற்காக ஊருக்குப் போகும் ஒரு காதல் ஜோடி தனியாகத் தெரிந்தார்கள். கூடவே அவர்களின் செல்ல நாய்க்குட்டி ஒன்று. அவன் அவளுடைய கல்யாணக் கவுனை அதீத கவணத்துடன் பிடித்துக் கொண்டிருந்தான். அவள் சீரியஸாய் நாயை கொஞ்சிக் கொண்டிருந்தாள். வாழட்டும் வளமுடன்!.

விமானம் மேலெழும்ப, அநேகமாய் எல்லோருமே தங்களுடைய காலை நேர தூக்கத்தைத் தொடர, நான் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். மேலிருந்து பார்க்கையில் இந்த ஆல்பனி தான் எத்தனை அழகு! மேகக்கூட்டங்களைக் கிழித்துக் கொண்டு பயணிக்கையில், மெல்ல மெல்ல இருள் பிரிந்து வெளிச்சக்கீற்று பரவுகையில் பொன்னாய் மின்னும் வானவீதியின் பேரழகு கவனித்து ரசிக்க வேண்டியது. வெளிச்சப்படை சூழ பொன்னிற சூரியன் தரிசனம். ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என அநிச்சையாய் மனம் துதித்தது.

சிறிது நேரத்தில் விர்ஜினியா மாநிலத்தின் பரந்து விரிந்த ப்ளூ ரிட்ஜ் மலைகளில் மனம் கொள்ளை போனது. அதற்குப் பிறகு தெரிந்ததெல்லாம் சமவெளிகளும், அதில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், ஆறுகளும், விளைநிலங்களும் தான். பணிப்பெண்கள் தண்ணீர், ஜூஸ், காபி கொடுத்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆங்கில சப்டைட்டிலுடன் ஒரு சைனீஸ் படத்தையும் பார்த்து முடிக்க, அட்லான்டாவை நெருங்கி விட்டதாக பைலட் தகவல் சொல்ல, சாலைகளில் எறும்புச் சாரையாக ஊர்ந்து செல்லும் வண்டிகளும், பெரியப் பெரிய கட்டடங்களுமாய் அட்லான்ட்டா எங்களை வரவேற்றது. விமான நிலையத்தின் ஊழியர்கள் பெரும்பாலும் கருப்பினத்தவராகவே இருந்தது தற்செயலா எனத் தெரியவில்லை.

அடுத்து சான் ஓசே செல்லும் விமானத்தைப் பிடிக்க வேண்டும். இந்த இடைவெளியில் அப்பாவும், மகனுமாய்ப் போய் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள் நானும் மகளும் லக்கேஜுக்குக் காவல். சான் ஒசே செல்லும் விமானத்திலும் குடும்ப வழக்கப்படி எனக்கு ஜன்னலோர சீட்தான். சிறிது நேரத்தில் என்னையும் மறந்த நிலையில் உறக்கம். நடுநடுவே விழிப்புவரும்போதெல்லாம் தட்டையான நிலப்பரப்பபில், சீரான வடிவங்களில் பசுமையான விளைநிலங்கள். என்ன தான் விளைவிப்பார்களோ? யோசனையுடன் மீண்டும் சிறு தூக்கம். ஒருவழியாக தூக்கம் கலைந்து கண் திறந்தால் எங்கும் செந்நிற மலைகள்! அநேகமாக அரிசோனா, யூட்டா மேல் பறந்து கொண்டிருக்கலாம் என்று நினைக்கும் பொழுதே பழுப்பும் செந்நிறமும் கலந்த வண்ணத்தில் வளைந்து வளைந்து செல்லும் கிராண்ட் கேன்யன்! ஓ மை காட்! என்ன அழகு! நேரில் பார்த்ததை விட மேலிருந்து பார்க்க அந்த பிரம்மாண்டம் இன்னும் அழகு!

