Search

அந்தி நேர சாயை – 1

எப்பவுமே தூங்காத ஆளை நீங்க எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா? கப்பூரார் அப்படித் தான். கப்பூரார எங்க வீட்டு சமையற்காரர்னு சொல்லலாம். ஆனா அவர் என்னோட சமையற்காரர் மட்டும் தான். என்னோட 4 வயசுல நான் சாப்ட்டது ஏதோ பாய்சன் ஆகி சாகற ஸ்டேஜுக்கு போயிட்டேனாம். அதுக்கு அப்புறம் என் சாப்பாடு மாறிடுச்சு. ஏகப்பட்ட பத்தியம். எது சாப்டாலும் சுத்த பத்தமா இருக்கணும்னுட்டு.. கலப்படம் இல்லாத சமையல் பொருள வாங்க ஒரு ஆளுயும், அதை சமைக்கறதுக்கு கப்பூராரயும் தாத்தா புதுசா வேலைக்கு வச்சாரு. இப்ப தாத்தா இல்ல. ஆனா அந்தக் குறை எனக்கில்லாததுக்கு கப்பூரார் தான் காரணம். அப்பாவ விட பத்து பதினைஞ்சு வயசு அதிகமா இருக்கும். அவரோட பெயர் நாராயணன்னு நினைக்கிறேன். அவர் ஊர்ப் பெயரைச் சொல்லி சொல்லி.. அதே பழக்கம் ஆயிடுச்சு எங்க வீட்டுல.

கப்பூராருக்கு எங்கள விட்டா யாரும் இல்ல. அவருக்கு பதினேழு பதினெட்டு வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. திடீர்னு ஒரு நாள் அவர் மனைவிக்கு பேய் பிடிச்சிடுச்சாம். அப்புறம் ஒரு அமாவாசை அன்னிக்கு, ஊருக்கு வெளில இருக்கிற பெரிய மரத்துல அவர் மனைவி தூக்கு மாட்டிக்கிட்டு செத்துட்டாங்கலாம். இரண்டு மூனு வருஷத்துக்கு அப்புறம் அவருக்கு வேற கல்யாணம் பண்ண அவர் வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்களாம். செத்துப் போன மனைவி அவர் கனவுல வந்தாங்களாம். கப்பூராருக்கு ஒரே கஷ்டமா போச்சாம். எனக்கு கல்யாணமும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்னு வீட்ட விட்டு ஓடி வந்துட்டாராம். அப்புறம் எங்க எங்கயோ வேலை செஞ்சு எங்க வீட்டுக்கு வந்துட்டார். அவர் எப்பத் தூங்கினாலும் கனவுல அவர் மனைவி வருவாங்களாம். அதனால் தூங்கறதுக்கு பயப்பட ஆரம்பிச்சாராம். கொஞ்சம் கொஞ்சமா அவர் தூக்கம் குறைஞ்சுப் போச்சாம். நைட் ஆனா கண்ண மூடி சும்மா படுத்துப்பார். அவரயும் மீறி என்னைக்காச்சும் தூங்குவார். அதிகப்பட்சமா அரை மணி நேரத்தில் பதறியடிச்சுக்கிட்டு எழுந்து உட்காந்துடுவார். தண்ணிக் குடிச்சுட்டு திரும்ப போய் கண்ண மூடி படுத்துக்குவார்.

உங்களால எப்படித் தூங்காம இருக்க முடியுதுன்னு அவர கேட்டுக்கிட்டே இருப்பான் கார்த்திக். நல்ல சைக்காட்ரிஸ்ட்ட பாருங்கன்னு சொல்வான். கப்பூரார் சிரிச்சிக்கிட்டு போயிடுவார். எப்பவுமே உங்கூட இருக்கிறவர் மேல உனக்கு அக்கறையே இல்லன்னு என்கிட்ட சண்டைப் போடுவான். எங்கப்பா அம்மாவ கூட சில நாள் பிரிஞ்சிருக்கேன். ஆனா கப்பூரார விட்டுப் பிரிஞ்சதே இல்ல. ஸ்கூல் டூர்ன்னா கூட அவர் சமையல் தான் எனக்கு. அவர அழைச்சிட்டு போவ பெர்மிஷன் கிடைக்கலன்னா.. வீட்டுல டூர் கேன்சல் பண்ணிடுவாங்க. நான் போலன்னா கார்த்திக்கும் போக மாட்டான். கார்த்திக் மாதிரி ஒரு சூப்பர் ப்ரென்ட் வேற யாருக்கும் கிடைக்கவே மாட்டான்.

