ஹிஹி.. என்னத்த சொல்ல? புனைவுன்னு வேணுமின்னா வச்சுக்கலாம்.
காந்தி சொன்ன மாதிரி இரவுல தனியா பொண்ணுங்க நடந்து போய் அறுபத்து நாலு வருஷத்துக்கு முன்ன சுதந்திரம் வாங்குனது உண்ம தான்னு நிருபிச்சுடுவாங்க போல. ஆனா பசங்களால தான் பகல்ல கூட தைரியமா நடமாட முடியாது போல. ஒவ்வொரு தெரு முக்குக்கும் வெள்ளச் சட்ட போட்ட பணம் பிடுங்கி பூச்சாண்டி ‘லிஃப்ட்’ கேக்குற மாதிரியே கைய காட்டி உசுர வாங்குறாங்க.
ஹெல்மட் போடாமல் போய் அவர்களிடம் சிக்கினால்.. எங்கப்பா காசை நான் வீணா செலவழிச்சு கெட்டுப் போறேன்னு எம்மேல இருக்கிற அக்கறையில் காசைப் பிடுங்கி வச்சுக்கிறாங்க. மாமாக்கு தான் என் மேல எவ்ளோ அக்கறை!? நான் ப்ரென்ட்ச எல்லாம் மாமான்னு தான்னு கூப்பிடுவேன். நீங்க பாஸூ!? அதான் ‘போலீஸ் உங்கள் நண்பன்’னு விவேக் ஏதோ படத்துல சொல்வாரே!! அத பாத்ததில் இருந்து தான்.
எல்லா டாக்குமென்ட்சும் சரியா இருந்தா, “தம்பி ஏன் ஹெல்மட் போடல? கேஸ் போடாவா!? கோர்ட்டுக்கு போனா 1000/2000 (வாயில எது வருதோ அது!!) ஆகும்” என்று நம்மள பாக்காமலே சொல்வாரு. அலட்சியம்னு நீங்க தப்பா நினைச்சிடக் கூடாது. கடமையில அவ்ளோ கருத்தா இருப்பாப்ல. அடுத்த வண்டிக்காரன எட்டி போய், கையைக் காட்டி நிறுத்துவாரு. சட்டத்திற்கு தான் நீண்ட கை ஆச்சே!! அந்த வண்டிக்கிட்ட போயிடுவாரு. நம்மள கண்டுக்க மாட்டாரு. மாமாக்கு திமிர்னு நினைச்சிடப் படாது. அவ்ளோ பிசி வேலையில. நம்ம கை பாக்கெட்டுக்கு போவுதுன்னா ஓரக் கண்ணால பார்ப்பாரு. பாக்கெட்டுக்கு கை போச்சுன்னா நம்மப் பக்கமா வருவாரு. ஆனா நம்மக்கிட்ட வர மாட்டாரு. நாம தான் போணும்.
அவர்கிட்ட போனா, “என்னக் கோர்ட்டுக்கு போறியா!?” ன்னு கேப்பாரு.
“சார்ர்.”
“எவ்ளோ இருக்கு?”
“நூறு.”
“எதுக்கு இது!?”
‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’னு வள்ளுவம் காட்டுற வழியில வாழுறவரா இருப்பார் போல!! கொள்கையோட வாழுறவர கஷ்டப்பட வைக்கலாமா? அல்ல கஷ்டப்பட வைக்க தான் முடியுமா? இன்னொரு நூற சேர்த்து அழுதுட்டு வரணும். என்சாய் மாமூ. ஆனா அவருக்கு நின்னு வாங்க நேரம் இருக்காது. அதுக்குள்ள ஒரு தாத்தா சிக்கிட்டாரு. அவர் ப்ரேக் பிடிச்சும் சில அடி தள்ளி தான் போய் வண்டி நிக்குது. தாத்தா பொறுப்பா ஒவ்வொரு பேப்பரா காட்டுவாரு. ஆனா ஒன்னு. உசுருக்கு பயப்படாம ட்ராஃபிக் நடுவுல பூந்து ஹெல்மெட் இல்லாத ஒருத்தவனா மட்டும் சரியா.. அன்னப் பறவ பாலுல இருந்து தண்ணிய பிரிக்கிறாப்ல பிரிச்சு எடுப்பாரு. ம்ம்.. கண்ணுல விளக்கெண்ண விட்ட போலீசுன்னு என் ப்ரென்ட் பெருமையா இவங்கள பத்தி சொல்வான்.