Grand Canyon

2015இல் சென்ற ‘Valley of fire’ ஸ்டேட் பார்க் போன்ற மலைத்தோற்றத்தையும் கடந்து வந்த பிரமாண்ட கேன்யன் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே பைலட்டின் அறிவிப்பில் நாம் இப்பொழுது கிங்ஸ் கேன்யன் மேல் பறந்து கொண்டிருக்கிறோம் என்றவுடன் , ‘ஓஹோ! இது தான் கிங்ஸ் கேன்யனா!?’ கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்க ஆவலைத் தூண்டுகிறதே! சில க்ளிக்குகள் எடுத்துக் கொண்டேன். அதைக் கடந்ததும் பாலைவனம் போன்ற பிரதேசம். பாலைவனம் போன்ற என்ன, பாலைவனமே தான். Death Valley ஸ்டேட் பார்க் மேல் பறந்து கொண்டிருந்தோம். சென்ற வருடம் அங்குக் கழித்த இனிய பொழுதுகள் நினைவில் வர, வறண்ட மலைகளின் மேல் பறந்து வந்தே விட்டது சான் ஒசே!

விமானநிலையத்தை விட்டு வெளியே வந்தால், பளிச்சென்று முகத்தில் அறையும் பகல் வெளிச்சம்! உடலைச் சுடும் வெயில். ஒரு சர்தார்ஜி வாடகை வண்டி எடுக்க எப்படிப் போக வேண்டும் என்று நிறுத்தி நிதானமாகச் சிரித்த முகத்துடன் தெளிவான ஆங்கிலத்தில் வழிகாட்டினார்.வாடகைக்காரை முன் கூட்டியே புக் செய்திருந்தாலும் நீண்ட காத்திருத்தலுக்குப் பின் கிடைக்க, பெட்டிகளை ஏற்றிக் கொண்டு நானும் மகளும் ஒரு வண்டியிலும், மகனும் கணவரும் ஒரு வண்டியிலும் கிளம்பி விட்டோம். ஏற்கெனவே நண்பர் அறிவுறுத்தியிருந்த படி மதியம் இரண்டரை மணிக்குள் நகரை விட்டு வெளியேற, புது ஊரில் எப்பொழுது எந்த ஹைவே வரும் என்று தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் கூட்டத்துடன் நானும் சேர்ந்து ஓட, மகள் வழித்தடங்களைச் சொல்லிக் கொண்டே வர, ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.

வறண்ட மணலில் பச்சை நிறத்தில் மரங்கள் இருந்தாலும் சோகையாய் இருப்பது போன்றே பிரமை. வரிசையாக இருந்த மரங்கள் எனக்கு அழகர்கோவிலை நினைவூட்டியது. ஆல்பனியின் பசுமை போர்த்திய மலைகளைக் கண்டு சிலிர்த்திருந்த எங்களுக்கு வறட்சியால் காய்ந்து போய் மஞ்சள் வண்ணம் பூசிக் கொண்டிருந்த மலைகளைப் பார்ப்பது சோர்வைத் தந்தாலும், வழி நெடுக மலைக்குன்றுகளுடன் பயணித்ததும், எங்கே கீழே விழுந்து விடுமோ என்று நினைக்கும் வகையில் அந்த மலைகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளை பார்க்க முடிந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

அமெரிக்காவிலேயே இருந்தாலும் கலிஃபோர்னியா தனிநாடு போல தனக்கென பல இயற்கை அழகுகளையும், புகழ்பெற்ற கல்லூரிகளையும், நவீன தொழில்நுட்பங்களையும், பல்வேறு வேலைவாய்ப்புகளையும் கொண்டு மக்களை அலைக்கழிக்கிறது. அங்கிருக்கும் விலைவாசிக்கும், வாழ்க்கை முறைக்கும் இருவர் வேலைக்குச் சென்றால் தான் முடியும். இல்லையென்றால் வசதிகளையம் செலவினங்களையும் சுருக்கிக் கொண்டு வாழ வேண்டியிருக்கும் போல! வீடுகள் எல்லாம் சர்வசாதாரணமாக $600,000 முதல் மில்லியன் டாலர்கள் என்று அதிர வைக்கிறார்கள்! ஊரை விட்டுத் தொலைவில் செல்லச் செல்ல ஒரு 500,000+ டாலரில் வீடுகள் கிடைக்கும். என்ன, வேலைக்குச் செல்ல ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வரை ஆகிறது. பொறுமையான மனிதர்கள்! வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதிகள் இருக்கிறது. வேலைப்பளுவும் அதிகமாக இருக்கிறது.

California

பே ஏரியா செல்லும் சாலைகளில் அதிகாலை ஆறரை மணியிலிருந்தே போக்குவரத்து நெரிசல் ஆரம்பமாகி விடுகிறது. நடுவில் விபத்து நிகழ்ந்திருந்தால் திருவிழா தான்! ஊர்ந்து ஊர்ந்து செல்லும் வண்டிகள் அயர்ச்சியைத் தான் கொடுக்கிறது. எப்படித்தான் தினமும் இந்த மாதிரி சென்று வர முடிகிறதோ என்று நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் வீட்டு வாடகையைக் கேட்டால் மயக்கம் வராத குறை தான். பஸ் நிறுத்தம், நகரின் அருகில் வீடு இருக்க வேண்டுமென்றால் அதிக வாடகை கொடுத்துத்தான் ஆக வேண்டும். கொஞ்சம் தொலைவில் இருந்தால் நெரிசலில் தப்பித்துச் செல்ல அதிகாலையில் வேலைக்குக் கிளம்பினால்தான் நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியும்.

தெரிந்த குடும்பங்கள் பலவும் குழந்தைகளுக்காக நல்ல பள்ளிகள் இருக்கும் பகுதியில் அதிக (!) விலை கொடுத்து வீடுகளை வாங்கி இருக்கிறார்கள். அங்கு ஆசிய, இந்திய மாணவர்களிடையே கடும் போட்டி இருக்கும் போல! பள்ளியில் இருக்கும் போட்டி பத்தாது என்று வீட்டிலும் படி படி என்று பெற்றோர்களின் நச்சரிப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். பெற்றோர்களுக்கு எப்படியாவது தங்கள் குழந்தைகள் நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதுதான் ஒற்றைக் குறிக்கோளாக இருக்கிறது.

நான் பார்த்தவரை குழந்தைகள் கடினமாக உழைக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் பெற்றோர்களின் ரத்தக்கொதிப்பு குறைந்தமாதிரி தெரியவில்லை. நல்ல வேளை, என் சுப்பிரமணி தப்பித்தான், நானும் தப்பித்தேன் என்று நினைத்துக் கொண்டேன். பள்ளிகளில் குழந்தைகளை அழைத்துச் செல்ல பஸ் வசதிகள் இல்லை. கார் பூல் செய்து கொள்கிறார்கள். அந்த நேரத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை நினைத்தாலே பயமாக இருக்கிறது. கடவுள் அருளாலும், பள்ளிக்கான வரி என்று தனியாகப் பணத்தைக் கட்டுவதாலும் இச்சூழ்நிலையை ஆல்பனி பெற்றோர்கள் சந்திக்கவில்லை.

அங்கே நான் சந்தித்த சிலர், வெளி உலகம் தெரியாமல் தங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் தெரிந்து கொண்டு நாட்களை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். சில பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட மெனக்கெடுகிறார்கள். பலரும், காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் கண்மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையும் அவர்களை ஓட விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

இரவு, பகல் என அவர்களின் உலகம் விந்தையாக இருந்தாலும் அத்தனை வேலைப்பளுவிலும் சிலர் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டும், தமிழ் சமூகத்திற்காக உழைத்துக் கொண்டும் தான் இருக்கிறார்கள். அசுரவேக வாழ்க்கை ஒருபக்கம் இருந்தாலும், வார இறுதியில் கபாலியைப் பார்க்கவும் நேரமிருப்பது ஆறுதல். வார இறுதியில் தமிழ்ப் பள்ளிகள் பல நகரங்களிலும் நடக்கிறது. என்ன பிரயோசனம், தங்களுக்குத் தெரிந்த குடும்பங்களுடன், நண்பர்களுடன் அந்தக் குழந்தைகள் தமிழில் பேசுகிறார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