கார்த்திக் நிறைய கேள்வி கேப்பான். எதையும் லேசுல ஒத்துக்க மாட்டான். அவன் ஏதாச்சும் சொன்னா அது சரியா தான் இருக்கும்னு நான் நம்புவேன். எனக்கு 32 வயசுல தான் கல்யாணம் ஆகும்னு சொன்னாரு ஜோசியர். நானும் கார்த்திக்கும் அப்ப விழுந்து விழுந்து சிரிச்சோம். ஆனா இப்ப அப்படித் தான் நடக்கும் போல. இன்னும் 20 நாளுல எனக்கு 32 ஆகப் போகுது. ஏதோ ஒரு காரணம்னு மாறி மாறி 4 வருஷமா பொண்ணு செட் ஆகவே இல்ல. இப்ப தான் தூரத்துச் சொந்தத்துல ஒரு பொண்ணு முடிவாகி இருக்கு. பக்கா கிராமத்துப் பொண்ணு. எங்க ஊர் பக்கம் தான். நாங்க தாத்தா காலத்துலயே ஊர விட்டு சென்னை வந்துட்டோம். ரொம்ப சின்ன வயசுல ஒரு தடவ ஊருக்கு போயிருக்கேன். அப்புறம் இப்ப தான் என் நிச்சயதார்த்ததிற்குப் போறேன். அதுவும் நேரா பொண்ணு ஊருக்கு. ஃபோட்டோ மட்டும் பார்த்துட்டு கல்யாணத்திற்கு நான் சம்மதிச்சது கார்த்திக்கிற்குப் பிடிக்கல. அட்லீஸ்ட் நிச்சயத்தார்த்தத்திற்கு 2 நாள் முன்னாடியாவது போய் பழக பாருன்னு நச்சரிச்சு அனுப்பி வச்சுட்டான். அவனைக் கூப்பிட்டேன். நான் இருந்தா சரி வராது.. நீ மட்டும் போன்னு சொல்லி அனுப்பி வச்சுட்டான். நானும், கப்பூராரும் மட்டும் தான் வந்தோம். இப்ப நான் ஜோசியத்தை நம்ப ஆரம்பிச்சுட்டேன். ஆனா சுட்டுப் போட்டாலும் கார்த்திக் நம்ப மாட்டான். அப்படி நம்ப ஆரம்பிச்சுட்டா அவன் கார்த்திக்கே இல்ல.

ஊருக்குள்ள வரும் பொழுதே அந்த மரத்தைப் பார்த்துட்டார் கப்பூரார். வண்டிய நிறுத்த சொல்லிட்டு அந்த மரத்துக்குப் பக்கத்துல போயிட்டார். நான் அப்ப தான் கார்ல இருந்தே இறங்கி இருந்தேன். ரோட்ல இருந்து இறங்கி 250 மீட்டராவது நடந்தா தான் அந்த மரம் வரும். எப்படி இந்தக் கரடு முரடான வழில இவ்ளோ சீக்கிரம் போனார்னு ஆச்சரியமா இருந்துச்சு. முட்டிப் போட்டுக்கிட்டு மரத்தை அண்ணாந்து பார்த்துக்கிட்டு இருந்தார். அவர்கிட்ட போனப்ப தான் தெரிஞ்சது அவர் அழுதுக்கிட்டு இருந்தாருன்னு. எனக்குக் கொஞ்சம் பயமா போச்சு. அந்த மரத்த தூரத்தில் இருந்து பார்த்தா ஒன்னும் தெரில. கிட்ட வந்து பார்த்தா தான் அது எவ்ளோ பெருசுன்னு தெரிஞ்சது. லைட்டா பயமா இருந்துச்சு. இவர் வேற அழுதுக்கிட்டு இருக்காரு. இவர் அழுது நான் பார்த்ததே இல்ல. அவருக்கு பின்னாடி போய் காரைப் பார்த்த மாதிரி மண்ணுல உட்கார்ந்துட்டேன். அடிக்கடி திரும்பி கப்பூரார் இருக்காரான்னு மட்டும் பார்த்துக்கிட்டேன்.

