Shadow

அந்தி நேர சாயை – 3

என் பெயர் சுதன். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்ல தான். நான், எங்கம்மா.. இவ்ளோ தான் என் உலகம். ஆனா உலகம் ரொம்ப பெருசு இல்ல!! அப்ப என்னோட அழகான சின்னக் கூடுன்னு சொல்லிக்கலாம் தான? இந்தக் கூட்டுல யாரோ கல் எறிஞ்ச மாதிரி எங்கம்மாக்கு கிட்னி ஃபெய்லியர் ஆயிடுச்சு. அவங்க காலுலாம் வீங்க ஆரம்பிச்சுது. பெருசா அவங்க கண்டுக்கல. நாள் ஆக ஆக சோர்வு அதிகமாயி உடம்புக்கு முடியாம படுத்துக்கிட்டே இருந்தாங்க. உள்ளூர் வைத்தியர் மருந்துக்கு சரி படல. ஏழு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போனோம். ஒரு கிட்னி சுத்தமா செயலிழந்துடுச்சுன்னும், இன்னொன்னு பலவீனமா இருக்குன்னு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டர் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துட்டு சொன்னாரு. உடனே தனியார் ஆஸ்பத்திரில சேர்த்தோம். பலவீனமா இருக்கிற கிட்னி கொஞ்ச நாள் தான் தாங்கும் என சொல்லிட்டாங்க. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ.. அவ்ளோ சீக்கிரம் அம்மாக்கு கிட்னி மாத்தணும்னு சொன்னாங்க. பணத்துக்கு என்னப் பண்ணன்னு நான் யோசிக்கிறதுக்கு முன்னாடி, தன்னோட நிலத்த வித்துட்டு பணத்த எடுத்துட்டு வந்து நின்னான் சுந்தர்.கொஞ்ச நாளைக்கு முன் தான் சுந்தரும், அவன் அண்ணனும் சொத்த பிரிச்சுக்கிட்டாங்க. தன் பாகத்த வித்துட்டு கேட்காமலேயே பணத்தோட வந்து நின்னான். அவங்கண்ணன் கூட வேண்டாம்னு தடுத்து பாத்திருப்பார் போல. அவன் கூட நான் பத்தாங்கிளாஸ் வரைக்கும் தான் படிச்சேன். ஒரே ஊர். அவ்ளோ தான் எங்களுக்குள்ள சம்பந்தம். ப்ரென்ட்ன்னு சொல்லலாம். ஊர்ல அவன் மட்டும் தானா எனக்கு ப்ரென்ட்? அல்லது சுந்தர்கிட்ட மட்டுந்தான் நிலம் இருந்துச்சா என்ன!! ரவிகிட்ட எதையும் விக்காமலே தர அளவு பணம் இருக்கு. என்னால திருப்பி கொடுக்க முடியும்னு தோணுச்சுன்னா.. அவனுங்கூட கேட்காமலே தருவான் தான். ஆனா என்னால பணத்த திருப்பி தர முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியுமே!! அப்புறம் ஏன் சுந்தர் கொடுத்தான்? தெரில. ஆனா அவன் கடவுள் மாதிரி. ரொம்ப நல்லவன். வாழ்நாளுலாம் அவனுக்கு நன்றியோட, விசுவாசமா இருக்க முடியுமே தவிர.. வேற என்ன என்னால செய்ய முடியும்?

சுந்தர் காலேஜ்லாம் போய் படிச்சவன். அவன் காலேஜ் விட்டு வர்றப்ப தான் பவித்ரா அந்தக் காலேஜ்ல சேர்ந்தா. ஊருக்குள்ள பார்த்த அதே பொண்ணு.. வெளியூர்ல பார்த்தா வேற மாதிரி தெரியுமோ என்னமோ. அவனுக்கு பவித்ராவ பிடிச்சுப் போச்சு. பவித்ராவுக்கும் அப்படித் தான்னு நினைக்கிறேன். ஆனா ரெண்டு பேரும் சொல்லிக்கிட்டது இல்ல. ஆனா இதெல்லாம் சொல்லி தான் தெரியணும்னு இல்ல. பவித்ராவோட அப்பாவிற்கு கூட அரசல் புரசலா தெரியும். அவருக்கு கூட சம்மதம் மாதிரி தான் இருந்துச்சு. சுந்தர் நல்லப் பையன். நல்லக் குடும்பம். ஆனா.. இப்ப அவங்கிட்ட சொத்து இல்ல. அது என்னால தான். இப்ப பவித்ராவோட அப்பா சென்னைல மாப்ள பார்த்துட்டாராம்.

