Search

அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Alex pandiyan

 

கவர் பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர்,
கிடந்து உழல அகப்பட்டீரே !
 – பட்டினத்தார்.

 

பணம் கொடுத்து இப்படத்தினை திரையரங்கில் பார்ப்பவரின் மனநிலையை தான் என்ன அழகாக பட்டினத்தார் சொற்களால் படம் பிடித்துக் காட்டுகிறார். போருக்குச் செல்பவர், நோயில் வீழ்ந்தவர், சகிக்க முடியாத துன்பத்தில் சிக்கியவர், தனிமையில் வாடும் முதியவர்கள் தான் தத்துவ விசாரத்தில் இறங்குவர். அப்படி ஒரு மனநிலைக்கு இப்படம் இட்டுச் செல்கிறது. விதி பற்றிய நம்பிக்கையும், போன பிறவியில் ஏதாவது பாவம் செய்திருப்போமோ என்ற கேள்வியும் ஒருங்கே மனதில் எழுகிறது.

 

நாயகனே முதல்வர் பெண்ணைக் கடத்தி விட்டு, பின் வில்லனிடமிருந்து நாயகியை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.

நாயகன் கார்த்தியின் அடி ஒவ்வொன்றும் சும்மா இடி போல விழுகிறது. யார் மீது? வில்லனின் அடியாட்கள் மீது தான். படம் பார்ப்பவர்கள் மீது விழுந்தது எனக் கொண்டாலும் பாதகமில்லை. எத்தனை பேர் வந்தாலும் அடிக்கும் பையா படத்து கார்த்தியை மீண்டும் இப்படத்தில் காண முடிகிறது. நாயகியாக அனுஷ்கா. கடத்தியவர் மீதே காதல் கொள்ளும் ‘ஸ்டாக்ஹோம் சின்ட்ரோமி’னால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வருகிறார். குருபோகர் சித்தவைத்திய மருத்துவமனையில் அதற்காக சிகிச்சையும் பெறுகிறார். நல்லவேளையாக நோய் குணமாகும் முன் வில்லன் நாயகியைக் கண்டுபிடித்து விடுவதால் ஒரு நல்ல காதல் (@#$%) கருகாமல் தப்புகிறது.

 

மொக்கை படங்களின் ஆபத்பாந்தவனாய் ரட்சித்து வந்த சந்தானமும் கை விரித்து விட்டார் என்பது தான் படத்தின் பெரும் சாபம். ‘காய்ந்து போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ந்து விட்டால்?’ என்று தான் சந்தானத்தைப் பார்த்துக் கேட்க தோன்றுகிறது. நாயகனைக் கலாய்க்கும் வேளையில் இருந்து..  நிகிதா, அகன்ஷா பூரி, சனுஷா என மூன்று பெண்களுக்கு அண்ணனாக ப்ரோமோஷன் ஆகியுள்ளார் சந்தானம். அதனாலேயே எப்பொழுதும் போல் சோபிக்க முடியாமல் கழுத்தறுக்கிறார். “பொண்ணும் பொறி உருண்டையும் ஒன்னு; நமத்துப் போகும் முன் இன்னொருத்தவங்ககிட்ட கொடுத்துடணும்”, “தங்கச்சி இருக்கிற அண்ணன்லாம் ஆந்தை மாதிரி இரவில் விழித்திருக்கணும்” என்ற வசனமெல்லாம் பெண்ணைச் சொத்தாக மதிக்கும் ஆணாதிக்க அபத்தத்தின் உச்சம். நகைச்சுவை என்ற பெயரில் வரும் இரட்டை அர்த்த வசனங்கள், தனது தாயையும் கார்த்தியையும் சந்தேகக் கண்களோடு சந்தானம் பார்ப்பது, குடும்பமே கார்த்திக்கு எண்ணெய் தேய்த்து விடுவதென கொலை வெறியோடு காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர். இதை எல்லாவற்றையும் மீறி சந்தானம் ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் கவர்ந்து விடுகிறார்.