அரை மணி நேரம் அழுது இருப்பார்னு நினைக்கிறேன். வாங்க தம்பின்னு கார்கிட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார். பொண்ணு வீடு வர வரைக்கும் அவர் எதுவும் பேசல. பொண்ணு வீட்டுக்குப் போனதும் அவங்க கப்பூரார கிட்சனுக்கு கொண்டுன்னு போயிட்டாங்க. அரை மணி நேரத்துல சாப்பாடு ரெடி ஆயிடுச்சு. பொண்ண கண்ணுல காட்டாமலே சாப்பாடு போடுறாங்களேன்னு நினைச்சுக்கிட்டே சாப்பாட வாயில வச்சேன். கண்டிப்பா இத்தனை நாள் எனக்கு சமைச்சு போட்ட கப்பூராரோட கை பக்குவம் இல்ல அது. நான் சந்தேகமா அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து சிரிக்கிற மாதிரி இருந்துச்சு. அவர் முகத்துல இவ்ளோ அமைதிய நான் பார்த்ததே இல்ல. மொக்க மணி னெரத்துக்கு முன்னாடி அழுதுவார் மாதிரியே இல்ல அவர பார்க்க. நான் அதிகமா எதுவும் யோசிக்காம ரசிச்சு சாப்ட்டு எழுந்துட்டேன்.

சாப்ட்ட அப்புறமும் பொண்ண காண்பிக்காம ரெஸ்ட் எடுக்க சொல்லி அந்தத் தெரு முனையில இருக்கிற மாடி வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டாங்க. எங்கயோ பார்த்த மாதிரி சிரிச்சுக்கிட்டே வந்தார் கப்பூரார். என் அவஸ்தைய நான் யாருகிட்ட போய் சொல்றது. போனதும் அங்கிருந்த கட்டில் பக்கத்தில், தரையில் துண்டு விரித்து படுத்துட்டார் கப்பூரார். ம்க்கும்.. படுத்துட்டாலும் என்று தான் நினைச்சேன். வாழ்க்கையில கப்பூராரோட குறட்டையை முதல் தடவை அன்னிக்கு தான் கேட்டேன். அந்த மரத்துல இருக்கிற பேய் கீய் ஏதாவது அவரை அடிச்சிருக்குமான்னு யோசனைப் போச்சு.

அந்த ரெண்டு மணி நேரம் ரொம்ப நரகமா இருந்துச்சு. அத இன்னும் அதிகப்படுத்துற மாதிரி அவரோட குறட்ட சத்தம் வேற. ஒருவழியா ரெண்டு பேரு வந்து திரும்பி பொண்ணு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அந்த வீட்டுக்குள்ள அந்த ஊர்க்காரங்க அத்தனைப் பேரும் ஒரு பக்கம் இருந்தாங்க. எதிர்க்க ஒரே ஒரு நாற்காலி. அதுல என்ன உட்கார வச்சுட்டாங்க. என்னத்த சொல்ல. பொண்ண பாருங்கன்னு சொன்னாங்க. அங்க இருந்த 50, 60 பேர்ல எது பொண்ணுன்னே தெரில. அத விட கொடும.. அத்தனைப் பேருமே பொண்ணா தெரிஞ்சாங்க. என்னமோ பேசுனாங்க, கேட்டாங்க. ஒருவழியா அனுப்பி வச்சிட்டாங்க. இன்னும் கப்பூரார் குறட்ட விட்டு தூங்கிட்டிருந்தார். ம்ம்.. எத்தனை நாள் தூக்கம் இதுன்னு நினைச்சுக்கிட்டேன். யாரோ ரெண்டுப் பேர் வந்து கப்பூரார சமைக்க எழுப்பிக் கூட்டிட்டு போயிட்டாங்க. நான் கப்பூரார தூங்க விட்டிருக்கணுமோன்னு அவர் போனதும் தோணுச்சு.