எதையும் வெளில சொல்ல மாட்டான் சுந்தர். பாவம் விஷயம் கேள்விப்பட்டதும் ரொம்ப ஓடிஞ்சிப் போயிருப்பான். ஆனா சிரிச்ச மாதிரி தான் ஊர சுத்தி வர்றான். ஆனா அவன் கண்ணு காட்டிக் கொடுக்குதே. எல்லாம் என்னால தான். எங்கம்மாவுக்கு வைத்தியம் பண்ண எனக்கு வக்கு இருந்திருக்கணும். இல்லன்னா அவன் பணம் தர்றப்ப வேணாம்னு சொல்ல மனசு வந்திருக்கணும். இப்ப நான் ஏதாவது செஞ்சு சென்னை சம்மந்தம் இல்லாம செய்யணும். ஆனா பவித்ரா அப்பா எல்லாத்தையும் வேகமா பண்ண ஆரம்பிச்சார்.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு பவித்ரா வீட்டு தெருவிலேயே தங்க வச்சாங்க. மாப்ள தூங்கறப்ப அவர கன்னாபின்னான்னு அடிச்சி பயமுறுத்திட்டா.. இந்த சம்பந்தன் நின்னுடும் இல்லன்னா நிச்சயத்தார்த்தமாவது நிக்கும். அடுத்து என்னப் பண்ணலாம்னு யோசிக்க நேரம் கிடைக்கும்னு நினைச்சேன். மாப்ள வந்த முதல் நாள் நைட்டே அந்த வீட்டுக்குப் போனேன். மாப்ள கூட வந்த பெரியவர் எங்கயோ போறத பார்த்தேன். அவர் நேரா ஊருக்கு வெளில இருக்கிற மரத்துக்கிட்ட போனார். அந்த மரத்தையே பார்த்துட்டு இருந்தார். முகத்தை முன்னாடியே நல்லா துணியால சுத்தி தயாரா தான் வந்திருந்தேன்.

எங்க ஊருக்காடா பொண்ணு பார்க்க வந்திருக்கீங்கன்னு கேட்டுக்கிட்டே அவர் முகத்துல ஒரு அறை கொடுக்கலாம்னு நினைச்சேன். அவர் டக்குன்னு என்னைத் திரும்பி பார்த்துட்டார். அப்படியே கீழ விழுந்துட்டார். பாவம் பயத்துல இறந்தே போயிட்டார் போல. எனக்கு ஒன்னும் புரில. கொலைப் பண்ணிட்டமோன்னு எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பிடுச்சு. வீட்டுக்கு இழுத்து மூடிப் படுத்தவன் தான். அடுத்த நாள் செம ஜுரம் எனக்கு. அம்மா தான் சொன்னாங்க. பேய் ஒரு பெரியவரைக் கொன்னுடுச்சுன்னு. இங்க பேய் எங்க வந்துச்சுன்னு தெரில. ஆனா நல்லதுக்கு தான். நிச்சயதார்த்தம் நின்னுடும்னு நினைச்சேன். ஆனா கார்த்திக்னு யாரோ ஒருத்தன் வந்து குட்டைய குழப்பி நிச்சயதார்த்தத்த நடத்திட்டான். இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்னு தேதியும் குறிச்சிட்டாங்க.

இவங்களாம் என்ன மனுஷங்கன்னு தெரில? ஒரு மரணம் கூட இவங்கள அசைச்சு பார்க்கலயேன்னு எனக்கு ஆத்திரமா வந்துச்சு. அடுத்த நாள் இவங்க கிளம்பறதுக்கு முன்னாடி ஏதாச்சும் பெருசா அவங்களுக்கு பயம் வர மாதிரி செய்யணும்னு தோனுச்சு. அன்னைக்கு நைட்டும் அவங்க வீட்டுக்கு போனேன். புதுசா வந்த கார்த்திக்ங்கிறவன் எங்கயோ வெளில வந்தான். இவன் வந்ததில் இருந்தே ஊர்ல இருக்கிற பாதி பேர் கிட்ட அந்த மரத்தைப் பற்றி விசாரிச்சுக்கிட்டு இருந்தான். அவன் அந்த மரத்துக்கிட்ட தான் போவான்னு தோனுச்சு. அதே மாதிரி தான் போனான். ரொம்ப விவகாரமானவனா இருப்பான் போல. பேய் பத்திய பயம் இல்லாம மரத்துல சாஞ்சுக்கிட்டு பாட்டு பாடிக்கிட்டு இருந்தான். இவனை அறைஞ்சுலாம் பயமுறுத்த முடியாதுன்னு தோனுச்சு. ஜாக்கிரதையா ஏதாச்சும் பண்ணி அவன பயமுறுத்தி அனுப்பனும். இவன் பயந்தா எல்லாரையும் பயமுறுத்தி கூட்டிக்கிட்டு போயிடுவான். மாட்டிக்கிட்ட என்னாவறதுன்னு பயமா வேற இருந்துச்சு. பயத்தோட எது செஞ்சாலும் மாட்டிப்போம்னு வீட்டுக்கு வந்துட்டேன். தூக்கம் வரல. கார்த்திக்க அடிக்கிறதா இல்ல மாப்பிள்ளயா அடிக்கிறதுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன். எது பண்ணாலும் சீக்கிரம் பண்ணனும். இல்லன்னா சட்டுன்னு விடிஞ்சிடும். பக்கத்துல யாரோ தோட்டத்துக்கு போக எழுந்துரிச்சு இருப்பாங்க போல. கொலுசு சத்தம் கேட்டுச்சு. அந்த டைம்ல அந்தச் சத்தம் விநோதமா இருந்துச்சு. வீட்டுக்குள்ள இருந்து கேட்கவா இப்படின்னான்னு யோசிச்சேன். அம்மா மருமகளுக்குன்னு வாங்கின கொலுச எடுத்துக்கிட்டு, எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு புடவையும் எடுத்துக் கிட்டேன்.