 

நாயகனுக்குள் எழும் பொறாமையை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். எவ்ளோ அடித்தாலும் தாங்கிக் கொண்டு திருப்பித் தாக்கும் அசகாய சூரர் கார்த்தி. ஆனால் அவரை விடவும் கீர்த்தி மிக்கதாய் உள்ளது சந்தானம் புதிதாய் வாங்கும் வெள்ளை நிற மாருதி ஆம்னி வேன். டாடா சுமோ, மகிந்திரா ஸ்கார்பியோ, டயோட்டா க்வாலிஸ் என அனைத்து வண்டிக்கும் கடுக்காய் தருகிறது அந்த மாருதி ஆம்னி. உதாரணத்திற்கு ஆம்னியின் கதவை வேகமாக திறந்தவுடன்.. அதில் வந்து மோதும் இரண்டு வண்டிகள் அப்படியே பறந்து கவிழ்கிறது. ஆம்னி வேனின் கதவிற்கு இவ்வளவு வலிமையா என்று அதிசயிப்பவர்களுக்கு தமிழ்ப் பாடல் ஒன்றில் கையாளப்படும் உவமையினை ஞாபகப்படுத்துகிறேன். ஒரு மாதத்தில் மூன்று தேர்கள் செய்யும் ஒருவர்.. ஆறு மாதம் முயன்று ஒரே ஒரு தேர்ச் சக்கரத்தினை செய்தால் அதன் வலிமை அளப்பரியதாய் இருக்கும். அப்படி யாரோ ஒரு மாருதி கம்பெனி ஊழியர் பார்த்துப் பார்த்து வலிமையேற்றிய அந்த ஆம்னி வேனை பொறாமையால் வெடி வைத்துச் சிதற வைத்து விடுகிறார் கார்த்தி. இந்த கதாநாயகர்களே இப்படித் தான்.

 

வருங்கால சந்ததியினை அழிக்கும் வல்லமை கொண்ட மருந்தினை தமிழ்நாட்டில் விற்க முயல்கிறார் வில்லன் மிலந் சோமன் (சேம் பிராப்ளம் கார்த்தி’ஸ் பிரதர் சூர்யா டீல் இன் மாற்றான் என்பது குறிப்பிடத்தக்கது). அதற்குத் துணையாக சுமன். முதல்வரின் மகளைக் கடத்தி, அவரை ஒரே ஒரு முறை மிரட்டித் தொடர்ந்து பல மாதங்கள் மருந்தினை விற்கத் திட்டம் தீட்டுகிறார் வில்லன். அப்ப மருந்தினை விற்க மாதா மாதம் முதல்வரின் மகளைக் கடத்துவார்களா அல்லது மகளை ஒப்படைக்கும் பொழுது இனிமேல் எப்பவும் மருந்து விற்க தடை சொல்லக் கூடாதென முதல்வரிடம் சத்தியம் வாங்கிக் கொள்வார்களோ என்னமோ? (ஏனெனில் முதல்வராக வரும் விசு சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவராக தானிருக்க வேண்டும்). என்ன லாஜிக் என்றே புரியவில்லை!? லாஜிக் ஓட்டைகளைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அஸ்திவாரமே  பலவீனமாய் உள்ளதே!!

 

சரவணன், மனோபாலா, பிரதாப் போத்தன் என நிறைய பேர் உள்ளனர் படத்தில். அவர்கள் இல்லாமலும் படத்தின் கதைக்கு(!?) எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனா படத்தின் நீளத்தைக் கூட்டுவதற்கும் படம் பார்ப்பவர்களின் கழுத்தை அறுப்பதற்கும் இவர்களையும் சேர்த்து கொள்கிறார் இயக்குநர் சுராஜ். “நீ உயிரோட இருந்தா தான?” என கேட்டு விட்டு கார்த்தியைச் சுடாமல் அவர் தலையில் ‘நங்’கென்று துப்பாக்கியால் அடிக்க மட்டும் செய்கின்றனர். ஆனால் அதே வில்லன் தனது ஆளையே எதிர்மறையான செய்தி சொன்னதற்கு யோசிக்காமல் டொப்பென்று சுடுகிறார். காலங்காலமாக தமிழ்ப் படங்களில் வில்லன்களை முட்டாளாகவே சித்தரித்து வருவது துரதிர்ஷ்டவசமானது.Leave a Reply