அம்புலி – நிலா என பொருள்படும். இரவில் மட்டுமே தோன்றி உயிர்களை வேட்டையாடும் மிருகம் போன்ற மனிதனைக் குறிக்கும் காரணப் பெயராக தலைப்பை வைத்துள்ளனர். ஸ்டிரியோ-ஸ்கோபிக் முறையில் எடுக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ்ப் படம் என்பது அம்புலியைப் பற்றிய விசேடமான செய்தி. தேர்வாழி கிராமத்தில் நடந்த விநோதமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதையின் கருவை அமைத்திருப்பதாக தெரிகிறது.
ஒருவழியாக தனது காதலை இரண்டு வருடங்களிற்குப் பிறகு பூங்காவனத்திடம் சொல்லி விடுகிறான் அமுதன். அவன் காதலைத் தெரிவித்த நாள் முதல் கல்லூரி இரண்டு மாதங்களுக்கு விடுமுறை என்பதால், பணக்கார வீட்டுப் பையனான அமுதன் காதலியைச் சந்திக்க கல்லூரி விடுதியிலேயே தங்க முடிவு செய்கிறான். அதற்கு அமுதன் அவனுடைய நண்பன் பார்வேந்தனின் உதவியை நாடுகிறான். கல்லூரி காவலாளி (வாட்ச்-மேன்) ஆன வேந்தனின் தந்தை வேதகிரி்யும் அமுதன் தங்குவதற்கு சம்மதிக்கிறார். அன்றிரவே அமுதன் பூங்காவனத்தின் ஊரான பூமாடந்திபுரத்திற்கு செல்ல குறுக்கு வழியான ஆள் அரவமற்ற சோளக்காட்டுப் பகுதிக்குள் மிதிவண்டியில் செல்கிறான். காதலியைச் சந்தித்து விட்டு திரும்பும் வழியில் சோளக்காட்டுப் பகுதியில் யாரோ/எதுவோ துரத்துவதாக பயந்து மிதிவண்டியைப் போட்டு விட்டு ஓடி விடுகிறான். சோளக்காட்டிற்குள் அம்புலி உள்ளது என அமுதனையும், வேந்தனையும் எச்சரிக்கிறார் வேதகிரி. அந்த எச்சரிக்கை அவர்களுக்குள் ஆர்வத்தினைத் தூண்ட அம்புலியைப் பற்றிய ஆராய்ச்சியில் முனைப்புடன் இறங்குகின்றனர்.
சர் ஆர்தர் வெலிங்டன் என்னும் பாத்திரத்தில் வெள்ளைக்காரர் ஒருவர் வருகிறார். படத்தின் தொடக்கமே அவரில் இருந்து தான். படத்தில் அந்த முதல் 10 நிமிட நேரம் முப்பரிமாணத்தின் அற்புதமான வீச்சை உணரலாம். ஒளி, ஒலிப்பதிவுகளும் படத்தொகுப்பு பிரமிப்பூட்டுகிறது. சர் ஆர்தர் வெலிங்டன் இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர் படையில் பணிப் புரிந்த இராணுவ விஞ்ஞானி. 1954 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் ஒரு கல்லூரியை நிறுவுகிறார். 1958 ஆம் ஆண்டு ‘நியண்டர்தால்’ மனிதரின் மரபணுவை, மாடந்தி்புரத்தைச் சேர்ந்த கர்ப்பிணியான பொன்னி என்னும் கைம்பெண்ணிற்கு செலுத்துகிறார். சூரியக் கிரகணத்தின் பொழுது வெளியில் வரும் பொன்னிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. சூரியக் கிரகணப் பாதிப்பால் தான் அம்புலி பிறந்தான் என்று ஊர் மக்களும், நியண்டர்தால் மனிதரின் மரபணு தான் காரணமென சர் ஆர்தர் வெலிங்டனும் நம்புகின்றனர். தமிழ்த் திரைப்படங்களில் மூதாதையரின் மரபணுக்களின் வரவுகள் (ஏழாம் அறிவு) தொடர் கதை ஆகாமல் இருந்தால் சரி தான். நமது கண்களுக்கு பெரும்பாலான வெள்ளைக்காரர் ஒரே அச்சில் வார்த்தாற் போல் தெரிவார்கள். அப்படித் தான் இருவேறு வெள்ளைக்காரர்கள் படத்தின் முதல் நிமிடங்களில் ஒருவரும், பிற்பகுதியின் மையத்தில் இன்னொருவரும் என சர் ஆர்தர் வெலிங்டன் ஆக நடித்துள்ளனர்.