முடிலாம் நரைச்சி சீனியர் சிட்டிசனா இருந்தா ஒரு கெத்து தான் பாஸ்.
“ஐ ஹாவ் ஷோன் ஆல் டாக்குமென்ட்ஸ். வை ஷுட் ஐ வெயிட்!?”
இங்கிலீஷூ!!
கொய்யாலே.. யாருகிட்ட.
அப்படிலாம் சும்மா விட்ற முடியாது சீனியர் சிட்டிசன். மாமாக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தான் முக்கியம்.
‘பணியுமாம் என்றும் பெருமை’னு வள்ளுவர் சொல்லி இருக்கார்ல. சாந்தமே முகத்திற்கு வான்னு சாஃப்ட்டான குரலுல, “பார்க்க பெரியவரா இருக்கிறீங்க. நீங்களே இப்படிப் பண்ணலாமா!? இளந்தாரி பையனா இருந்தா கண்டிக்கலாம். நீங்களே சொல்லுங்க சார். ம்ம்.. சிக்னல் விழறதுக்கு முன்னாடி லெஃப்ட்ல திரும்பிட்டீங்க”ன்னுவார். சிக்னல் பக்கத்தில் நிக்கிற மாமாக்கு இதுல ஒரு செளகரியம். நிறைய பேர் வந்து மாமாட்ட சிக்கிக்குவாங்க.
“ஆக்சுவலி.. இட் வாஸ் க்ரீன் ஒன்லி.”
மாமா எப்படிப் பண்புள்ளவரா தமிழ்ல நிதானமா பேசுனாரு. அதிகாரத்துக்கு முன்னாடி ஒரு மட்டு மரியாதை வேணாம்.. இங்கிலீஷ்லயே நிக்குறாரு ராஸ்கல் பெருசு. ஆனா மாமா மரியாதை தெரிஞ்சவர்.
“சார். நான் தான் பார்த்தேனே!! சரி கேஸ் போட்டு்க்கவா? கோர்ட்டுல ஃபைன் கட்டிக்கிறீங்களா!? சரி சார்.. அம்பது ரூபா தந்துட்டு கிளம்புங்க” என்றார் மாமா. பெரியவர் கொஞ்சம் யோசிக்க, “எல்லாம் 50 ரூவா தாராளமா தரலாம். இன்னொரு சார் வேற இருக்கார் பாருங்க” என்று பவ்யமாக சொன்னாரு மாமா.
இதெல்லாம் ஓர வஞ்சன மாமா. எனக்கொரு நியாயம் வயசான பீட்டருக்கு ஒரு நியாயமா!? ம்ம்.. இங்கிலீஷூக்கு அவ்ளோ மரியாத!? யாரா இருந்தாலும் சரண்டர் பண்ண வச்சுடும் போல!!
ஐய்யா.. எங்கிட்ட வர்றாரு.
200 ரூபாய ரகசியமா தரப் பாக்குறேன்.
“என்ன இது 200 ரூவா!?”
இதுக்குமா மாமா ஷாக்கு? இதுவே அதிகம் இல்ல உங்களுக்கு. அதுவும் மூடி இருக்கிற கையில 200ன்னு எப்படித் தெரிஞ்சுது?? சும்மாவா சொன்னாங்க.. Experience makes man perfectன்னு. (அது practice தானன்னு சொல்லாதீங்க. வாய்லயே நல்லா வருது. ப்ராக்ட்டிஸ் பண்ணி பண்ணி தான் எக்ஸ்ப்ரியன்ஸ் வந்திருக்கு அவருக்கு).
அப்புறம் 300/- தெண்டமா கொடுத்துட்டுப் போனேன். எவ்வளவு நேரம் தான் பணத்தை ஏமாந்ததை வலிக்காத மாதிரியே சொல்றது.
ம்ம்..
முன்ன எப்போதையும் விட இப்ப ரொம்ப அநியாயம் நடக்குது. அதி தீவிரமாக வசூல் பண்றாங்க. ஒவ்வொரு சிக்னலிலும் நாலு போலீஸ்காரங்க இருக்காங்க. காக்கா கூட்டத்தைப் பார்த்து பகிர்ந்துண்ண கத்துட்டு இருப்பாங்க போல. நான்குப் பேரையும் மகிழ்விக்கணும்னு(!?) எதிர்பார்க்குறாங்க. அதுவும் இந்த ‘ஸ்பாட் ஃபைன்’னு ஒன்னு வந்தாலும் வந்துச்சு. முன்னூறு ரூபாய் பணம் வாங்கிட்டு, கையில் இருக்கிற மெஷின்ல என்னமோ தட்டி 50/- ன்னு ரெசிப்ட் தர்றாங்க. அதுவும் அந்த ரெசிப்ட் தந்தா தான் போச்சு.
