நூற்றாண்டு விழா (1913 – 2013) காணும் ‘அஞ்சல தேனீர் விடுதி’யைப் பற்றிய படமிது.
ராமய்யா – முத்திருளாண்டி என தாத்தா – பேரனாக இரு பாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. படம் முழுக்க அவர் மட்டுமே தெரிகிறார். இது அவரின் படம் எனலாம் அல்லது அவரை நம்பி எடுக்கப்பட்ட படம். ராமய்யாவின் மனைவி அஞ்சலையாக மெட்ராஸ் படப்புகழ் ரித்விகா நடித்துள்ளார். காலத்திற்கேற்ப மாறும் அவர் உடைகளாலும் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் தங்கம் சரவணன்.
கவாஸ் என்கிற கவாஸ்கராகப் பழகிப் போன பாத்திரத்தில் விமல் (Vemal). உத்ராவாக நடித்திருக்கும் நந்திதாவுக்கும் விமலுக்குமான காதல் காட்சிகள் திராபையாக இருந்தாலும், ‘கண் ஜாடை காட்டி எனைக் கவுத்த செவத்த புள்ள’ பாடல் ஈர்க்கிறது.
வசனங்களே படத்தின் பெரிய பலவீனம். வங்கியில் லோன் கிடைத்து விட, நாயகன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிபடுத்துகிறான். அடுத்த வரும் சின்னஞ்சிறு காட்சியில் நாயகி நாயகனிடம், ‘சார் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல?’ எனக் கேட்க நாயகன் மீண்டும் தான் ஏன் மகிழ்ச்சியாக இருக்கேன் எனக் கூறுகிறான். காட்சிப்படுத்துவதை விட வசனங்களை, மனக்குரலையுமே பெரிதும் நம்பியுள்ளார் இயக்குநர்.
அரத பழசான திரைக்கதை பாணியும், கோர்வையற்ற காட்சித் தொகுப்பும் படம் தந்திருக்க வேண்டிய தாக்கத்தை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது. தேனீர் கடையில் இருக்கும் உயிர்ப்பு, கதாபாத்திரங்களில் இல்லாதது குறை. போண்டா பிரியர் ஜாகிங் செல்லப்பாவாக வரும் இமான் அண்ணாச்சி, காதலித்து மணம் புரிய பெண் கிடைக்காமல் அலையும் கல்யாண ராமனாக வரும் ஆடுகளம் முருகதாஸென, பசுபதியைத் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் எவரும் மனதில் பதியவில்லை.
திலீப் சுப்பராயன் தயாரித்த முதல் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதையும், பசுபதியின் நடிப்பும் படத்திற்கொரு கலைத்தன்மையை அளிக்கிறது. ஒரு குடுவையின் இரண்டு மிடறு தண்ணி, பொட்டல் வெளியில் எப்படி ஓர் ஊரையே உருவாக்கியதென்ற அற்புத கணங்கள் படத்தில் உண்டு. மேலே படரும் மெல்லிய ஆடையை எடுத்து சுண்டி விட்டுவிட்டால், அஞ்சல கடை தேனீரின் அற்புதமான சுவையை உணரலாம்.