
யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹிந்தியில் பெரிய வெற்றியைப் பெற்ற “பேண்ட் பஜா பராத்” தமிழில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. பிரபல தெலுங்கு ஹீரோவான நானி நேரடியாக தமிழில் நடிக்கும் இந்தப் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் இசை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் படத்தின் இசை அமைப்பாளர் தரன் குமார் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். தன்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்குமென்கிறார். படத்தின் இயக்குநரும் தன் நெருங்கிய நண்பருமான கோகுல் கிருஷ்ணா படத்தில் தமிழ் வாசம் தூக்கலாய் இருக்க வேண்டும் என்று கூறியதால் மூலப் படத்தை பார்க்காமல், அதன் பாடல்களைக் கேட்காமல் கதையை மட்டும் வைத்து புதிதாய் தமிழுக்கென பாடல்களை உருவாக்கியதாக தரன் குமார் நிருபர்களிடம் கூறினார்.
எங்களது கூட்டணிக்கு.. பாடல் ஆசிரியர் மதன் கார்க்கியும், ‘மழையின் சாரல்’ இயற்றிய கவிதாயினி தாமரை அவர்களும் பலம் சேர்த்தனர். இந்தப் படத்தில் இருக்கும் பாடல்களில் உள்ள தமிழின் நேர்த்தியும் புலமையும் சொல்லில் அடங்காதவை. பாடல் வரிகள் காதல் வயப்பட்டவர்களுக்கு ஒரு உயிர் நாதமாக இருக்கும். HONEY என்று துவங்கும் பாடல் – காதலர்களின் ஊடலையும் கூடலையும் மிக அழகாக சித்தரிக்கிறது . மேலும் பாடல்கள் இரட்டை வார்த்தைகளிலே துவங்குவது மிகவும் புதுமையான து. பான் பான் , கத கத , கூட்டாளி கூட்டாளி, தல தல, என வித்தியாசமாய் முயற்சித்திருக்கிறோம். செம்மொழியில் செழுமையான பாடல் வரிகளுக்கு உகந்த செழிப்பான படப்பிடிப்பும் பாடல்களை மேலும் வலுவாக்கி இருக்கிறது .இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக ‘ஆஹா கல்யாணம்’ இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்று உற்சாகத்தோடு முடித்தார் தரன்.
இம்மாத ரிலீஸாசான ஆஹா கல்யாணம் படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது.