தல அஜித்தின் தீவர ரசிகரான ராம்குமார், “நான் தல அஜித்தின் உண்மையான விசுவாசி; வெறி பிடித்த ரசிகன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எந்தவித பின்பலமுமின்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அவரைத்தான் என்னுடைய முன்மாதிரியாக பார்க்கிறேன்!” என்று நெஞ்சம் மகிழ்கிறார்.
ராம்குமார் தனது ‘அர்த்தநாரி’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார். சராசரி சென்னை இளைஞர்களைப் போல இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் ராம்குமார். எனினும், நடிப்பின் மேல் இவர் கொண்ட காதல், இவரை சில விளம்பரப் படங்களில் நடிக்க வைத்தது. “நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அந்த வேலையில் நான் முழு மனத்திருப்தி அடையவில்லை. எனக்குள் இருந்த அந்த ஒரே தேடல் நடிப்பை நோக்கிப் பயணித்ததுதான். அப்போது தான் சில விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். அப்படி நான் நடித்து, திரையரங்கங்களில் திரையிடப்பட்ட ஒரு விளம்பரப் படம் மூலமாகத்தான் எனக்கு அர்த்தநாரி படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிட்டியது” என்கிறார் ராம்குமார்.
மேலும், “அர்த்தநாரி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு இந்தப் படத்தின் கதையும் கண்டிப்பாக வலிமை உள்ளதாக இருக்கும். முற்றிலும் வித்தியாசமான இந்தக் கதை அம்சத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புத் தந்த இயக்குநர் சுந்தர இளங்கோவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் முதற்படத்திலேயே அனுபவமிக்க நாசர் சாருடன் இணைந்து நடித்ததில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. நான் கடவுள் ராஜேந்திரன் உண்மையாகவே ஓர் எளிமையான மனிதர். படப்பிடிப்பில் அவருடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. என்னுடன் இணைந்து நடிக்கும் அருந்ததி தனது கதாப்பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது” என்றார்.