Search

அமானுஷ்யமும் மர்மமும்

அமானுஷ்யம்

அமானுஷ்யமும் மர்மமும் போல் ஈர்ப்பான விஷயங்கள் உலகத்தில் வேறெதுவுமில்லை. அதைப் பற்றிப் பேசவும் கேட்கவும் எப்பொழுதும் தயாராகவே இருப்போம். அதுவே செவி வழி கதையாக இல்லாமல் தனக்கேற்பட்ட அனுபவங்களை ஒருவர் தொகுத்தால்? அப்படித்தான், ஜேம்ஸ் வான் பிராக் தனது புத்தகமான, Ghosts Among Us என்பதில் ஆவிகள் உலகத்தினைப் பற்றிச் சொல்கிறார்.

புத்தகத்தில் திகிலான சம்பவங்களோ, புனைவுக்குரிய சுவாரசியங்களோ இல்லை. மரணத்தைப் பற்றியும், மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றியும் அலசுகிறார் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஆவி மீடியம்களில் ஒருவரான ஜேம்ஸ். அவர் சந்தித்த எண்ணற்ற மனிதர்கள் பற்றியும், ஆவிகள் பற்றியும் சொல்லியுள்ளார். அனைத்துமே ஆச்சரியத்தையும், நம்மை ஆழ்ந்து யோசிக்கவும் வைக்கும் அனுபவங்கள் என்பதுதான் புத்தகத்தின் விசேஷம்.

மனிதர்களுக்கு நல்லது செய்யவே ஆவிகள் எப்பவும் அவர்களைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆவிகள் ஈதர் வடிவானவை என்பதால் மனிதர்களின் பார்வைக்குத் தெரியாத பரிணாமத்தில் உள்ளன. கனவுகள், சகுனத் தடைகள் எல்லாம் ஆவிகள்தான் ஏற்படுத்துகின்றன.

“மரணம் என்பது இறுதி முடிவல்ல; அது இயற்கையான ஒன்று. மரணத்திற்குப் பின்தான் உண்மையான வாழ்க்கை தொடங்குகிறது” என மனிதர்களுக்குப் புரிய வைக்கவே ஆவிகள் விரும்புகின்றனவாம். நம் பிரியத்துக்குரியவர்கள் இறந்த பின் அவர்கள் நம் அருகிலேயேதான் இருக்கிறார்கள். அவர்களை நினைத்தவுடன் அவர்கள் நம் முன் தோன்றிவிடுவார்களாம். இன்ஷ்யூரன்ஸ் பணம் தன் குடும்பத்தினருக்குக் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டே விபத்தில் இறந்தவர்கள் ஆவியுலகம் செல்கின்றனர். அதுவரை தன் குடும்பத்தினர் கூடவே அரூபமாக இருப்பார்களாம்.

‘மரணம் என்பது நம்ப முடியாத அளவுக்கு அழகும், ஆளுமையும் கொண்ட ஒரு விஷயம்’ என முன்னுரையிலேயே சொல்கிறார் ஜேம்ஸ். இறக்கும் பொழுது மனிதர்களுக்கு வலி தெரியாது என்பதை அனைத்து ஆவிகளும் சொல்லும் விஷயம். மனிதன் அவனது உணர்வையும் நினைவையும் உயிர் வெளியேறும்போது இழக்கிறான். ஒருவர் இறந்தவுடன், ஒளிப்பாதைச் சுரங்கம் போல் ஒன்று தோன்றி, இறந்தவரின் உறவினர் அச்சுரங்கத்தின் வழியே ஆவிகள் உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றார்கள். மேலும், ஆவிகள் இருவகை என்கிறார் ஜேம்ஸ். ஒன்று ஒளியைக் கடந்து சென்ற ஆவிகள்; மற்றவை நிலத்திடை வாழும் ஆவிகள்.