சமீப காலமாக மழை என்பது மருந்துக்குக் கூட இல்லையாம். புல் தரைகளுக்கு இரவில் தான் தண்ணீர் ஊற்ற முடியுமாம். சில பகுதிகளில் அதுவும் தடை செய்யப்பட்டுள்ளது! காய்ந்த புற்கள் வீடுகளின் வாசலில் கண்களை உறுத்தினாலும் வீடுகளின் முன் அழகழகு ரோஜா செடிகள், பைன் மரங்கள், பல்வேறு வடிவத்தில் பாலைவனப் பனை மரங்கள் அழகாக நிற்கிறது. கூரை வேய்ந்த வீடுகளும் அதன் வண்ணங்களும் நகரை மேலும் மெருகூட்டுக்கிறது.

நாங்கள் தங்கியிருந்த நண்பரின் வீட்டிலிருந்து அருகிலிருக்கும் மலைக்குன்றின் மேல் நடந்து பல்வேறு பறவையினங்களையும், மலர்களையும், செடி கொடிகளையும், வீடுகளையும் கண்டு ரசித்தோம். சூரிய உதயத்தின் போதும், அஸ்தமனத்தின் போதும் வறண்ட மலைக்குன்றுகள் பொன்னாக மின்னும் அழகே அழகு. அருகிலுள்ள உயரமான மலைகளில் இருந்து சமவெளிகளையும், நகரங்களையும் காண பிரமிப்பாக இருந்தது.

படகில் சுற்றுவது , ஓடுவது, மலையில் ஏறுவது, சைக்கிள் ஒட்டிக் கொண்டு செல்வது என உடல்நலத்திலும் அக்கறையுடன் சென்று கொண்டிருந்த மக்கள் பலரைக் காண முடிந்தது. போக்கிமானைத் தேடிக் கொண்டு கையில் செல்ஃபோனுடன் செல்லும் குழந்தைகள், பூங்காக்களில் குழந்தைகளுடன் பெற்றோர்கள், தனியாக நடந்து செல்பவர்கள் என ஆட்களின் நடமாட்டம் விடுமுறை என்பதால் அதிகம் தென்பட்டார்களோ? ஆல்பனியில் இருப்பதைப் போன்று எடை அதிகமானவர்களை அதிகம் காணவில்லை அல்லது என் கண்ணில் படவில்லையோ?

பே ஏரியாவில் கறுப்பின மக்கள் குறைவாகத் தான் இருந்தனர். மெக்ஸிகன் மக்களை அதிகம் காண முடிந்தது. வங்கி மற்றும் கடைகளில் நிறைய இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். சேலை, சுடிதார் அணிந்த பெண்கள், இந்தியன் கடைகள், உணவகங்கள் நிரம்பி வழிகிறது. ஒரு கல்லூரியின் வாசலில் கும்பலாக நம்மவர்களைக் கண்டதும் அண்ணா பல்கலை முன் இருப்பது போல் பிரமை! நாங்கள் அங்கிருந்த நேரத்தில் கொடிய வெயில் வேறு மதுரையை நினைவூட்டியது. காலையில் இளங்குளிரும் பகலில் வெயிலும் என மாறி மாறி இருந்தாலும் ஏஸி இல்லாத வீடுகளும் இருக்கிறது.

Blue ridges

இந்தப் பயண அனுபவம் எனக்கு திரும்பத்திரும்ப உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான். வாழ்க்கையை, அதன் தருணங்களை நெருக்கடி இல்லாமல் நிதானமாய் அணுகிடவும், அனுபவிக்கவும் கூடிய நல் வாய்ப்பை ஆல்பனி எனக்குத் தந்திருக்கிறது. மழைக்காலத்தில் பசுமையைப் போர்த்திக் கொண்டும், கோடைக்காலத்தில் வண்ண வண்ண மலர்களைச் சூடிக்கொண்டும், இலையுதிர்காலத்தில் வண்ண இலைகளைச் சுமந்தும், பனிக்காலத்தில் வெண்பனி மங்கையாய் உலா வரும் ஆல்பனி எனக்குப் போதுமானதாயிருக்கிறது.

அக்கரைக்கு, இக்கரையே பச்சை!! 🙂

– லதா