முதல் வரியில் இந்தப் பதிவை ‘புனைவு’ன்னா சொன்னேன்!? அப்ப தப்பா சொல்லியிருக்கேன்னு அர்த்தம். வயித்தெரிச்சல்னு வச்சுக்கலாம். யாரோ ஒருத்தருக்கு பணம் போய் இப்படி அநியாயமா கூவியுதேன்னு. நான் டூ-வீலர் ஓட்டுபவர்களின் தவுறுகளை நியாயப்படுத்தல. ஏதோ ஞாபகத்துல ஹெல்மட் இல்லாம போனீங்கன்னா (இல்ல வேணும்னே போனா கூட).. ட்ராஃபிக் போலீசிடம், “கேஸ் போட்டுக்கோங்க சார்”ன்னு சொல்லிடுங்க. கோர்ட்டில் உங்கள கொலைப் பண்ணிட மாட்டாங்க. 1000 ரூபாய் என தாளிச்சு எடுத்திட மாட்டாங்க. ஃபைன் கட்டிட்டு வந்துடுங்க. ஒரு தடவ நியாயமான ஃபைன் கட்டிட்டா மனதில் ஒழுங்கா இருக்கணும்னு எண்ணம் வரும். அதை விட்டுட்டு ஏன் ட்ராஃபிக் போலீசிடம் சும்மா தந்துக்கிட்டு? அவங்க தர தர வாங்கிட்டே இருப்பாங்க பாஸ். நீங்களும் ஏதோ ஆபத்தில் இருந்து தப்பிக்கிறாப்ல பணம் தந்துடுறீங்க!!
ஏன்!?
இது சென்னைப் போக்குவரத்து காவல்துறையின் தளம்.
SPOT FINE – http://www.chennaitrafficpolice.in/spotFine.php
COURT FINE – http://www.chennaitrafficpolice.in/courtFine.php
ஹெல்மட் போடாம போவதற்கு ஸ்பாட் ஃபைன் கிடையாது. கோர்ட்ல தான் ஃபைன் கட்டணும். (அதுவும் போலீஸ் அறிவுரை சொல்லி அனுப்பிடும்னு பேப்பர்ல எல்லாம் போட்டிருந்தாங்க. ஆனா திடீர்னு ஹெல்மட் கட்டாயம் ஆனது போல் வேட்டை நடக்குது).
பணம் பாஸ் பணம். சும்மா வரல!? ஆயிரம், இரண்டாயிரம் எனும் பூச்சாண்டிக்கு எல்லாம் செவி சாய்க்காதீங்க. ஒன்னு சகல ஆவணங்களுடன் பக்காவா போங்க இல்ல சரியான ஃபைன் மட்டுமாவது கட்டுங்க. அன்னா ஹசாரேலாம் வந்து லஞ்சம் கேட்கிற ட்ராஃபிக் போலீசைக் கேள்வி கேட்க மாட்டாரு. நாம தான் கேட்கணும். அப்படியே அன்னா ஹசாரே வந்து கேட்டாலும், அவர் என்னக் கேட்டாருன்னு மாமாக்கு புரியாது.. மாமா பேசுறது அன்னா ஹசாரேக்கு புரியாது.
ஆனா நீங்க கேட்டா புரியும். முடிஞ்சா இன்ஷ்யூரன்ஸ் பேப்பரோட.. ஃபைன் பற்றிய ப்ரின்ட் அவுட்டும் சேர்த்து எடுத்துக்கோங்க. பேப்பர ஆட்டி ஆட்டி கேள்வி கேளுங்க. (முடிஞ்சா இங்கிலீஷ் பேசுங்க.. இல்லைன்னா தூயத் தமிழ்ல இறங்கிடுங்க. தூயத் தமிழ் இங்கிலீஷ்காரனுக்கே சரியா தெரியாதான்னா பார்த்துக்கோங்களேன்).
பி.கு.: ஏ.டி.எம்.க்கும், ட்ராஃபிக் கான்ஸ்டபிளுக்கும் என்ன சம்பந்தம்?
ஏ.டி.எம்.ல நாம வண்டிய நிறுத்திட்டு பணம் எடுப்போம். ட்ராஃபிக் கான்ஸ்டபிள் நம்ம வண்டிய நிறுத்தி பணம் பிடுங்குவாரு.