நம்மிடையே உலவும் ஆவிகள் பேராசை பிடித்த மனிதன், தற்கொலை செய்து கொண்டவன் போன்றவர்களால் மரணத்துக்குப் பின், ஒளிப் பாதையைக் கடக்க இயலாது. நிலத்திடை வாழும் ஆவிகளாக கீழ் உலகிலேயே இருப்பார்கள். அதாவது இவர்கள்தான், நாம் பேய்கள் என வகைப்படுத்தியுள்ள ஆவிகள். சினிமாவில் வருவது போல், பேய்களுக்கு எந்த சக்திகளும் இல்லை. எனினும் மது அருந்துபவர்கள், போதைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஆவி ‘தொற்று’ ஏற்படும் வாய்ப்பு அதிகம். இவை பலவீனமான ‘ஆரா’ கொண்ட மனிதனுள் தன் அதிர்வுகளை சுலபமாக ஒன்றிணைத்து அவனது சக்தியை உறிஞ்சுவிடும். சக்தி என்பது மன நிம்மதி என பொருள் கொள்ளலாம். சிற்றின்பங்களில் உழன்ற மனிதர்கள்தான் இறந்த பின்னும் நிலத்திடை ஆவிகளாக உழலுவார்கள். இறந்த பின்னும் போதைப் பழக்கத்தை மறக்க முடியாததால், குடிக்காரர்களைக் குறி வைக்கின்றனாம் பேய்கள். குடிக்காரனுக்கு பேய் பிடிக்கும் வாய்ப்புகள் ஜாஸ்தி என்கிறார் ஜேம்ஸ்.

‘ஆரா’ குன்றும் எந்த மனிதனையும் நிலத்திடை வாழும் ஆவிகள் பிடிக்க வாய்ப்புள்ளன. அதாவது உங்களை மன அழுத்தத்திற்குத் தள்ளி வீண் உடல், மன சிரமங்களைத் தந்துவிடும். அதிலிருந்து மீள பல தற்காப்பு வழிகளையும் சொல்கிறார். அதில் எளிமையானது, பிங்க் நிற ஒளியை நம்மைச் சுற்றி கற்பனை செய்து கொள்வது. பிங்க் என்பது நிபந்தனையற்ற முழு அன்பின் நிறம் என்கிறார் ஜேம்ஸ். சக மனிதர்களை நேசிக்கும்போது, நம் ஆரா வலுப்பெறுகிறது. மனதில் அன்பு நிரம்பியவர்களை பேய்கள் நெருங்குவதில்லை.

இப்புத்தகம், ‘நம்மிடையே உலவும் ஆவிகள்’ என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மரணம் பற்றிய வீண் பயத்தை அகற்றுவதோடு, ஆவிகள் பற்றிய தெளிவான  புரிதலையும் இந்நூல் அளிக்கிறது. அன்பைப் போதிக்கும் எந்த நூலுமே ஆன்மிக நூலே! இந்நூல் அன்பாக இருக்க வேண்டியதின் அவசியத்தை மிக அழுத்தமாக வலியுறுத்துகிறது.

மர்மம்

“என்னது!! ஆவிகள் மனிதர்களின் கண்களுக்குத் தெரியாதா?” என ஆச்சரியப்படுகிறான் லாப்சாங் ராம்பா எனும் சிறுவன். அவன் திபெத்திலுள்ள லாசா நகரத்தின் சோக்போரி மடாலயத்தில் பயிலும் இளந்துறவி. ஏனெனில் அவன் மடாலயத்தில் பல ஆவிகளைப் பார்த்ததோடு மட்டுமில்லாமல் அதனுள் ஊடுருவி ஓடி விளையாடியும் இருக்கிறான். தேவாலயத்தில் ஆவிகள் நிரம்பி வழியுமென ஜேம்ஸும் தன் புத்தகத்தில் சொல்லியிருக்கார் (இறந்தவர்களின் ஆவி, சிலுவையைப் பார்த்தாலே நடுங்கும் என்பதோ, கோயில் எல்லையை மிதிக்க முடியாது என்பதெல்லாம் சினிமா கற்பனைகள் மட்டும்தான் போல!)

The Cave of the Ancients எனும் புத்தகம், சீடனான டியூஸ்டே லாப்சாங் ராம்பாவுக்கும், அவனது குருவான லாமா மிங்கயார் டாண்டாபுக்கும் நடக்கும் உரையாடல் பற்றியது. அதில் கடவுள் பற்றிய மிக முக்கியமான உரையாடல் ஒன்றுள்ளது. அது, ‘கடவுள் என்று நாம் சொல்லும் நபர் மிகவும் உன்னத நிலையடைந்த ஓர் ஆவி. பிறப்புக்கு பின் பிறப்பென பலமுறை புடமிடப்பட்டு கசடுகள், அழுக்குகள் நீங்கி மிகவும் தூய்மையானவராக அவர் உருவானவர்’.

சோக்போரி மடாலயத்தில் இருந்த வயது முதிர்ந்த சீனத் துறவியின் கடுமையான விரதத்தைப் பற்றி விவரிக்கிறார் லாப்சாங். இமய மலையின் ஒரு குகைக்குள் அந்த சீனத் துறவியை விட்டு, அந்தக் குகையை வெளியில் இருந்து மூடிவிடுகின்றனர். வெளியுலகின் ஒரு துளி சத்தம் கூட நுழைந்திராத அக்குகையினுள், இரண்டு நாளுக்கு ஒருமுறை கொஞ்சம் சம்பா உணவை மட்டும் சிறு பொந்தின் வழியாக அனுப்புவார்களாம். கொடும் தனிமை, அவரை என்னச் செய்திருக்கும் என்பதை கற்பனை செய்தாலே மெய்சிலிர்க்க வைக்கிறது.

