Search

அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!?

‘ஆர்வக் கோளாறில் இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே! இப்போது இங்கிருந்து எப்படி வெளியே போவது?’ என்று தெரியாத பதட்டத்தில் அல்லாடிக் கொண்டிருந்தான் வெங்கடேஷ். சுமாவிற்கு மட்டும் இது தெரிந்தால் அவ்வளவு தான்! நேரம் வேறு ஓடிக் கொண்டிருந்தது.

வெங்கட் என்ற வெங்கடேஷ் ஃபோட்டோ எடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன். காமெரா என்பது ஒரு சாதனமே. நம் பார்வையில் தெரியும் காட்சிகளை மிக அழகான கோணத்தில் படமாக்குவதுதான் கலை என்று பாலுமகேந்திரா எப்போதோ ஒரு பேட்டியில் சொன்னதை வேதவாக்காகக் கொண்டு சதாசர்வகாலமும் அழகான காட்சிகளைத் தேடி காமெராவும் கையுமாகவே திரிபவன்.

பனிப்புயலின் புண்ணியத்தால் நியூயார்க் நகரம் முழுவதும் வெண்பனிக் குவியலால் உறைந்திருந்தது. வழக்கமாய் படம் எடுக்கும் ஏரியைச் சுற்றி வந்த போது அவனுக்கு ஏற்பட்ட விசித்திரமான உந்துதலில் மரங்கள் சூழ்ந்த அமைதியான கல்லறையில் படம் எடுக்கலாம் என தீர்மானித்துக் கல்லறை தோட்டத்துக்குள் காரைச் செலுத்தினான்.

400 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரபலமானவர்களின் கல்லறை அது. அழகிய வேலைப்பாடுகளுடன் பெரிய பெரிய நினைவுச் சின்னங்களைக் கொண்டது. ஒவ்வொரு கல்லறையிலும் அங்கு உறங்குபவர்களைப் பற்றிய தகவல்கள் எனப் பரந்து விரிந்திருந்த அந்தக் கல்லறைத் தோட்டத்தில் அமானுஷ்ய அமைதியும், அடர்த்தியான மரங்களும் நிறைந்திருந்தது. பனிக்காலத்தில் இலைகளை தொலைத்து விட்டு நின்ற பல மரங்கள்! பசுமையும் பழமையும் நிறைந்த அந்த தோட்டத்தின் அழகை பலவேறு கோணங்களில் ரசித்து ரசித்துப் படமெடுத்துக் கொண்டிருந்தான். சில காட்சிகள் தான் படித்த ஆங்கில இலக்கியங்களில் வரும் காட்சிகளையும் சூழல்களையும் நினைவுபடுத்த, அதில் உண்டான உற்சாகத்தில் லயித்திருந்தவன் நேரம் போனதைக் கவனிக்கவே இல்லை.

அமானுஷ்யம்

படமெடுத்தது போதும், கிளம்பலாம் என வெளியே வந்தால் கல்லறைத் தோட்டத்தின் வாயிற்கதவு பூட்டப் பட்டிருந்தது. மாலை நான்கரை மணிக்கு கதவு சாத்தப்படும் என்று மிகச் சிறிய எழுத்தில் ஒரு அறிவிப்புப் பலகையை அப்போது தான் பார்த்தான். அதாவது அவன் உள்ளே நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் கதவை மூடிவிட்டிருக்கிறார்கள். தான் எம்மாதிரியான ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது உறைத்த போது கலவரமானான். அடக் கடவுளே! அவனைத் தவிர ஒரு உயிரும் அங்கு நடமாடுவதாகத் தெரியவில்லை.

இவ்வளவு நேரம் ஆனந்தமாகக் கனவுலகில் கவிதைகள் பாடி மகிழ்ந்தவனுக்கு இப்படி ஒரு சோதனை!

இனி எப்படி வெளியில் போவது?

சரி, சுமாவிடம் நிலமையைச் சொல்லிவிடலாம் என்று பார்த்தால், அவளே ஆறேழு முறை கூப்பிட்டு இருந்தாள். ‘எப்படித் தவற விட்டேன்? நிலைமை மோசமாகி விடும் போலிருக்கே! அலைபேசி சிக்னல் வேறு கிடைக்காமல் சதி செய்கிறதே!!’ என்று சஞ்சலத்துடன் காரில் இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தான். எப்படிச் சுற்றி வந்தாலும் வெளியில் செல்லும் வழி தான் கிடைக்கவில்லை! GPS வேறு வேலை செய்யவில்லை!