‘பாவம், புண்ணியம், சாபம் எல்லாம் பொய்’ என்று சொல்லும் கருப்புச் சட்டைக்காரர் மருதன் ஆக ஜெகன். அம்புலியை நேரில் பார்க்காத வரை நம்பாமல் அதை கற்பனை என அடித்து வாதிடும் பகுத்தறிவாளர். பசி வந்தால் பத்தும் பறந்துடும் என்பது போல் பகுத்தறிவை பயம் வெல்கிறது. அம்புலியை ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்துக் கொன்றால் தான் ஆச்சு என்கிறார் ஜெகன். ஆனால் மக்களோ அம்புலியை அழிக்க கூட்டுப் பிரார்த்தனை தான் சரி என்று பாட தொடங்கி விடுகின்றனர். படத்தில் பொருந்தாமல் உறுத்துவது அதில் இடம் பெறும் இரண்டுப் பாடல்கள் மட்டுமே.
சின்னி ஜெயந்த்தை ஞாபகப்படுத்துவது போல் பாஸ்கி கல்லூரி மாணவராக வருகிறார். அவர் முதலாளி ஆக இருக்கும் ரைஸ் மில்லின் பெயர் தயாரிப்பாளர் பெயரான கே.டி.வி.ஆர். என்றே உள்ளது. அமுதனாக அஜய், வேந்தனாக ஸ்ரீஜித், பூங்காவனமாக சனம் என மூவருமே அறிமுகங்கள். ஜோதிர்ஷா என்பவர் ஸ்ரீஜித்திற்கு இணையாக நடித்துள்ளார். ‘குல தெய்வத்திற்கு கூழ் ஊத்துங்கடா’ என பயத்தில் குடித்து விட்டு புலம்பும் வேதகிரி ஆக தம்பி இராமைய்யா நடித்துள்ளார். பொன்னியாக உமா ரியாஸ்கான் நடித்துள்ளார். சீமாட்டிப்பாட்டி ஆக கலைராணி நடித்துள்ளார். பார்த்திபன் படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். சோளக்காட்டுப் பகுதிக்குள் அவரை மட்டும் அம்புலி எதுவும் செய்யாதது ஏனென்று தெரியவில்லை. சோளக்காட்டுப் பகுதியைக் கொளுத்தி இருக்கலாமே என்று திரையரங்கில் சிலர் கேள்வி எழுப்புவதை கேட்க முடிகிறது. வெள்ளந்தித்தரை என்னும் பூவை கையில் எடுத்துச் சென்றால் மனித வாசம் அம்புலிக்குத் தெரியாது என மக்கள் நம்புகின்றனர். மாடந்திபுரத்தில் இருந்து வெளியேறிக் குடியேறும் புது இடத்திற்கு பூமாடந்திபுரம் என பெயரிட்டு, ஊர் முழுவதும் அனைத்து வீட்டிலும் அப்பூவை வளர்க்கின்றனர். ஆதி காலம் தொட்டு தமிழ்ப் படத்தினை காவல்துறையினர் தான் முடித்து வைப்பார்கள். ஆனால் இப்படத்தில் இராணுவமே வருகிறது. தலைப்பைத் தொடர்ந்து கலைஞர்களின் பெயர் போடும் பொழுதே, அம்புலியின் வாழ்க்கையைக் குறித்து நிழல் அசைவுகளாக உணர்த்துகின்றனர். ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயணன் என இரண்டு இயக்குனர்கள். ஐவர் இசை அமைத்துள்ளனர். ஆனால் தமிழின் முதல் முப்பரிமாணப் படத்தை ஒளிப்பதிவு செய்த சதீஷ் தான் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து தமிழில் மேலும் சில முப்பரிமாண முயற்சிகள் வரும் என்று நம்பலாம். முனி போல் அம்புலியும் இரண்டாம் பாகமாக வருமென தெரிகிறது.