நீ அனுப்பிய
குறுஞ்செய்தியெல்லாம்
சேமித்து வைக்கப்படுகிறது
என்குட்டி அலைபேசியில்
நீ கடைசியாக பேசிய
வார்த்தை இன்னும்
ஒலித்துக்கொண்டிருக்கிறது
என் காதினுள்
எவ்வளவு வெப்பம்
நாமிருவரும் பேசுவதால்
செல்லமாய் சுடுகிறது
உன் கோவத்தைப்போல
முத்தம் கொடுத்தே
நம்முடைய
கைபேசி கரைந்துபோகிறது
நான் எவ்வளவு தூரத்திலிருந்தாலும்
நீ கூப்பிடும்பொழுது மட்டும்
அழைகிறதென்னை
உனக்கு பிடித்த பாடலுடன்
இரவுகள் நீளக்கூடாதா
இப்படி சீக்கிரம் முடிந்துபோகிறதே
நம் பேச்சைக்கேட்டு பொறாமையில் தேய்கிறது
இருட்டென்னும் இரவு
நிலாவை பார்த்துக்கொண்டே
உன்னுடன் பேசுவது
நீரினுளிருந்து கொண்டே
பனிக்கட்டி கரைப்பதுபோல்
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு
உன்னுடன் பேசுகிறேன்
உன் வார்த்தைப்போலவே எல்லாம் மின்னுகிறது
அழகாய் சிரிக்கிறது என்னைப் பார்த்து
என் கண்களில் இப்பொழுது
உன் வார்த்தையை
சேகரித்து வைத்திருக்கிறேன்
அங்கு நீ
சிந்திய புன்னகை
இங்கு என்னை நோக்கி
வந்து விழுகிறது
மின்மினிப் பூச்சியாய்
முந்தகூவியை
எடுக்கும் பொழுதெல்லாம்
முந்திசெல்கிறது
உன்னை அழைக்க
எனது விரல்
இதுவரையில்
எத்தனை வார்த்தைகள் பேசியிருப்போம்
எல்லா வார்த்தைகளையும்
நம் காதல் அகராதியில்
பதிவேற்றி வருகிறேன்
அர்த்தங்கள் அழகாய் இருக்கிறதாம்
பார்க்கும் என்காதுகள் சொல்கிறது
கேட்கும் எங்கள் கண்கள் லயிக்கிறது
உதடுகள் புரட்டி பார்த்துக்கொண்டே
இருக்கிறது
– சே.ராஜப்ரியன்