இதற்குள் தான் முதலில் வந்த வழியையும் தவற விட்டு ஒரே தவிப்பில்…நேரம் ஆக ஆக இருட்டியும் விட்டதில் மனதில் ஒரு வித பய உணர்ச்சியும் சேர்ந்து கொள்ள, ச்சே.. ச்சே.. எதற்கு வீணாக மனதை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் திரும்பிய திசையெல்லாம் அணிவகுத்து நிற்கும் கல்லறைகளும், ஊளையிடும் காற்றும் அவனை அசைக்கவே, காரை ஓட்டினான் ஓட்டினான் கல்லறையின் ஒவ்வொரு மூலைக்கும் ஓட்டினான்.

இன்று இரவு இங்கு படுத்துறங்கும் மனிதர்களுடன் தங்கிவிட வேண்டி இருக்குமோ என்று நினைக்கவே உடம்பு சில்லிட்டது. என்ன சோதனை என்று பல வித யோசனைகளில் மூழ்கி இருக்கும் பொழுது திடீரென்று எங்கோ நாய் குறைக்கும் சத்தம் கேட்டது.

அவனுக்கு இருந்த பீதியில் இது உண்மை தானா, மனப்பிரமையா என்று பயத்துடன் சத்தம் வந்த திசையில் உற்று நோக்க, தொலைவில் ஓர் உருவம் நாயுடன் வருவது போல் இருந்தது .

இப்பொழுது நிஜமாகவே அவனுக்குப் பயம் தொற்றிக் கொண்டது. பல திரைப்படங்களைப் பார்த்த ஞாபகம் வேறு சரியாக நினைவுக்கு வர, உடம்பும் சில்லிட அதற்குள் அந்த உருவமும் நெருங்கி விட்டது. அவன் இதயத் துடிப்பும் தாறுமாறாய் எகிறத் துவங்கியது.

ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியும், அருகில் வாலாட்டிக் கொண்டே நாயும் வர, ஒரு வழியாகத் தைரியத்தை வரவழைத்து தான் பாதை தவறி வந்ததையும், கதவு மூடப்பட்டதும் எப்படி வெளியில் போவது, எங்கிருக்கிறேன் என்று ஒன்றும் புரியாமல் தவிப்பதையும் சொன்னவுடன் ‘கலகல’ வென்று சிரித்த அந்தப் பெண், ‘சரியான நேரத்தில் தான் இப்படி மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று மீண்டும் ஒரு முறை ‘லகலக’ வென்று சிரித்து விட்டு கதவு பூட்டப்படாமல் சாத்தி தான் இருக்கிறது என்று சொல்லி, அவன் வழி தவறி சுற்றியதில் இப்பொழுது பக்கத்தில் இருக்கும் வேறு ஒரு கல்லறைக்கு வந்து விட்டதையும் வெளியே போகும் பாதையையும் அவனுக்குக் காட்டி விட்டு அவனுடைய நன்றியைக் கூட எதிர்பார்க்காமல் தன் நாயுடன் கடந்து போனாள். ‘அப்பாடா!!’ என்றிருந்தது வெங்கடேஷுக்கு .

பேய் கதை

ஒரு வழியாக அங்கிருந்து வெளியேறி சாலையையும், கார்களையும் பார்த்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது. உடனே சுமாவிற்கும் தகவல் சொல்லி விட்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

சுமாவிடம் தான் கல்லறை போய் வந்த விபரத்தையும் அங்குச் சுற்றித் திரிந்த கதையையும் சொன்னவுடன் அவளும் தன் பங்கிற்கு அந்தப் பெண்ணின் கால்களைப் பார்த்தீர்களா என்று கேட்டு விட்டு பாவம் உங்களைப் போன்றவர்களுக்கு வழி சொல்லி விட்டு மீண்டும் போய் அவள் கல்லறையில் படுத்திருப்பாள் என பீதியூட்டினாள்.

அடுத்த முறை நாம் இருவரும் சேர்ந்து போய் அங்கே படங்கள் எடுத்து விட்டு வரலாம் என்று அப்போதைக்கு அப்பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தாலும், மனதிற்குள் சுமா சொல்வது போல் எதுவும் இருக்குமோ என்ற கேள்விகள் முளைக்க, அடுத்த நாளும் அங்கே சென்றான்.

அதே அமானுஷ்ய அமைதி. இப்போது அவனுக்குள் பயம் இல்லை என்றாலும் ஒருவித நெருடல். மெதுவாக ஒவ்வொரு கல்லறையாக நோட்டம் விட்டுக் கொண்டே நடந்து சென்றவன் ஓரிடத்தில் நகர முடியாமல் விக்கித்து நின்று விட்டான்.

அங்கே.. அட ஆண்டவா!! இது உண்மையா?

அப்படி என்றால்..!?

– லதா