மெளனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் என அசத்திய இயக்குநர் அமீரின் அடுத்த படம். நீண்ட இடைவெளிக்குப் பின் அவரின் நான்காவது படம் வெளியாகியுள்ளது. இடையில் யோகி என்னும் படத்தை எழுதி தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு தாதாக்கள் மோதிக் கொள்வது தான் படத்தின் ஒரு வரி கதை.
ஆதி ஷண்முகம், பகவான் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. வழக்கமான அமீர் பட நாயகன் போல் ஜெயம் ரவி முதல் பாகத்தில் நிறைய நடந்தாலும்.. ஜெயம் ரவிக்கு கோட், சூட், கூலிங் கிளாஸ் போட்டு வித்தியாசப்படுத்தியுள்ளார் அமீர். முகத்தில் மரு ஒட்டுவதெல்லாம் பழைய பாணி என்பதால் பாகவனுடைய வலதுக் கண்ணின் மேல் ஒரு வளையமும், உதட்டில் சிவப்பு லிப்-ஸ்டிக்கும் போட்டு இரட்டையர்கள் வித்தியாசப்படுத்தியுள்ளனர். இந்த வித்தியாசம் மட்டும் போதுமா என.. பகவானை கொஞ்சமாக நெளிந்தாற் போல் நடக்க வைத்தும், வலதுக்கை கட்டை விரலைக் கொண்டு மற்ற நான்கு விரல்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருப்பதென வித்தியாசத்தினை வலுவாக பதிக்க நிறைய மெனக்கெட்டுள்ளார் ஜெயம் ரவி. நீது சந்திரா பாந்தமான நாயகியாக அறிமுகமாகி பின் நிறைய சிகரெட் பிடித்து ஆக்ஷன் வில்லியாக பரிணமிக்கிறார்.
படத்தின் தொடக்க காட்சிகள் தந்த விறுவிறுப்பு கொஞ்ச நேரத்தில் படுத்துக் கொள்கிறது. பின் எழுவேனா என்கிறது. சுவாரசியமற்ற திரைக்கதைக்கு ஓரளவுக்கு ரசிகர்கள் பழக்கப்பட்டு விட்டாலும்.. ஆக்ஷன் படம் என்ற பெயரில் இவ்வளவு மொன்னையான ஆக்ஷன் காட்சிகள் எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டனர். யார் யாரை அடிக்கின்றனர்.. யார் யாரை சுடுகின்றனர் என்றே தெரியவில்லை. படத்தொகுப்பும் படத்திற்கு கை கொடுக்கவில்லை. தாய்லாந்தில் நடக்கும் காட்சிகளின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. எனினும் பருத்தி வீரன் இயக்கிய அமீர் தான் உண்மையாகவே இந்தப் படத்தையும் இயக்கினாரா என்ற ஐயம் பலமாக எழுகிறது. தன்னைக் கொல்ல நினைத்தவர்களை பழிவாங்க நினைக்கும் ஆதி, தொழிற்போட்டியில் தன்னை சுட்ட பாபு ஆன்டனி மேல் கோபப்பட்டதாக கூட தெரியவில்லை. காவல் துறை அதிகாரியாக வரும் சய்ஜு குரூப்பின் கதாபாத்திரம் மட்டும் முழுமையாக உள்ளது. சாய் ரவி, சுதா சந்திரன் என்ற கதாபாத்திரங்கள் வந்து போகின்றனர். சொர்ணாக்காவைக் கூட பெண் என்பதால் தமிழ்ப்பட நாயகன் கை வைக்க மாட்டார். தமிழ்ப்பட வில்லன்கள் பெண்களை வன்புணர மட்டும் புஜ பல பராக்கிரமத்தைக் காட்டுவார்களே தவிர கொலை செய்யும் பொழுது சட்டென்று தான் கொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தின் நாயகன்(!?), அதாவது இறுதியில் சாகாமல் இருக்கும் கெட்டவன், வலிமையில் பெண்ணையும் ஆணுக்கு சமமாக பாவித்து அடி பின்னுகிறார். இந்த உத்தம நாயகன் தாயின் அன்பிற்காக வேறு ஏங்கி தவிப்பார் என்ற காட்சிகள் சிலமுறை படத்தின் முதற் பாதியில் வரும். பொறுமை கடலினும் பெரியது!!
படத்திற்கு இரண்டாம் பாகம் வேற வருமென்ற திகிலான செய்தியுடன் படம் முடிகிறது.