வெறும் கையால அடிச்சா கார்த்திக் சரியா அடி விழாதுன்னு விறகு ஒன்ன போற வழியில் எடுத்துக்கிட்டேன். இரத்தம் எவ்ளோ பெரிய ஆளயும் மிரட்டி பார்த்துடும். கொலுசு சத்தம் கேட்டா தான் பேய் அடிச்சுதுன்னு கார்த்திக் ஊர்ல போய் சொல்வான். அவன யோசிக்க விடாம அடிக்கணும்னு முடிவு பண்ணி கட்டையால ஓங்கி அடிச்சேன். தோள் பட்டையில தான் அடிக்கணும்னு நினைச்சேன். ஆனா அடி அவன் முகத்தில் விழுந்துடுச்சு. அவன் கத்துல. கையை காதுல வச்சுக்கிட்டு வித்தியாசமா சத்தம் போட்டுக்கிட்டே விழுந்தான். நான் இன்னும் அடிக்காலாமா வேணாம்னு யோசிச்சுக் கிட்டிருந்தேன். அவன் கால வலியில கன்னாபின்னான்னு ஆட்டினான். அடிச்ச என்னை கவனிச்ச மாதிரி தெரியல. இது போதும்னு வீட்டுக்கு வந்துட்டேன். கொலுசு இருந்த இடத்துல, புடவை இருந்த இடத்துல அத அத வச்சுட்டு தூங்கிட்டேன்.

டேய் இன்னொருத்தவனையும் பேய் அடிச்சு கொன்னுடுச்சாம்னு அம்மா என்னை எழுப்பினாங்க. செத்துட்டானா!? ஆனா பயமுறுத்த மெதுவா தான அடிச்சேன். மாப்ளயோட அப்பா.. பேயும் இல்ல ஒன்னும் இல்லன்னு போலீஸ் கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணிட்டாரு. நான் யாருகிட்டயும் எதையும் கேட்டுக்கில்ல. பதற்றம் இல்லாம இருக்கணும்னு முடிஞ்ச வரை சாதாரணமா இருக்க பார்த்தேன். போலீஸ் பாடிய போஸ்ட் மார்ட்டம் பண்ண எடுத்துட்டு போயிருக்காங்களாம். சத்தியமா கல்யாணத்த பத்தி இனி யோசிக்க மாட்டாங்கன்னு  பட்டுச்சு. மாப்ள முகம் நிச்சயதார்த்தம் அப்பவே சுருங்கி தான் இருந்துச்சு. இப்ப கேட்கவே வேண்டாம். ஆனா ஒரு கொலைப் பண்ணிட்டோம்னு நினைக்கிறப்பலாம் அருவருப்பாவும் அதே சமயம் எதையோ சாதிச்சிட்டோங்கிற மாதிரியும் இருந்துச்சு.

அன்னிக்கு நானும் அம்மாவும் சீக்கிரம் சாப்ட்டு படுத்துக்கிட்டோம். சுந்தர் வந்து குரல் கொடுத்துக்கிட்டே கதவை லேசா தட்டினான். அவனுக்கு தூக்கம் வரலன்னு எங்கிட்ட வந்து பேசிட்டிருப்பான். கதவு மெதுவா திறந்து வெளில போய் சத்தமில்லாம மூடினேன். வானத்த பார்த்த மாதிரி சுந்தர் நின்னுக்கிட்டிருந்தான். என்னடா தூக்கம் வரலியான்னு அவன் தோள தொட்டேன். அவன் திரும்புனான்.

நீ.. நீ.. நீஈஈஈ..

அதுக்கு மேல எனக்கு பேச்சு வரல. நெஞ்சுல சுருக்குன்னு ஒரு வலி உயிர் போற மாதிரி. என்னை அறியாம என் கை நெஞ்ச பிடிச்சுக்கிச்சி. முன்னாடி அவன் உருவம் மங்கலாயிட்டே போச்சு.

அவன்.. அவன்.. கார்த்திக்!!

– சிம்ம வாகனி

Leave a Reply