மந்திரக்குகை மர்மம்லாப்சாங் குறிப்பிடும் இன்னொரு விஷயம், ‘ஒரே விதமாக எந்த மாற்றமுமின்றி செயல்படும் மத நம்பிக்கைகளை ஒருவர் குருட்டுத்தனமாகப் பின்பற்றினால் அது அவரது ஆன்ம உடலின் வளர்ச்சியைப் பாதித்துவிடும்.’ லெளகீகங்களைத் துறந்த புத்த பிட்சுகளுக்கு பிரார்த்தனை ஏன் அல்லது என்னவாக இருக்கும் என்ற சந்தேகம் எனக்கு எப்பவும் உண்டு. ‘மறு உலகில் இயங்கப் போகும் நமது ஆன்ம உடலுக்காக நாம் செய்யும் பிரார்த்தனைகள் சக்தி வாய்ந்தவை’ என அதற்கான விடையையும் லாப்சாங் அளித்துள்ளார். கூடவே, சீனாவின் ஆதிக்கப் போக்கைச் சுட்டிக் காட்டவும் தவறவில்லை லாப்சாங்.

மடாலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டும் திபெத்தின் “அதிசயக் குகை”க்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அக்குகை முன்னோர்களால் உருவாக்கப்பட்டதாம். அந்த மர்மக் குகை, நம் முன்னோர்களால் எதிர்கால சந்ததிக்காக உருவாக்கப்பட்ட ‘காலக்குமிழ்’ என்கிறார் லாப்சாங். அதி நவீன இயந்திரங்கள், கலைப்பொருட்கள் மற்றும் லெமூரியா, அட்லாண்டிஸ் கண்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளங்கள் பற்றிய ‘கால நீரோட்ட சித்திரங்களை’க் (லேசர் ஷோ போல்) காட்டும் பொறிகள் போன்றவை காலக்குமிழுக்குள் பாதுகாக்கப்படுகின்றனவாம். இது போன்ற எகிப்தில் மணலுக்கு அடியிலும், தென் அமெரிக்காவில் ஒரு பிரமிடுக்கு அடியிலும், ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் குறிப்பிட்ட ஓர் இடத்திலும் புதைக்கப்பட்டன. ஒவ்வோர் இடத்திலும், அந்த இடத்தைக் குறிக்க, காலத்தின் சின்னமாக ‘ஸ்பிங்ஸ் (Sphinx)’ என்ற சிங்கச் சிலைகள் நிறுவப்பட்டன. ஆனால் அது உண்மையில் சிங்கத் தலை இல்லை, பூனைச் சிலையின் தலை என்கிறார் லாப்சாங். பூனைச் சிலையின் தலை, புத்திக் கூர்மைக்கான ஒரு குறியீடு. அதனால்தான், ஜோ காங் ஆலயம் (Jokhang temple) பூனைகளால் காவல் காக்கப்படுகிறது என்கிறார். லாப்சாங்கின் இந்நூல் தமிழில், “மந்திரக்குகை மர்மம்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

மந்திரக்குகை மர்மம்நம்மிடையே உலவும் ஆவிகள்மேற்கூறிய இரண்டு புத்தகங்களையும் முழுவதுமாக படித்தால்தான், ஆவிகள் – ஆரா விஷயத்தில் திபெத்திய புத்தப் பிட்சு லாப்சாங் மற்றும், அமெரிக்க ஆவி மீடியமான ஜேம்ஸ் வான் பிராக் சொல்லும் விஷயங்களில் உள்ள ஒற்றுமைகளை உணரலாம். இருவரும் வெவ்வேறு விதமான வாழ்க்கைச் சூழல்கள், நம்பிக்கைகளில் இருந்து வந்தவர்கள். இந்த இரண்டு புத்தகங்களையுமே எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் தமிழ்நாட்டின் பிரபல ஆவியுலக ஆராய்ச்சியாளரான விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன். ஆவியுலக ஆராய்ச்சி மையத்தை நிறுவி நாற்பதாண்டு காலமாக இத்துறையில் இயங்கி வரும் இவரின் அனைத்துப் புத்தகங்களும் மேகதூதன் பதிப்பகத்தில் கிடைக்கும்.

விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்

– தினேஷ் ராம்