நைட் சாப்பாட பொண்ண பரிமாற விட்டாங்க. பின்னால் இருந்து பரிமாறினதால கை மட்டும் தான் சரியா பார்க்க முடிஞ்சது. கை கழுவப் போகும் பொழுது ஒரு நொடி முகத்தைப் பார்த்தேன். அப்பாடான்னு நினைக்கிறதுக்குள்ள நான் அவங்கள கிராஸ் பண்ணிட்டேன். எந்த நூற்றாண்டுல வாழுறாங்க இவங்கன்னு நினைச்சுக்கிட்டே சிரிச்ச முகமா எனக்குன்னு  ஒதுக்கப்பட்ட வீட்டுக்குப் போயிட்டேன். கீழ யார்கிட்டயோ பேசிட்டு கப்பூரார் வந்து படுத்தார். நாம ஏன் பொண்ண அவங்க ரூம்ல போய் பார்க்கக் கூடாதுன்னு.. அத பத்தி சீரியசா திங்க் பண்ணேன்.

காலையில யாரோ என்னைய எழுப்பினாங்க. லைட்டா கண்ணைத் தொறந்து பார்த்தேன். பொண்ணோட அப்பா நின்னுக்கிட்டு இருந்தார். ஐய்யய்யோ.. பொண்ணோட ரூம்லயே தூங்கிட்டோமோனு பதறியடிச்சு எழுந்தேன். நல்லவேள நான் எனக்குக் கொடுத்த வீட்ல தான் இருந்தேன். என் கூட வாங்கன்னு எதுவும் சொல்ல எங்கயோ கூட்டிட்டுப் போனார். இன்னும் சரியா விடியவே இல்ல. மணி ஆறு தான் ஆகியிருக்கும் போல. தூக்கம் எனக்கு சரியா கலையல. வயல்ல நடக்க சிரமமா இருந்துச்சு. தூரத்தில் சில பேர் நின்னுக்கிட்டிருந்தாங்க. உத்துப் பார்த்தா.. எல்லாம் நேத்து கப்பூரார் அழுதுக்கிட்டிருந்த மரத்துக்கு கீழ நிக்குறாங்கன்னு தெரிஞ்சது. பொண்ணோட அப்பாகிட்ட கப்பூரார் எங்கன்னு கேட்டேன். அவர் அமைதியா இருந்தார். எனக்கு என்னமோ போல இருந்துச்சு. தூக்க கலக்கம் எல்லாம் பயமா மாறிடுச்சு. திடீர்னு வேர்க்க ஆரம்பிடுச்சு. அழுதுருவேன் போல. கடவுளேன்னு மரத்துக்கிட்ட ஓடிப் போய் பார்த்தா.. அங்க தரையில் கிடந்தார் கப்பூரார். எனக்கு ஒன்னும் புரியல. அவருக்கு எதுவும் ஆயிருக்கக் கூடாதுன்னு மட்டும் மனசு அடிச்சுக்கிச்சு. அவருகிட்ட சின்ன அசைவு கூட இல்ல. அவர் முகம் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிற மாதிரி இருந்துச்சு. கண்ணுங்க மட்டும் எதையோ பார்த்து பயந்து அதிர்ச்சியில ஃப்ரீஸ் ஆன மாதிரி தெரிஞ்சுச்சு. அவர் கையில ஏதோ மிண்ணுற மாதிரி இருந்துச்சு. உத்துப் பார்த்தா ஏதோ ஒரு பொருளை இறுக்க மூடி வச்சிருந்தார். என்னென்னு பார்க்கலாம்னு இன்னும் கிட்ட போய் அவர தொடப் போனேன்.

“சாமி.. தொடாதீங்க”ன்னு குரல் கேட்டுச்சு.

நான் திரும்பிப் பார்த்தேன். யார் சொன்னதுன்னு தெரில. அங்கிருந்த எல்லார் முகத்திலும் பயம் தெரிஞ்சுச்சு.

“ராவுல இந்தப் பக்கம் ஏன் வந்தார்னு தெரில. பாவம் பேய் அடிச்சிரிச்சி.

தொடரும்..

– சிம்ம வாகனிLeave a Reply